ஞாயிறு, 4 மார்ச், 2012

வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு குறித்து விசாரணை ....

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து திட்டங்களிலும் உருவாக்கப்படும் வீடுகள், மனைகளில் 15 சதவீதம் அரசின் விருப்புரிமைக் கீழ் ஒதுக்கப்படும்.சமுதாயத்தில், மற்றவர்களுடன் பொதுப்பிரிவில் போட்டிபோட்டு, ஒதுக்கீடு பெற முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக, இந்த ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில், 10 சதவீதமாக இருந்த இந்த ஒதுக்கீட்டு அளவு பின்னர், 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், சமூக சேவகர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்கள், பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற வகையில், சிறப்பான பணி புரிந்தவர்களுக்கு அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, முதல்வரின் பரிந்துரை அடிப்படையில் இந்த பிரிவில் வீடு, மனை ஒதுக்கப்படும்.கடந்த 2006ல் தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வந்ததும், அரசின் விருப்புரிமையின் கீழ் வீடு, மனை ஒதுக்கீடு செய்வது மீண்டும் அதிகரித்தது. முந்தைய காலங்களில் இருந்ததைவிட, இந்த காலத்தில் அதிக எண்ணிக்கையில் வீடு, மனைகள் அரசின் விருப்புரிமையின் கீழ் ஒதுக்கப்பட்டன.இதில் ஏராளமான ஒதுக்கீடுகள் தி.மு.க.,வினருக்கும், அந்த கட்சித் தலைவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும், இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டன.இது தொடர்பாக, பல்வேறு சமூக ஆர்வலர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டனர். இதன்படி, வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் பெறப்பட்டன.இவ்வாறு பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், 2006-11ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 2,400 பேருக்கு அரசின் விருப்புரிமையின் கீழ் வீடு, மனை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள விவரம் தெரியவந்துள்ளது.இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி முதல், அறிவாலயத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த நபர் வரையும், கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த முன்னாள் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ஜாபர்சேட் முதல் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் வரை என, அதிகார மையத்துக்கு வேண்டியவர்கள் என வகைப்படுத்தப்படும் பலருக்கும் வீட்டுவசதி வாரிய வீடு, மனைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.இவர்களுக்கு அடுத்தபடியாக, ஏராளமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், முதல்வர் குடும்பத்துடன் தங்களுக்கு இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி வீடு, மனை ஒதுக்கீடுகளை பெற்றுள்ளனர்.கடந்தாண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க., அரசு பெறுப்பேற்றதும், இந்த முறைகேடுகள் குறித்த புகார்கள் அரசுக்கு குவியத்துவங்கின.இந்த புகார்களில் இதுவரை ஜாபர்சேட், அவருடன் ஒதுக்கீடுகள் பெற்று அதை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் என, இதுவரை ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அரசின் விசாரணை நடவடிக்கைகள் இத்துடன் நின்றுவிடாமல், 2,400 ஒதுக்கீடுகளில் மீதம் உள்ள மற்ற ஒதுக்கீடுகள் குறித்தும், அதை பெற்றவர்களின் தகுதி குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.