ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

வாரிசு அரசியலுக்கு....


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'இந்திரா காந்தியின் வாரிசு அரசியலுக்கு வரலாம்... என் மகன் அரசியலுக்கு வரக் கூடாதா? என்.டி.ஆர் பேரன் நடிக்கலாம், என் பேரன் நடிக்கக் கூடாதா?' - தங்களது குடும்பத்தைப்  பற்றி யாராவது விமர்சனம் செய்தால், இப்படிப் பேசி வாரிசு அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், ''உங்களுக்கு அடுத்து ஸ்டாலின்தான் கட்சித் தலைவரா?'' என்று கேட்டால், ''திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல...'' என்று சொல்வார். அதாவது, கேள்வி கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அவரது பதில்கள் அமையும்! 

 'கட்சித் தலைவருக்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை’ என தி.மு.க-வின் அமைச்சர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வாரிசு அரசியலை வளர்க்கிறார்கள். காலம் காலமாகக் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் அடிமட்டத்திலேயே கிடக்க... வாரிசு என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக்கொண்டு, கட்சியில் பதவிக்கு வந்து 'சரசர’வென உச்சத்தைத் தொட்டுவிடப் பலரும் துடிக்கிறார்கள். கழகக் குடும்பங்களின் கதை இதோ...!

மருமகன் மட்டும் போதாது!

சுகாதாரத் துறை அமைச்சரும், கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொடக்க காலத்தில் இருந்து தன் அக்காள் மகன் செந்தில்​குமாரைத் தன் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார். 'மருமகன் மட்டும் போதாது’ என நினைத்த பன்னீர்செல்வம், தற்போது தனது 21 வயது மகனான கதிரவனை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு புதிய வாரிசாக வளர்த்து வருகிறார். 'கட்சி போஸ்டர்கள், பேனர்களில் கதிரவனின் படம் மெகா சைஸில் இடம் பெற வேண்டும்’ என்பது எம்.ஆர்.கே-வின் தற்போதைய வாய்மொழி உத்தரவு.  'நாளைய கடலூர் மாவட்டமே’, '2016-ல் தமிழக விடிவெள்ளியே...’ என்றெல்லாம் கதிரவனை வாழ்த்தும் பேனர்கள், கடலூர் மாவட்டம் முழுக்க பளபளக்கிறது!

சிகாமணி அண்டு கோ!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்​முடியின் மகன் கவுதம் சிகாமணி தளபதி நற்பணி மன்றத்தின் தலைவர். அப்பா நடத்தும் சூர்யா பொறி​யியல் கல்லூரியின் தாளாளரும் இவரே. கட்சி விழாக்கள், அரசு விழாக்களில் தனது ஆதரவாளர்களுடன் ஆஜராகி​விடுவார் கவுதம். 'தளபதியின் தளபதியே’, 'உயர் கல்வியின் வாரிசே...’ என்றெல்லாம் இவரது ஆதரவாளர்கள் முழங்குவார்கள். இப்போதெல்லாம் விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வினர் அடிக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும் பொன்முடி, பொன்முடியின் மனைவி, கவுதம் சிகாமணி, அவர் மனைவி, குழந்தைகள், பொன்முடியின் தம்பிகளான அந்த சிகாமணி, இந்த சிகாமணி என்ற 'சிகாமணி வகையறா’க்களின் படங்கள் கட்டாயம் இடம் பெறுகின்றன. பொன்முடி, வரும் தேர்தலில் விழுப்புரம் தொகுதியை மகனுக்கு விட்டுக் கொடுத்து,  தொகுதியையே மாற்றிக் கொள்ளக்கூடும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது!

'கம்பன் எங்கே போனான்?'

விழுப்புரத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் நடந்து திருவண்ணாமலைக்கு வந்தால்... அமைச்சர் தண்டராம்பட்டு எ.வ.வேலு அமைத்த கல்வி வளாகங்களைக் கவனித்து வருகிறார் அவரது மகன் கம்பன். அதை மட்டும் பார்த்தால் போதுமா? தனக்குப் பின்னால் மாவட்டக் கழகம் இவரது கைக்குத்தான் போக வேண்டும் என்று வேலுவும் விரும்புகிறாராம். கட்சிக்காரர்கள் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம், 'கம்பன் எங்க போயிட்டான். அவனை வரச் சொல்லுங்க...’ என கூப்பிட்டு பக்கத்தில் வைத்துக்கொள்வாராம் வேலு. கம்பன் பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு கலைக் கல்லூரியின் இயக்குநரான கம்பன், இப்போதெல்லாம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கிறார். விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்று நடுதல் என்று கட்சியில் வேரூன்றி வருகிறார்!

கில்லாடி தம்பி!

அமைச்சர் துரைமுருகனின் அரசியல் வாரிசாக அவரது தம்பி துரைசிங்காரம் வளர்ந்துகொண்டு இருக்கிறார். மாவட்டம் முழுவதும் தொண்டர்களால் நன்கு அறியப்பட்ட சிங்காரம், மேல்மட்ட அரசியல் செய்வது, தன் அண்ணன் கலந்துகொள்ள முடியாத தொகுதி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது போன்றவற்றைச் செய்கிறார்.  அதே சமயம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் தற்போது அரசியலை ஏக்கமாகப் பார்த்து வருகிறார். 'தம்பியா... மகனா?’ என்ற சிக்கல் துரைமுருகனுக்கு வரலாம்!

துணைவியின் மகன்!

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி​யின் மகன் ராஜாவுடன், வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவி லீலாவின் மகன் பிரபுவும் அரசியலில் தற்போது வளர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சேலத்தில், முதல்வர் தலைமையில் கோலாகலமாக பிரபுவுக்குத் திருமணம் நடந்தது. வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாளில்... அநாதை இல்லத்துக்கு சாப்பாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் போவதாக போஸ்டர் அடித்து பிரகடனப்படுத்திக்​கொண்டது பிரபு தரப்பு. பிரபு தோற்றத்தில் வீரபாண்டியாரின் சாயலில் இருப்பதால், 'சின்ன வீரபாண்டியாரே!’ என்றுதான் கட்சி வட்டாரம்  அழைக்கிறது. இப்போது கட்சியின் போஸ்டர்​களிலும் பிரபுவின் படம் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது!

மகனா... மருமகனா?

பைந்தமிழ் பாரி - அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன். கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத் தலைவர். இவரையே தனது அரசியல் வாரிசாகக் கொண்டுவர தொடக்கத்தில் திட்டமிட்டார் பொங்கலூரார். ஆனால், பரபர அரசியலில் சின்னச் சின்னச் சர்ச்சைகளில் பாரி சிக்கிக்கொண்டார். இதைத் தொடர்ந்து தன் மருமகன் டாக்டர் கோகுலைக் கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர். கோகுல் துணை முதல்வருக்கும் மிக நெருக்கமானவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதிக்கு அவரை வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு வந்துவிட்டது கட்சித் தலைமை. ஆனால், பொங்கலூராரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், வேட்பாளர் மாற்றப்பட்டார் என்று தகவல். இந்த முறை, 'ஸீட்டை மகனுக்காகக் கேட்பதா... அல்லது மருமகனுக்காகக் கேட்பதா?’ என்ற புரியாத குழப்பத்தில் இருக்கிறாராம் பொங்கலூரார்!

ஆணையிட்டால் அலறும்!

கே.என்.நேருவுக்கு நிகரான மரியாதை அவரது சகோதரரான கே.என்.ராமஜெயத்துக்கு திருச்சி மாவட்டக் கட்சிக்காரர்களால் வழங்கப்படுகிறது. ஏராளமான நிலபுலன்கள், ஆசியாவின் நவீன அரிசி ஆலைகள், பொறியியல் கல்லூரி நிர்வாகம், ஜனனி குரூப் எனப் பல தொழில்கள் இருப்பதாலும், அண்ணன் நேருவுக்கு சகலமுமாக இருப்பதாலும், இவரிடம் மரியாதை அளிப்பவர்களைவிட... பயத்தில் பம்மிக் கிடப்பவர்கள் அதிகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முயற்சித்தார் ராமஜெயம். ஆனால், அதை நெப்போலியன் தட்டிப் பறித்தார் (அவரும் இவர்கள் குடும்பத்துக்காரர்தானே!). இப்போது தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்  ராமஜெயம்!

கலக்கும் கருணைராஜா!

திருச்சி தி.மு.க-வில் நேருவுக்கு சீனியர் வனத் துறை அமைச்சர் செல்வராஜ். இடையில், ம.தி.மு.க-வுக்குப் போய்விட்டு வந்ததால், திருச்சி மாவட்டத்தில் அவருக்கு கொஞ்சம் இறங்கு முகமாகிவிட்டது. ஆனால், அமைச்சராகி மீண்டும் தன் பவரைத் தக்க​வைத்து வருகிறார். இவரது மகன் கருணைராஜா திருச்சி புறநகரில் கலக்குகிறார். கான்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்து வந்தாலும், சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்தி முத்தரையர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். செல்வராஜின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்தால், கட்டாயம் கருணைராஜாவின் படத்தையும் போட்டு, இனி அண்ணனின் அரசியல் வாரிசு இவர்தான் என்று சொல்லி புளகாங்கிதம் அடைகிறார்கள்!

'உனக்கு இன்னும் வயசு இருக்கு!'

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தம்பி, கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ் விருதுநகர் மாவட்டத்துக்கு அறிவிக்கப்படாத அமைச்சர்! இந்த முறை தனக்கு ஸீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அண்ணனிடம் கறாராகவே சொல்லி இருக்கிறாராம் சுப்பாராஜ். தம்பி ஒரு பக்கம் எம்.எல்.ஏ. கனவில் மிதக்க... அமைச்சரின் மகன் ரமேஷுக்கும் அதே ஆசை. 'உனக்கு இன்னும் வயசு இருக்குடா தம்பி. சித்தப்பாவும் ஸீட் கேட்குறாரு. அதனால், நீ கொஞ்சம் பொறுமையா இரு...’ என மகனை அடக்கிக்கொண்டு இருக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்! ரமேஷ் என்ன நினைக்கிறார் என்பது தேர்தலில் தெரியும்!

விடாப்பிடி அப்பா!

அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் சுப.த.சம்பத், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். தந்தைக்குத் தொகுதி தரப்படும்போது, தனியாகத் தனக்கும் கேட்கும் வழக்​கம் இதுவரைக்கும் சம்பத்துக்கு இல்லை. இம்முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்​பதில் உறுதியாக இருக்கிறார். 'எனக்கு ஸீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என் மகனுக்கு ஸீட் கொடுத்தே ஆக வேண்டும்’ என்பதில் தங்கவேலன் விடாப்பிடியாக இருக்கிறாராம். தங்கவேலனுக்கு வயதாகிவிட்டதால் இந்தத் தேர்தலில் அவர் மகனை களத்தில் இறக்கிவிட்டு அரசியலில் அமைதியாகிவிடுவார் என்றே எதிர்​பார்க்கப்படுகிறது!

ஐ.பி.எஸ்-க்கு மரியாதை!

திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் வாரிசு ஐ.பி.செந்தில்குமார். கட்சி வட்டாரத்​திலோ, 'ஐ.பி.எஸ்.’ என்று சொன்னால் போதும்! கடந்த ஐந்து வருடங்களில் ஐ.பி.எஸ்-ஸின் வளர்ச்சி அசுர வேகமானது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐ.பி.எஸ். தலை​யீடு இல்​லாத அரசுத் துறைகளே இல்லை. கட்சிக்​காரர்​களும் சரி... அதிகாரிகளும் சரி... அமைச்​சருக்கு என்ன மரியாதை கொடுக்கிறார்​களோ, அதைவிட ஒரு மடங்கு மரியாதை ஐ.பி.எஸ்-க்கு அதிக​மாகவே கொடுக்கிறார்கள். இரண்டு பேருமே இப்போது தொகுதியை எதிர்பார்க்கிறார்கள்!

'எனக்கு பிறகு இவன்தான்!'

கோ.சி.மணிக்கு வயதாகிவிட்டது. அடிக்கடி உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. அதனால், தன் மகன் இளங்கோவனைக் கட்சி​யில் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். தான் போகும் இடமெல்லாம் இளங்கோவனையும் அழைத்துக்​கொண்டு போய், 'எனக்குப் பிறகு எல்லாமே இவன்தான்... நீங்கதான் இவனைப் பொறுப்பா பார்த்துக்கணும்...’ என்று அறிமுகப்​படுத்துகிறாராம்.  'இனிமே எனக்கு ஸீட் வேண்டாம் தலைவரே... எம் பையனுக்கு ஸீட் கொடுத்துடுங்க!’ என்று கருணாநிதியிடம் இவர் சொல்லிவிட்டாராம்!

பேராசிரியரும்..!

நிதி அமைச்சர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், இம்முறை தேர்தலில் நிற்பதற்கான ஏற்பாடு​களில் இருக்கிறார். கடந்த எம்.பி. தேர்தலிலேயே தனக்கான கோட்​டாவாக வெற்றியழகனுக்கு வாய்ப்பை எதிர்பார்த்தார் அன்பழகன். இந்த முறையும் கேட்பார். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைத் தேர்தலில் கடும் போட்டிக்கு நடுவே வென்ற வெற்றியழகன், கிரானைட் தொழிலில் இருக்கிறார். அன்பழகன் நிற்கவில்லை என்றால் வெற்றியழகன் நிச்சயம் நிற்பார்!

சமீபத்தில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி இல்லத் திருமணத்தை நடத்திவைத்த கருணாநிதி, ''அமைச்சராக இருந்த பிச்சாண்டி, அதன் பிறகு அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்​கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு வழி விடுகின்ற இந்தப் பெருந்தன்மை எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை!'' என்று பேசியிருக்கிறார்!

யாருக்கு யார் விட்டுக்​ கொடுக்கிறார்கள் என்ற வீட்டு விவகாரத்தைவிட, மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நாட்டு விவகாரம்தான் கழக வாரிசுகளின் தகுதிக்கு மார்க் போட வேண்டும்!

ஒன்று மட்டும் நிச்சயம்... 'கட்சி என்ன குடும்பச் சொத்தா?' என்று இனிமேல் தி.மு.க-வில் யாரும் உரக்கப் பேச முடி​யாது!

நன்றி : ஜூனியர்விகடன் - 02-03-2011


Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_26.html#ixzz1F9QAxrsU

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

பிரதமர் மன்மோகன் சிங் தன் பேட்டியின் போது ..dinamalar..1


கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த ராஜாவுக்கு கடிதம் எழுதினேன். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து வந்திருந்த புகார்களை மையமாக வைத்து, சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தேன். சட்ட ரீதியிலும், சரியான முறையிலும் வெளிப்படையாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்று இருக்க வேண்டுமென்றும் கூறியிருந்தேன்.அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற அதே நாளில், ராஜாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையான முறையிலேயே நடப்பதாகவும், , "டிராய் அமைப்பும், தொலைத்தொடர்பு கமிஷனும், ஏலமுறையை பின்பற்ற வேண்டுமென்று கூறவில்லை. ஏல முறையை பின்பற்றினால், ஏற்கனவே உள்ளவர்கள் மட்டுமே வர முடியும், புதிய ஆட்கள் வர முடியாது. கடந்த காலங்களில் ஏலம் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை ஏலம் விடப்பட்டால், அது அனைவரையும் சமமாக நடத்தப்படவில்லை என்பது போலாகிவிடும். நிதியமைச்சகமும், தொலைத் தொடர்பு அமைச்சகமும் ஏலமுறை வேண்டாம் என்பதை ஒப்புக் கொண்டன. எனவே, ஏலமுறையை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது' என்றும், ராஜா கூறியிருந்தார். இதனால்தான், அந்த சமயத்தில் நான் மறுபடியும் அந்த விவகாரத்தில் தலையிட முடியவில்லை சில நிறுவனங்கள் மட்டும் பலன் பெறும் வகையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உள்நோக்கத்துடன் நடந்ததா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏற்கனவே இருந்த கொள்கை முடிவையே தானும் தொடர்வதாக ராஜா கூறினார். மற்றபடி ஸ்பெக்ட்ரத்தை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்தோ அல்லது முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்திய விதம் பற்றியே, என்னிடமோ அல்லது மத்திய அமைச்சரவையிடமோ, ராஜா எந்தவொரு ஆலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. அந்த முடிவுகள் அனைத்துக்குமே ராஜாவே பொறுப்பு.

தனித்தனியாக தேர்தலில் நின்று..

ஒவ்வொரு கட்சியும், தனித்தனியாக தேர்தலில் நின்று பார்க்கட்டும். அப்போது, ஒவ்வொரு கட்சியின் உண்மை பலம்; செல்வாக்கு என்னவென்பது தெரியும்' என, விஜயகாந்த் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.அ.தி.மு.க.,வுக்கு 35 சதவீதம், தி.மு.க.,வுக்கு 28, தே.மு.தி.க.,வுக்கு 10, கம்யூனிஸ்டுகளுக்கு 10, பா.ம.க.,வுக்கு 8 சதவீதம் என, கணக்கு போட்டு சொல்கின்றனர். பிறகு தேர்தல் எதற்கு? கூட்டணி அமைத்தால், 39 சதவீதம் ஓட்டு வாங்கிய கூட்டணி, அத்தனை இடங்களிலும் ஜெயிக்கிறது. தனித்தனியாக நிற்கும் மற்ற கட்சிகள், 61 சதவீதம் ஓட்டு வாங்கியும், ஒரு இடத்தில் கூட ஜெயிப்பதில்லை. இது சரி தானா? நியாயமா?மொத்த சட்டசபை இடங்களில், விகிதாச்சாரத்திற்கு ஏற்ப எம்.எல்.ஏ., இடங்களை கொடுப்பது தான் நியாயம். தேர்தலுக்கு முன் நடக்கும் குதிரை பேரங்கள், தேர்தலுக்குப் பின் நடக்கும்; அது தான் வித்தியாசம். எப்படி பார்த்தாலும், இப்போதுள்ள தேர்தல் முறை சரியல்ல என்று தான் தோன்றுகிறது.. தமிழகத்தில் வரப் போகும் தேர்தலைச் சந்திக்கப் போவது, இரண்டு அணிகள் தான். ஒன்று, ஸ்பெக்ட்ரம் அணி; இன்னொன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்கும் அணி. இதுதான் இறுதியான போர் வியூகம்.....