திங்கள், 30 ஏப்ரல், 2012

பாவம், பங்காரு லட்சுமண்!...dm


ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் முன்னணி இடம் வகிக்கும் இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்காக ஓர் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குற்றம் பெரியதா சிறியதா என்பதல்ல, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்போதுதான் சட்டத்தின் ஆட்சியும் நடக்கிறது, நியாயமும் தர்மமும் முற்றிலுமாகச் சீர்குலைந்துவிடவில்லை என்கிற நம்பிக்கை சாமானிய குடிமகனுக்கு ஏற்படும்.
அந்த அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றிருப்பதை வரவேற்கிறோம். கொள்ளைகள் மலிந்துவிட்ட நேரத்தில் நமது காவல்துறையினர் சில பிக்பாக்கெட்டுகளையாவது பிடிக்கிறார்களே என்று ஆறுதல் அடைவதைப்போல, பல ஊழல் முதலைகளைத் தட்டிக்கேட்க ஆளில்லாமல் இருக்கும்போது பங்காரு லட்சுமண் போன்ற மீன்களாவது அகப்படுகிறதே என்று சமாதானப்பட்டுக் கொள்வோம்.
பங்காரு லட்சுமண் மீதான குற்றச்சாட்டு சற்று விசித்திரமானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நேரம் "தெஹல்கா' என்றொரு இணையதளம் தொடங்கப்பட்டது. அந்த இணையதளத்தைப் பிரபலப்படுத்த பல அரசியல் தலைவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துவது என்று தீர்மானித்து அவர்கள் களம் இறங்கினார்கள்.
தெஹல்கா நிருபர் ஒரு மறைநாடகம் நடத்தினார். அன்றைய ஆளும் கட்சியின் தலைவர் என்கிற முறையில் பங்காரு லட்சுமணைத் தொடர்பு கொண்டார். அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு உதவி செய்வதற்காக பங்காரு லட்சுமணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தரப்பட்டது. அப்படிப் பணம் வழங்கப்பட்டதை மறைந்திருந்து படம் எடுத்தார்கள். பேசியதும் பதிவு செய்யப்பட்டது.
அந்த நாடகம் அடுத்த நாளே பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகி, தெஹல்கா இணையதளத்திற்கு நாடு தழுவிய விளம்பரம் இலவசமாகக் கிடைத்தது. பங்காரு லட்சுமண் பதவி விலக நேர்ந்தது. உலகம் அவரை மறந்துவிட்டாலும் சட்டம் மறக்காமல் இருந்து இப்போது தண்டனையும் கிடைத்திருக்கிறது.
ஒரு லட்சம் ரூபாயில் நாடு தழுவிய விளம்பரம் தேடிக்கொள்ளும் தரக்குறைவான உத்தியைக் கையாண்ட தெஹல்கா நடத்திய மறைநாடகத்தில் சிக்கிக் கொண்டவர் பங்காரு லட்சுமண் என்றாலும், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இவ்வளவு தரம் தாழ்ந்து போயிருக்கக்கூடாதுதான். அவருக்காகப் பரிதாபப்பட முடியுமே தவிர, தண்டனை வழங்கப்பட்டதில் தவறு காண முடியாது. அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பதைப்போலவே தரக்குறைவான நாடகத்தை அரங்கேற்றிய தெஹல்காவும் மக்களின் பேராதரவைப் பெற்றுவிடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எழுபது வயதைக் கடந்துவிட்ட பங்காரு லட்சுமணுக்கு முதுமைக்கே உரிய பல உடல்கோளாறுகள் உள்ளன. அதற்காக கருணைகூர்ந்து சிறைத்தண்டனையை 6 மாதங்களாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார். ""லட்சுமண் செய்துள்ள குற்றம் விபசாரத்தைவிட மோசமானது. விபசாரமாகிலும் தனிநபர் ஒழுக்கம் தொடர்பான குற்றம். ஆனால், போர்முனையில் நம் நாட்டுக்காக பல ஆயிரம் வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து காவல்காக்கும்போது, அவர்கள் பயன்படுத்தும் ஆயுதத் தளவாடங்களில் ஊழல் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்'' என்பதுதான் நீதிபதி அளித்துள்ள விளக்கம்.
"விஞ்ஞானரீதியாக' லஞ்சம் வாங்கத் தெரியாத அரசியல்வாதியாக இருந்திருக்கிறார் பங்காரு லட்சுமண். அதனால் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ரூ. 20,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ராணுவத்துக்குத் தளவாடம் வாங்குவதில் பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்று வெளிநாடுகளில் சேமித்து வைத்திருப்பவர்களைச் சட்டத்தின் கரங்கள் நெருங்குவதே இல்லையே என்கிறபோது நமக்குக் கோபம் வருகிறது.
கால்நூற்றாண்டு காலத்திற்கு மேலாகிவிட்டாலும் இன்னும் போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் குவாத்ரோச்சியைத் தப்பி ஓடவிட்டு, அவரைத் தேடிக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு இழுத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்த எங்களால் முடியாததால் போபர்ஸ் வழக்கையே முடித்துக் கொள்ளலாம் என்று வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் கூறுகிறது மத்திய புலனாய்வுத் துறை.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வீழ்த்த எம்.பி.க்களுக்குப் பணம் கொடுத்த வழக்கு முடிந்தபாடில்லை. ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே தனது வீட்டில் செயல்பட வைத்து அதன் மூலம் தனது குடும்ப நிறுவனம் தொழில் நடத்த உதவி, அரசுக்கு ரூபாய் 500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்திய முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மீதான சிபிஐ அறிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூட சிபிஐ தயாராக இல்லை.
போபர்ஸ், தாத்ரா ராணுவத் தளவாட ஊழல்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட இருக்கும் வேளையில் பங்காரு லட்சுமண் வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது திட்டமிடப்படாத நிகழ்வாக இருக்கலாம். ஆனால், "நீயும் திருடன்தான்' என்று பிக்பாக்கெட் அடிப்பவனைப் பார்த்து ஒரு கொள்ளைக்காரன் சொல்வதைப்போல, இன்றைய ஆளும் கட்சி அன்றைய ஆளும் கட்சிக்குப் பதிலடி கொடுக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் ஊழல் செய்வதற்கும் திறமை வேண்டும் என்பதை பங்காரு லட்சுமணுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு உணர்த்துகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யத்தான் செய்கிறது-சிலபேருடைய விஷயத்தில் மட்டும்!

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு....


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்!
என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட
தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது - உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது! ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய 'இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 'மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் 'பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.
தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரை...யும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா? 'சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் 'நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் 'பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்புக்குரியது அல்லவா! பக்திப் பரவசத்தில் கோயில் கோயிலாகச் சுற்றுவது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!....அண்ணா இறுதி நாள் வரை காங்கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; 'என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப் படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. 'அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிரஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?....
இலவசங்களுக்கே இடமிருக்காது கலைஞரே!...
எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலானாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் - தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றிவிட்டது. 'வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடைபெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்டில், 'தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று 'நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானிகளாய் உருமாறிய ரகசியத்தை உருக்குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்களுக்கே இடமிருக்காது கலைஞரே!