சனி, 10 ஆகஸ்ட், 2013

தூத்துக்குடி கலெக்டர் தூக்கப்பட்ட கதை...

ந்தக் கடற்கரையில் கறுப்பும் சிவப்புமான புது வகை நிறத்தில் மணல் சிதறிக் கிடக்கும். சிரித்து விளையாடும் சிறுவர் சிறுமியரும் கடலைப்போடும் காதலர்களும் அந்த மணலைக் கையில் எடுத்துப் பார்த்து ரசிப்பார்கள். அவர்களுக்குத் தெரியாது அது, விலை உயர்ந்த கார்னெட் மணல் என்று. 'கலைக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய மணல் இல்லை அது; விலைக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டியது’ என்பது சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. அந்த மணலை வெளிநாட்டுக்கு அனுப்பினால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பதும் சிலருக்குத்தான் தெரியும். அந்த சிலரை அஸ்திரம்வைத்து விசாரணையை முடுக்கினார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார். அன்றைய தினமே அவரை அங்கிருந்து மாற்றி சமூகநலத் துறையில் போட்டுவிட்டார்கள். 
ரெய்டு போனதுமே ஆஷிஸ் குமாருக்கு ஒரு போன் வந்துள்ளது. '24 மணி நேரத்துல உனக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கித் தர்றேன்’ என்று கெடுவைத்ததாம் அந்தக் குரல். அவர் எந்த அரசாங்கப் பதவியிலும் இருப்பவர் அல்ல. ஆனால், அதிகார நாற்காலிகளை உருவாக்கக் கூடியவர் என்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வட்டாரத்து மீனவர்கள் சொல்கிறார்கள்.
கடந்த 6-ம் தேதி இந்த இடங்களில் ரெய்டு நடத்து​வதற்கு அதிகாரிகளை அனுப்பினார் கலெக்டர். அதற்கான முஸ்தீபுகளில் கடந்த 2-ம் தேதி இறங்கி உள்ளார். அதற்குள் சிலரால் எதிர்த் தரப்புக்கு விஷயம் போய், சென்னையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவருக்கும் தகவல் போயுள்ளது. அவர் ஆஷிஸ் குமாரை அழைத்து, 'நீங்கள் அந்த மணல் பகுதிகளில் ரெய்டு போகத் திட்டமிட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அந்த முடிவைக் கைவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். ரெய்டு நடக்கும்; அல்லது, நடக்காது என்ற எந்த உத்தரவாதத்தையும் அப்போது ஆஷிஸ் குமார் தரவில்லை​யாம். ரெய்டு தொடங்கியபோதும் அந்த அதிகாரி தொடர்புகொண்டுள்ளார். 'ரெய்டை நிறுத்த முடியாது’ என்று ஆஷிஸ் குமார் சொல்லியிருக்கிறார். இதுதான் அவரது பணிமாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
இதேபோன்ற மோதல் சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது. அமைச்சர்கள், ஆளும் கட்சிக்காரர்களது பரிந்துரைகளை மதிக்காமல் சில மாவட்ட கலெக்டர்கள், சத்துணவு அமைப்பாளர்களை நியமனம் செய்தார்கள். தகுதி அடைப்படையில் இந்த நியமனங்கள் நடந்தன. அப்போதைய விருதுநகர் கலெக்டர் பாலாஜி, சில வரைமுறைகளை வகுத்து அதன்படி நியமனங்களைச் செய்தார். அதற்காகவே அவர் மாற்றப்பட்டதாக செய்திகள் பரவியது. பாலாஜியைப் பின்பற்றி மேலும் சில கலெக்டர்கள் சத்துணவு அமைப்பாளர் நியமனங்களை முறைப்படி செய்தார்கள். அதில் ஒருவர் இந்த ஆஷிஸ் குமார். 'இந்த நியமனத்தை யாரும் தடுத்துவிடக் கூடாது என்பதற்காக, இரவோடு இரவாக சான்றிதழ்களைச் சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கு பணி ஆணையை வழங்கியவர் ஆஷிஸ் குமார்’ என்கிறார்கள். அப்படிப்பட்டவருக்குத்தான் இப்போது மணல் வடிவில் சிக்கல் வந்துள்ளது.  
கடற்கரை முழுவதும் கையில்!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை முழுவதும் கையில் வைத்துக்கொண்டு கார்னெட் மணல் ஏற்றுமதி செய்யும் தொழிலில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் இருந்துவருகிறார் வி.வி. மினரல் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன். 'இவர் அனுமதிபெற்ற இடத்தைத் தாண்டி மணலை எடுத்து ஏற்றுமதி​செய்துள்ளாரா?’ என்பதுதான் மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க நினைக்கும் விவகாரம். 'கடற்கரை, கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி, தனியாரின் பெரிய நிலம், அதோடு ஒட்டியுள்ள தனியாரின் சிறிய நிலம், அனுமதி வாங்கியிருக்கும் அரசு நிலம், அதோடு ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு என நிலப்பரப்புக்களை வெட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்களா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கத் தொடங்கியது. விதிமுறைகள் மீறப்படுவதாக மீனவர்கள் சிலர் தொடர்ந்து புகார் சொல்லி வந்தார்கள். வேம்பார் கடற்கரையோரப் பகுதிகளில் மட்டும் 30 முதல் 40 ஹெக்டேர் பரப்பில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக டி.ஆர்.ஓ. நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் தாலுகா படுக்கப்பத்து பகுதியில் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்த நிறுவனத்துக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். அதைப் போலவே வேம்பார் பகுதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதா என்பதைக் கண்காணிக்கவே கலெக்டர் முயற்சித்தார்'' என்கிறார்கள். இதுதான் அவரது பணி மாறுதலுக்குக் காரணம் என்கின்றனர்.  
''முறைகேடு நடந்துள்ளது உண்மைதான்!''
கலெக்டர் ஆஷிஸ் குமாரிடம் பேசினோம். ''வைப்பாறு, வேம்பார் பகுதியில் வருவாய் துறை, சுங்கத் துறை, காவல் துறை கொண்ட டீம் ரெய்டு நடத்தினார்கள். அதில் வைப்பாறு கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், நிலம் அளவை செய்யப்பட்டாத நிலம் மற்றும் குத்தகை வழங்கப்பட்ட நிலத்துக்கு அருகில் நில அளவை செய்யப்படாத 85.611 கன அடி அளவிலான நிலபரப்பில் இருந்து 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களை வி.வி. குழும நிறுவனம் முறைகேடாக அள்ளியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அரசு உத்தரவின்படி எல்லா மணல் குவாரிகளையும் நாங்கள் கண்காணித்துக்கொண்டுதான் வந்தோம். அதிலும் வைகுண்டராஜன், அவரது சகோதரர் பி.எம்.ஜி நிறுவனம் ஆகியவை தவறு செய்துவருவதாக மீனவர்களும் பொதுமக்களும் புகார் சொன்னார்கள். ரகசியமாக முதலில் இதனைக் கண்காணித்தோம். உண்மை என்று தெரிந்தது. முதலில் படுக்கபத்தில் உள்ள பி.எம்.சி-யை ரெய்டு செய்தோம். விதியை மீறி இரண்டு லட்சத்து 82 ஆயிரத்து 744 மெட்ரிக் டன் கூடுதலாக எடுத்திருந்தனர். அதற்கு மூன்று கோடியே 10 லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் விதித்தோம். அங்கிருந்து எடுக்கப்பட்ட தாது மணல் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. உறுதிசெய்த பின்னர் இந்த அபராதத் தொகை மேலும் அதிகரிக்கலாம். அதற்கு பிறகுதான் வேம்பாரிலும் வைப்பாறிலும் ரெய்டு நடந்தது. தனியார், அரசு புறம்போக்கு நிலத்திலும் அள்ளப்பட்டிருப்பதால் அந்த நிறுவனம் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய வி.ஏ.ஓ. மூலம் போலீஸில் புகார் செய்யப்​பட்டிருக்கிறது'' என்றார்.
''இதுவரையிலும் ஏன் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கவில்லை?'' என்று கேட்டோம். ''அதிகாரிகள் பயந்திருக்​கிறார்கள். பெரிய அதிகாரிகளே பயப்படும்போது சிறியவர்கள் என்ன செய்வார்கள்? நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்று குவாரிகள் இருக்கிறது. அதிலும் இதுபோன்று தவறு நடந்திருக்கலாம். இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது என்பதற்​காகத்தான் இந்த நடவடிக்கை'' என்றார்.
''உங்களை யாராவது மிரட்டினார்களா?'' என்று கேட்டபோது, ''இந்த நடவடிக்கைகளுக்காக என்னை யாரும் நேரடியாக மிரட்டவில்லை'' என்றவர், ''ரெய்டு நடத்தியதால்தான் உடனே இடமாற்றம் நடந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. அரசு என்னை இந்தப் பணியில் நியமித்தது. சிறப்பாகச் செயல்பட்டோம். வேறு பணிக்கு அழைத்திருக்கிறது. அதில் வேலை செய்வோம். அவ்வளவுதான். இதில் ஒன்றும் விசேஷம் இல்லை. மாவட்டத்துக்குத் தேவையானத் திட்டங்கள் நிறையச் செய்ய முயற்சி செய்தோம். அதில் பிடிக்காத சிலர் புகார் சொல்லத்தான் செய்வார்கள்'' என்றார் ஆஷிஸ் குமார்.
'இது நெடுநாள் புகார்!’
இந்த விவகாரம் பற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், நம்மிடம் பேசினார். இதுதொடர்பாக அரசுக்கு தொடர்ந்து புகார் கடிதங்களை அனுப்பி வந்தவர் இவர்தான். தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் சேர்மனாக இருந்தவர். நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடியும் சேர்ந்து இருந்தபோது, கலெக்டராகவும் இருந்தவர். அந்த அனுபவத்துடன் சில தகவல்களைச் சொன்னார்.
''வி.வி. மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், தென் மாவட்டங்களின் கடற்கரை ஓரத்தில் தனி அரசாங்கம் நடத்தி வருகிறார். தென் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் குவிந்துகிடக்கும் மணலில் கார்னெட், இலும்னைட், ரூட்டைல், ஜிர்கான், மோனசைட் என்ற விலை உயர்ந்த கனிமங்கள் கலந்துகிடக்கிறது. இதை அந்த மணலில் இருந்து பிரித்தெடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் இவர்களது தொழில். மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின்  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடலோர பாதுகாப்புச் சட்டம், வன இலாகா என பல துறைகளில் அனுமதிபெற வேண்டும். அவர்கள் அனுமதி வழங்கிய பின், அந்தந்தத் துறைகளின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், இங்கு தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் விதிமுறைகள் எதையும் பின்பற்றவும் இல்லை. கடற்கரை ஓரங்களில் மணலை அள்ளி சலிப்பதற்கு மனித ஆற்றலைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ராட்சத எந்திரங்கள் டன் கணக்கில் மணலை அள்ளிக்கொண்டிருக்கின்றன. கனிமங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அந்த மணல் மீண்டும் பழைய இடத்தில் கொட்டப்படுவதும் இல்லை.
ஏதாவது ஒரு பட்டா குவாரிக்கு மட்டும் அனுமதி வாங்கிக்கொள்பவர்கள், அதைக் காட்டியே தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள அனைத்துப் புறம்போக்கு நிலங்களையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறார்கள். போலீஸ், வருவாய்த் துறை, கனிம வளம், வருமான வரி, வன இலாகா, மாசுக்காட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் என சகல துறைகளும் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் பகுதியில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தொழில் தொடங்க முடியாது. அப்படியே யாராவது ஒருவர் தொடங்கினால்கூட, அவர்களால் அந்தத் தொழிலை நடத்தவே முடியாது. அரசாங்க சம்பளம் வாங்கும் ஒரு சில கைக்கூலிகள் உதவி இல்லாமல் இதனை யாரும் செய்ய முடியாது.
எந்த அரசாங்கமும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. காரணம், எல்லா அரசாங்கமும் அவர்களது அரசாங்கம்தான். அதற்கு நிதர்சனமான சாட்சிதான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார். குவாரியில் சோதனை நடத்தியதற்காக 24 மணி நேரத்தில் அவர், பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டுள்ளார். அப்படி என்றால், நடக்கும் அரசாங்கம் யாருடையது? இந்த விவகாரங்கள் பற்றி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் இதுவரை 1,500 கடிதங்களை ஆதாரங்களுடன் அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை குறைந்தபட்ச விசாரணைகூட நடக்கவில்லை. முதல் முறையாக ஆஷிஸ் குமார் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அவரைப்போன்ற அதிகாரிகள் வர வேண்டும். இந்த மாஃபியாக்களிடம் இருந்து மக்களின் சொத்தை பாதுகாக்க வேண்டும்'' என்றார்.
''இது எங்களை ஒழித்துக்கட்டும் முயற்சி!''
ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரத்தின் குற்றச்சாட்டுகள் பற்றி வி.வி. மினரல்ஸ் தரப்பைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்கள் சார்பில், வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி நம்மிடம் பேசினார். ''வி.வி. மினரல்ஸ் முறையான அனுமதிகளைப் பெற்று, அனைத்து விதிமுறைகளையும் சரியாகப் பின்பற்றித்தான் தொழில் நடத்தி வருகிறது. அதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருக்கிறது. அதை உரியவர்கள் எப்போது வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், எங்களின் தொழில் போட்டியாளர் தயா தேவதாஸ் என்பவருடைய ஊழியர். தயா தேவதாஸ் சொல்லச் சொல்வதை சுந்தரம் சொல்கிறார். இதுதான் எங்களைப் பற்றிய அபாண்டமான குற்றச்சாட்டின் பின்னணி.
யார் வேண்டுமானாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்தப் பகுதியில் நிலம் வாங்கி எங்களைப்போல தொழில் செய்யலாம். அதை நாங்கள் தடுக்கவே முடியாது. அப்படிச் செய்ய முயற்சி எடுக்காமல், எங்களுடைய தொழில் போட்டியாளர்கள் ஒரு சில அரசியல் மற்றும் பத்திரிகை பிரமுகர்களைக் கையில் வைத்துக்கொண்டு எங்களை மொத்தமாக இந்தத் தொழிலில் இருந்து ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள். அதுதான் இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகள் வரக் காரணம். இவர்கள் இங்குள்ள மீனவர்களையும் தூண்டிவிட்டு எங்களை பிளாக்மெயில் செய்கிறார்கள். இதுபோன்ற எல்லா பிரச்னைகளையும் நாங்கள் சட்டப்படி சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். இனிமேலும் சந்திப்போம்'' என்றவரிடம், ஆஷிஸ் குமார் இடமாற்றம் பற்றிக் கேட்டோம்.
''கலெக்டர் ஆஷிஸ் குமார் இடமாற்றத்துக்கு நாங்கள் காரணம் என்று சொல்வது நகைச்சுவையாக உள்ளது. ஒரு முதலமைச்சர் நினைத்தால் மட்டும்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியும். அதில் எங்களைப் போன்றவர்கள் எப்படி தலையிட முடியும்? ஆஷிஸ் குமார் மீது இந்த மாவட்டத்தில் ஏராளமான புகார்கள் இருக்கின்றன. அவருடைய மகள் பிறந்தநாள் விழாவைக் காரணம் காட்டி பல லட்சங்களை அவர் வசூல் செய்தார், கோடிக்கணக்கான மதிப்பில் பரிசுப்​பொருள்கள் பெற்றார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர் மாற்றப்பட்டு இருக்கலாம்'' என்றார்.
பரிசுப் பொருட்கள் வாங்கினாரா?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்களை நடத்தினார் கலெக்டர். ஒவ்வொரு துறை சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த விழாவுக்காக தொழில் நிறுவனங்கள், வியாபார பிரமுகர்களிடம் வசூல் நடத்தப்பட்டதாகவும் அதற்கு சரியான கணக்கு காட்டப்படவில்லை என்றும் குற்றசாட்டுக்கள் எழுந்தன. அதேபோல் கலெக்டரின் மகள் பியரல் பிறந்தநாள் விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்கள் தாராளமாக அன்பளிப்புக்​களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆஷிஸ் குமார் மறுக்கிறார். ''உரிய கணக்கை அரசிடம் தெரிவிப்பேன்'' என்கிறார் அவர்.
கடல் ஒட்டி இருக்கும் கலெக்டர் பங்களா அருகில், வேறு வேலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக்கொண்டு நடைபாதை, குடில் அமைத்ததாகவும்... அந்தப் பணிக்கு முறையாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை என்றும் குற்றசாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. குற்றசாட்டுக்கள் அவ்வப்போது தூண்டப்பட்டு வந்ததை தொடர்ந்து, அரசு சார்பில் விசாரணை நடத்த உத்தரவு விடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.  
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் போர்க்கொடி?
ஆஷிஸ் குமார் மாற்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 'மணல் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு ஆதரவாக நேர்மையான அதிகாரிகளை அரசாங்கம் பழிவாங்கினால், இனி எந்த அதிகாரியாவது சுற்றுச்சூழலுக்கும் மக்களின் எதிர்காலத்துக்கும் வேட்டுவைக்கும் மணல் கொள்ளையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா?’ என கொதிக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், ''மதுரையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட அன்சுல் மிஸ்ராவை அங்கிருந்து மாற்றியதே தவறான முன்னுதாரணம். இப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஸ் குமாரை அதேபோல் மாற்றியிருக்கிறார்கள். இதற்கு முன்பு குமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜோதி நிர்மலா துணிச்சலாக செயல்பட்டார். அவரையும் கடந்த ஆட்சியாளர்கள் உடனே மாற்றினார்கள். எந்த அரசாங்கமாக இருந்தாலும் உயர் மட்ட அதிகாரிகளை இந்தத் தொழில் அதிபர்கள் கையில் வைத்திருக்கிறார்கள்.  
நியாயமான அதிகாரிகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டிய அரசாங்கம், இப்படிப்பட்டவர்களுக்குத் துணையாக செயல்படுவது நல்லது அல்ல. உ.பி-யில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நேர்ந்த அவலத்துக்கு இணையானது இந்த விஷயம். அதனால் இதனையும் எங்கள் ஐ.ஏ.எஸ். சங்கத்தில் விவாதித்து அடுத்த கட்ட செயல்பாடு பற்றி ஆலோசிக்க இருக்கிறோம்'' என்றார் அந்த அதிகாரி.
மொத்தத்தில் தமிழகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த சம்பவத்தால் அதிர்ந்திருப்பது நிஜம்.
- பி.ஆண்டனிராஜ், எஸ்.சரவணபெருமாள், ஜோ.ஸ்டாலின்
அட்டை மற்றும் படங்கள்: ஏ.சிதம்பரம்