ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஊழல்களின் ஊற்றுக்கண்....

லோக்பால் மசோதா சட்ட வரையறைக்குள் பிரதமரைக் கொண்டுவர வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மசோதாவில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் பிரதீப் குமார் கூறியிருக்கும் கருத்து, உண்மையிலேயே நியாயமானது, தேவையானது.

கார்ப்பரேட் நிறுவனங்களையும் இந்த மசோதாவுக்குள் கொண்டுவருவதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று நினைக்கத் தோன்றலாம். ஆனாலும், இன்றைய இந்தியாவில் வெளிப்பட்டுவரும் அனைத்து முறைகேடுகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் தொடர்புதான் அதிகமாக இருக்கிறது. இந்தத் தொடர்புதான், ஊழலைப் பல ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தியும் இருக்கிறது.
தற்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கு, ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று பல வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் வழக்கிலிருந்து விடுதலை அடைந்துவிடுவார்கள் என்று பேசப்படுவதற்குக் காரணம், கார்ப்பரேட் நிறுவனங்களால் அவர்கள் பயன் அடைந்ததை லஞ்சம் என்று சட்டப்படி நிரூபிப்பது கடினம் என்பதாலும், அதற்கான பிடிப்பு தற்போதைய சட்டத்தில் இல்லை என்பதாலும்தான்.
ஒரு நிறுவனத்துக்கு யாரோ பல கோடி கடன் கொடுக்கிறார்கள். ஏன் கொடுத்தார், இவ்வளவு பெரும்தொகையை எந்த ஆவணங்களும், பிணை வைப்பும் இல்லாமல் கொடுப்பார்களா என்ற கேள்விகள் பொதுநியாயமாக இருந்தாலும், சட்டத்தின் முன் இந்தக் கேள்விகள் யாவும் தொழிலில் கொடுப்பவர் - வாங்குபவரைப் பொறுத்த விவகாரம். ஆவணம், பிணைவைப்பு இல்லாமல் எந்த தைரியத்தில் கடன் கொடுத்தாய் என்று சட்டம் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கொடுத்ததற்கு, தனிப்பட்ட உள்நோக்கம் அல்லது ஆதாயம், பயன் கிடைத்திருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டும். இது மிகவும் கடினமான செயல். ஓர் அமைச்சரின் ரத்தஉறவு நடத்தும் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி முதலீட்டை ஒரு நிறுவனம் செய்தால், அதற்கு உள்நோக்கம் இருந்தாலும் அதை நிரூபிப்பது கடினம்.
பிரதீப் குமார் சொல்வதைப்போல, லோக்பால் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் சேர்த்து, ஒரு வழக்கில் கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்த பணம், அது கடனாக இருந்தாலும் அல்லது அமைச்சர் சொன்ன நிறுவனத்தில் போட்ட பங்கு முதலீடாக இருந்தாலும் சரி, உள்நோக்கம், தனிஆதாயம் கொண்டது என்ற சந்தேகத்துக்கு வழிவகுத்தாலும்கூட அந்த நிறுவனம் தண்டிக்கப்படும்; அந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ளலாம், அதன் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கலாம் என்கிற அளவுக்குக் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே, கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தகைய லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடாது.
பெரும் திட்டங்கள், தொழில் ஒப்பந்தங்கள், சிறப்புப் பொருளாதார மண்டல அனுமதி, கனிமச் சுரங்க அனுமதி என்று எதை எடுத்தாலும், அரசியல்வாதிகள் லஞ்சம் பெறுவதில்லை. அந்த நிறுவனத்தின் தொழில்பங்குகளை (ஷேர்) குடும்ப உறுப்பினர்கள், பினாமி பெயர்களில் பெற்றுக்கொள்வதுதான் இன்றைய லஞ்ச கலாசாரமாக மாறியிருக்கிறது. தற்போதைய சட்டப்படி தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் இல்லை. லோக் ஆயுக்தவுக்கும் அதிகாரம் இல்லை.
அரசு இயந்திரத்தில் மிகச் சாதாரண பொறுப்பில் இருக்கும் உதவியாளர், கடைநிலை ஊழியர்கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் லஞ்சம் வாங்கக் காரணம், அவருடைய மேலதிகாரியும் லஞ்சம் வாங்குகிறார் என்பதால்தான். அவரது மேலதிகாரி தனது உயர் அதிகாரியைக் காட்டுவார், அவர் அமைச்சரையும், அமைச்சர்கள் முதல்வரையும் சுட்டிக்காட்டுவார்கள். முதல்வர்கள், மத்திய அமைச்சர்களையும் ஆட்சியாளர்களையும் காட்டுவார்கள்.
ஆட்சி அதிகாரத்தின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால், அதன் விளைவாக அரசு இயந்திரத்தின் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் வாங்காத ஒரு சூழல், தானாகவே உருவாகிவிடும். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை லஞ்சம் வாங்கச் செய்பவர்கள் உயர்அதிகாரிகளும் இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதான் அதிகம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒரு மாநில முதல்வரையோ அமைச்சரையோ மத்திய அமைச்சர் அல்லது பிரதமரையோ சந்திப்பது மரியாதை நிமித்தம் என்று சொல்லப்பட்டாலும், இவர்களது சந்திப்பில் மறைமுக கோரிக்கைகள் இருக்கவே செய்கின்றன. அந்தக் கோரிக்கைகள் பலவும் தனியொரு நிறுவனம் அல்லது நபருக்கு லாபம் தருவதாகவும், அரசு அல்லது பொதுநிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாகவுமே இருக்கின்றன என்பதும், இதன் அளவுக்கு ஏற்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் லஞ்சம் தர முன்வருவதும்தான் இன்றைய புதிய நடைமுறையாக இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் நேரச் செலவுக்குப் பணஉதவியாக இருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்போது அரசியல்வாதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழிலில் பங்கு முதலீட்டுக்கு உதவிசெய்து தாங்களும் பலனடைகின்றன என்கிற அளவுக்கு லஞ்சம் புதிய அவதாரம் அடைந்திருக்கிறது. தனியார் மயம், சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் வர்த்தகம் எந்தவித தர்மத்தையோ, கோட்பாட்டையோ அடிப்படையாகக் கொள்ள வேண்டியதில்லை என்கிற நிலைமை ஏற்படும்போது, வியாபார வெற்றிக்காக எந்தவித விலையும் கொடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகின்றன. பல கோடி ரூபாய் ஊழல்களின் ஊற்றுக்கண் இதுதான். எரியும் கட்டையை எடுத்தால், பொங்குவது தானே அடங்கும்.

சனி, 3 செப்டம்பர், 2011

மதுரையில் "கோடி' கட்டும் அழகிரி...


மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் நேற்று, பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலுள்ள, அமைச்சர்களின் சொத்துக்களை பார்த்தால், மூச்சு மூட்டுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொத்துக்கள், "கோடி' கட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, காபி எஸ்டேட் முதல், சைக்கிள் வரை உள்ளதாக ரூ.11 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார்.மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் மூன்றுமுறை வலியுறுத்திக் கேட்டதன் அடிப்படையில் நேற்று முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள சொத்து விவரத்தில், தமிழக அமைச்சர்களில் அழகிரியின் சொத்துக்கள் மலைக்க வைப்பதாக உள்ளன.மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ.5.39 கோடி ரொக்கம். ஹோண்டா சிட்டி, லேண்ட் ரோவர், டொயட்டா இன்னவோ, ஸ்கோடா கார்கள். அழகிரியின் பெயரில் மட்டும் 85 கிராமும், மனைவி காந்தியின் பெயரில் 700 கிராமும், மகன் பெயரில் 50 கிராம் தங்கமும் உள்ளதாம்.விவசாய நிலங்கள்:உத்தங்குடியில் 2.56 ஏக்கர்- மதிப்பு ரூ.50 லட்சம்.கள்ளந்திரியில் 7.5 ஏக்கர்- மதிப்பு ரூ. 20 லட்சம்.சின்னாம்பட்டி 1.5 ஏக்கர்- மதிப்பு ரூ.5 லட்சம்.சிந்தாமணி பகுதியைச் சுற்றிலும்தான் நிறைய விவசாய நிலங்கள், கணக்கு காட்டப்பட்டுள்ளன. அங்கு 57 சென்ட் நிலம்- மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம். இன்னொரு 38 சென்ட் நிலம்-மதிப்பு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம். மற்றொரு 1 ஏக்கர் 32 சென்ட் நிலம்- மதிப்பு 2 லட்சத்து 64 ஆயிரம்.இதேபோல, இன்னொரு 1 ஏக்கர் 46 சென்ட்-மதிப்பு ரூ.2 லட்சத்து 92 ஆயிரம். இன்னொரு 2 ஏக்கர் 27 சென்ட்- மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம்.

விவசாயமல்லாத இடங்கள்:மதுரை தல்லாகுளம் பகுதியில், ஒரு ஏக்கர் 44 சென்ட் நிலப்பரப்பு- மதிப்பு ரூ.60 லட்சம். திருப்பரங்குன்றத்தில், 12 சென்ட் நிலப்பரப்பு-ரூ.4 லட்சம். மாடக்குளத்தில் 26 சென்ட் நிலப்பரப்பு- ரூ.29 லட்சம். பொன்மேனி பகுதியில் ஆறு கிரவுண்ட் பரப்பு நிலம்-மதிப்பு ரூ.90 லட்சம். சத்யசாயி நகர் வீடு 20 சென்ட் பரப்பளவு- ரூ.60 லட்சம். சென்னையில், ராஜா அண்ணாமலைபுரம்- 1,100 சதுரஅடி பரப்பு-மதிப்பு ரூ.22 லட்சம். மதுரை நாராயணபுரம் ஜாஸ் டவர்ஸ் பிளாட் வீடு ரூ.12 லட்சம். மொத்தத்தில் அழகிரிக்கு ரூ.12.88 கோடிக்கு சொத்து உள்ளது.
இவையெல்லாம் அழகிரியின் பெயரில் கணக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்துக்கள் என்ற நிலையில், மனைவி காந்தியின் பெயரில் அமைந்த சொத்து மதிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.10 லட்சம். சேமிப்பு கணக்கில் ரூ.38 லட்சத்து 73 ஆயிரத்து 183. கரன்ட் அக்கவுன்ட்டில் ரூ.14 லட்சம்.

காந்தி சில்க்ஸ் முதலீடு ரூ.70 லட்சம். தயா கல்யாண மகால்- மதிப்பு ரூ.13 லட்சம். சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் 5,500 சதுர அடியில் வீடு-மதிப்பு 4 கோடியே 39 லட்சம். ஐயன் பாப்பாக்குடியில் 3,000 சதுர அடி நிலம்-மதிப்பு 2 லட்சம்.மகன் தயாநிதியின் பெயரில் காட்டப்பட்டுள்ள சொத்து விவரங்களை பார்க்கும்போது, சென்னை திருவான்மியூரில் 4,000 சதுர அடி பிளாட் வீடு-மதிப்பு ரூ.36 லட்சம். மயிலாப்பூர் பீமண்ண முதலி தெருவில் 8,160 சதுர அடி வீடு - ரூ.2 கோடி. சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீடு 50 சென்ட்- ரூ.1.5 கோடி. கோடைக்கானல் பர்ன்ஹில் சாலையில் 60 சென்ட் நிலத்தில் பங்களா- மதிப்பு ரூ.68 லட்சம். மேற்கண்ட தகவல்கள் அமைச்சர் அழகிரியின் பெயரில் இடம்பெற்றுள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்புகள் எல்லாமே எந்த அடிப்படையில் போடப்பட்டுள்ளன என்பது புரியவில்லை. அரசு மதிப்பா, சந்தை மதிப்பா என்பது தெரியவில்லை.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தன் பங்கிற்கு ரூ.11 கோடி வரை சொத்துக்கணக்கு காட்டியுள்ளார். கர்நாடகாவில் குடகு பகுதியில் காபி எஸ்டேட்-ரூ.29 லட்சம் மதிப்பு என்று கூறியுள்ளதோடு, ரூ.34 லட்சம் அளவில் பிற சொத்துக்கள் என்ற பெயரில் கணக்கு கூறியுள்ளார். பங்குச் சந்தையில் ரூ.57 லட்சம். பொதுவைப்பு நிதியாக ரூ.6 லட்சத்து ரூ.92 ஆயிரம். அஞ்சல வைப்புநிதியாக ரூ.19 லட்சம். நிரந்தர வைப்பு நிதியாக ரூ.2 கோடியே 15 லட்சம். சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.1,239 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா, போர்டுபியஸ்டா கார்கள் வைத்துள்ளார். நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள பங்களா.சிதம்பரத்தின் மனைவி நளினியின் பெயரில், ரூ.10 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இன்னொரு அமைச்சர் வாசனோ, தனக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கமும், மனைவி சுனிதாவுக்கு ரூ.6 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 750 கிராம் தங்கமும், ரூ.3 லட்சம் மதிப்பு கொண்ட 10 காரட் வைரமும், ரூ.5 லட்சத்து 400 மதிப்பு கொண்ட 27 கிலோ எடையுள்ள வெள்ளியும் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.நமது டில்லி நிருபர்

அமைச்சர் கமல் நாத்துக்கு ரூ.263 கோடி சொத்து..


புதுடில்லி:பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கமல் நாத்துக்கு, 263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகனுக்கு வெறும் ஐந்து கோடி ரூபாய்க்குதான் சொத்து உள்ளது."மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து அமைச்சர்களும், தங்களின் சொத்துப் பட்டியலை, பிரதமர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இந்த சொத்து பட்டியல் குறித்த விவரங்களை, ஆகஸ்ட் 31க்குள் அளிக்கும்படியும், அவர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, பிரதமர் அலுவலக இணையதளத்தில் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் உள்ள, 77 பேரில், விலாஸ்ராவ் தேஷ்முக், கிருஷ்ணா திராத், ஜெயந்தி நடராஜன், ஜிதேந்தர் சிங், ஜெகத்ரட்சகன் ஆகியோரை தவிர, மற்றவர்களின் சொத்து பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதுபற்றிய விவரம்:பிரதமருக்கு 4.8 கோடி ரூபாய்:பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. இரண்டு வீடுகள், "மாருதி 800' கார் ஆகியவை உள்ளன. இவரது மனைவி குர்சரண் கவுரின் பெயரில், பாட்டியாலா வங்கியில் சேமிப்பு கணக்கில், 22 லட்ச ரூபாய் உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு, 1.25 கோடி ரூபாய். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் மொத்த சொத்து மதிப்பு, 13.33 லட்ச ரூபாய். இவருக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் மதிப்பு, 16.22 கோடி ரூபாய். இவரது வங்கி கணக்கில் 65 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 
முதலீட்டின் பங்கு மதிப்பு 40 லட்ச ரூபாய். நகைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய். மற்ற சொத்துக்களின் மதிப்பு, 4.75 கோடி ரூபாய். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் நாத்துக்கு முதலிடம்:நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல் நாத்துக்கு தான், மத்திய அமைச்சர்களிலேயே, அதிக அளவு சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்து ரூ.263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
மத்திய அமைச்சரவையிலேயே, மிக மிகக்குறைந்த சொத்துக்களை கொண்டவராக ஏ.கே.அந்தோணி உள்ளார். மொத்தமே ரூ.1.8 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். இவரிடம் ரூ.84 ஆயிரம் ரொக்கம் உள்ளதாம்.

இவர்கள் தவிர, சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, 7.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், அமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு, 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும், வீர்பத்ர சிங்கிற்கு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும், குலாம் நபி ஆசாத்துக்கு 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்களுக்கு எவ்வளவு சொத்து?மத்திய அமைச்சரவையில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த இணை அமைச்சர்களை பொறுத்தவரை, நெப்போலியனுக்கு, 10.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி செல்வனுக்கு, 50.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாராயணசாமிக்கு 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பழனி மாணிக்கத்துக்கு சொந்தமாக, 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.