செவ்வாய், 30 அக்டோபர், 2012

விகடன் இணையதளத்தின் இடிந்தகரை போராளிகளின் கதை!...


டல், மீன், உப்புக்காற்று இவற்றை மட்டுமே மையமாக வைத்துச் சுழன்றுகொண்டிருந்த இடிந்தகரை மக்களை இன்று உலக மீடியாக்களே சுற்றிவருகிறது. தேர்தல் நேரக் கூட்டணி அறிவிப்பைக் கேட்கக் காத்திருக்கும் கட்சிகளின் தொண்டர்களைப்போல உதயகுமாரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புக்காக இடிந்தகரை தேவாலயத்தின் முன்பு தினமும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
''கூடங்குளத்தில் மனைவியின் தலைப் பிரசவத்துக்காக இட்லி கடையைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கும் கந்தசாமியின் கடை எப்போது திறக்கும்?'' என்று கேட்டால், '' 'இரண்டே நாளில் திறந்திடுவோம்’னுதான் நாராயணசாமி சொல்வாரு'' என்று இடிந்தகரை மக்களே காமெடி செய்யும் அளவுக்குத்தான் அங்கே அரசியல்வாதிகளுக்கு மரியாதை. அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பஞ்சாயத்து அலுவலகமும் சூறையாடப்பட்ட நிலையில் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் உதயகுமார் மட்டுமே.
உதயகுமாருக்கு அப்பாதான் இன்ஸ்பிரேஷன்!
உதயகுமாரின்  அப்பா பரமார்த்தலிங்கம் தி.க., தி.மு.க. இயக்கங்களில் இருந்தவர். தொடக்க காலத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் ஃபோர்மேனாக இருந்தவர் பின்னாளில் நாகர்கோவில் தொழில் பயிற்சி நிலையத்தில் வெல்டிங் இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்தார். அவர் பணி செய்த இடங்களில் எல்லாம் மனமகிழ் மன்றங்களை ஆரம்பிப்பது, சமூகப் பணிகளை முன்னெடுப்பது போன்றவற்றில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். நாகர்கோவிலில் இசங்கன்விளை பகுதியில் புதிதாகச் சாராயக்கடை வர இருந்தபோது உண்ணாவிரதம் இருந்து அதை முறியடித்தார். இப்போதும் போராட்ட குணத்துக்கும் மனோ தைரியத்துக்கும் தன் அப்பாதான் இன்ஸ்பிரேஷன் என்று அடிக்கடிச் சொல்வார் உதயகுமார். வீட்டில் இருக்கும்போது தினமும் இரவு 3 மணிவரை புத்தகங்களை வாசிப்பது உதயகுமாரின் வழக்கம். உதயகுமாரை உதயா என்றுதான் அழைப்பார் அவருடைய அம்மா பொன்மணி. இவர் சமூகநலத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அணு உலைக்கு எதிராக...!
துவக்கக் கல்வியை இசங்கன்விளையிலும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியிலும் பயின்ற உதயகுமார், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம், கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்துவிட்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக இருந்தார். அதன்பின் அமெரிக்கா சென்றவர் அங்கும் ஆசிரியராக பணிபுரிந்தார். அவ்வப்போது விடுமுறைக்குவரும் உதயகுமார் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரத்தைவிட அணு உலைக்கு எதிராகப் பிரசாரம் செய்ய செலவிட்ட நேரமே அதிகம். சிறுவயதில் அவரை மிகவும் பாசத்துடன் அரவணைத்த தாத்தா, பாட்டியைப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்த சம்பவம்தான் அணு உலைக்கு எதிரான போராளியாக அவரை உருவாக்கியதாம். கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே 'எறும்புகள்’ என்னும் இலக்கிய அமைப்பையும் பொதுப் பிரச்னைகள் பற்றி அலசுவதற்கு 'நியூ இந்தியா மூவ்மெண்ட்’ என்ற அமைப்பையும் நடத்தி இருக்கிறார். அதன் ஒரு கட்டமாகத்தான் அணு உலை குறித்த துண்டறிக்கைகளை விநியோகம் செய்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, சமத்துவ சமுதாய இயக்கத்தின் இயக்குனர் டேவிட்டுடன் தொடர்பு ஏற்பட்டுக் கடந்த 2001-ம் ஆண்டு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைத் தொடங்கியவர் தன் வாழ்நாளின் முழுநேரத்தையும் அணு உலைகளுக்கு எதிரான செயல்பாட்டுக்கே அர்ப்பணித்துவிட்டார்.
கூடங்குளம் போராட்டத்தில் உதயகுமாருக்குத் தோளோடு தோள்கொடுத்துப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பது புஸ்பராயன், முகிலன், மை.பா.ஜேசுராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட நால்வர் படைதான்.
தொடக்கத்தில் அணு உலையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் பலரும் குடும்பச் சூழல், அரசு கொடுத்த தொடர் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஒதுங்கிய நிலையிலும் இப்போதும் துணிவுடன் களத்தில் நின்று போராட்டத்தைச் செதுக்குவது இந்தப் படைதான். இவர்களைப்பற்றி  குட்டி புரொஃபைல் இங்கே...
கூடங்குளத்துக்கு குட்பை சொன்னால்தான் இனி கொங்கு!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை  பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில்டிப்ளமோ படித்தவருக்குப் பொதுப்பணித் துறையில் வேலையும் கிடைக்க, அதை உதறித் தள்ளிவிட்டு சமூகப் பணிக்கு வந்துவிட்டார். ஆரம்பகட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் மாணவர் அணி அமைப்பாளராகவும் தமிழ் ஈழ விடுதலை ஆதரவுக்குரல் இயக்கம் உள்பட பல இயக்கங்களில் இருந்தவர் சமூகப் பணிக்காக 16 வயதிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அதன்பின் தமிழ்நாடு மார்க்சிய லெலினிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர் தீண்டாமை, மது, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆபாசம் இவற்றை எதிர்த்துத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.  
1991-ல் அப்போதைய அ.தி.மு.க  அரசு இலங்கை அகதிகளைத் தமிழகத்தை விட்டு வெளியேற்ற முனைந்தபோது, அதை எதிர்த்து ஈரோட்டில் தொடர்ந்து பொதுக் கூட்டங்களை நடத்தினார் முகிலன். அவரை தேசத் துரோக வழக்கில் கைது செய்தது அப்போதைய ஜெ அரசு. அதன்பின் பல்வேறு விவசாய மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை முன்வைத்து பலகட்டப் போராட்டங்களை நடத்தி விவசாயிகளிடையே புரட்சியை விதைத்திருக்கிறார். அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான முகிலன், நொய்யல் ஆறு பாதுகாப்பு, சிப்காட் ஆலைக் கழிவுக்கு எதிர்ப்பு, ஈ.மு கோழிக்கு எதிரான போராட்டம், ஆறுகளில் சாயப்பட்டறைக் கழிவுகளைக் கலப்பதற்கு எதிர்ப்பு, சென்னிமலை விசைத் தறி, கைத்தறித் தொழிலாளர்களின் மறுவாழ்வு இவற்றுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விவசாய பிரச்னைகளுக்காகப் போராடி சிறைக்குச்சென்று இருக்கிறார். 2009-ல் ஈழப் பிரச்னைக்காகத் தாயகத்தில் 25 பெண்கள் உண்ணாவிரதம் இருந்ததற்கு ஆதரவு தெரிவிக்கவந்த முகிலன் அங்கேதான் உதயகுமாரைச் முதன்முதலாகச் சந்தித்திருக்கிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் அதன்பின் அணு உலைக்கு எதிரான போராட்டத்திலும் முனைப்பு காட்ட ஆரம்பித்தார். ''தனி நலனை குடும்ப நலனுக்கு உட்படுத்தியும் குடும்ப நலனை சமுதாய நலனுக்கு உட்படுத்தியும் வாழ்வோம் என உறுதி ஏற்கிறோம்''  என்று சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட முகிலனின் மனைவி  பெயர் பூங்கொடி.
மதபோதகரிலிருந்து மக்கள் பணிக்கு!
தூத்துக்குடியைச் சேர்ந்த புஸ்பராயன் தேவாலயத்தில் மதபோதகராக இருந்தவர். ஆலயப் பணிக்கு இணையானது மக்கள் பணி என்று கடல், கடல் சார்ந்த நலப் பணிகளுக்காக வெள்ளை உடையைத் துறந்தவர். மன்னார் வளைகுடா பாதுகாப்புக்காகத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியதிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இறால் பண்ணை, இரசாயனத் தொழிற்சாலையின் கழிவுகளும், தூத்துக்குடி நகரின் கழிவுகளும் கடலில் கலப்பதனால் அங்குள்ள 3,200 அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படும் என்று பல மீனவ கிராமங்களுக்குச் சென்று முழங்கியவர். கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை 21 பவளப்பாறை தீவுகள் இருக்கின்றன. அவற்றைச் சமூக விரோதிகள் வெட்டி எடுப்பதைத் தடுக்க, வனத் துறையோடு இணைந்து பணி செய்தவர். மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவருபவர்.
கடற்கரை ஓரங்களில் மணல் எடுப்பதால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தொடர்ந்து போராடிவருபவர். 1996-ல் திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் பகுதியில் மணல் எடுப்பதைக் கண்டித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டாராம். 1996-ல் அணு உலைத்தடுப்பு இயக்கத்தைத் துவங்கி ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையுள்ள கடலோரக் கிராமங்களுக்குச் சென்று அணு உலைக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு, பவளப் பாறைகள் பாதுகாப்பு என தொடர்ந்து மீனவ மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடியவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ல் இருந்தே இடிந்தகரை வாசியாகிவிட்டார்.
தமிழர் நலன்தான் முக்கியம்!
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் மை.பா.ஜேசுராஜின் பூர்வீகம். தத்துவ இயல், இறையியல்படித்துவிட்டு ரோமன் கத்தோலிக்கச் திருச்சபையில் பங்குத் தந்தையாக இருப்பவர் தமிழர் நலனையே குறிக்கோளாகக்கொண்டு அதற்கு எதிரான விஷயங்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கிறார். இடிந்தகரை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவருபவர்கள் யாராக இருந்தாலும் ஆதரவு தெரிவிப்பவர். 'தமிழர் நலம்தான் முக்கியம்ண்ணே’ என்று சிலாகிப்பாராம். தமிழர் களம் அமைப்பின் தென் மண்டல பொறுப்பாளராக  இருக்கும் இவர் கூடங்குளம் அணுஉலை செயல்பட்டால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடந்த 1999-ம் ஆண்டு முதல், டேவிட் உடன் இணைந்து அணு உலைகளுக்கு எதிராகக் களம் கண்டுவரும் மை.பா.ஜேசுராஜ் மக்கள் பணிக்காக திருமணமே செய்துகொள்ளவில்லை.
ஜெயக்குமார்!
இடிந்தகரை தேவாலயத்தில் பங்குத் தந்தையாக இருப்பவர் ஜெயக்குமார்.இடிந்தகரை கிராமத்தில் தேவாலயத்தின் முன்பாகத் திரளான மக்களைத்  திரட்டி அணு உலைக்கு எதிராகச் சாட்டை சுழற்றியதில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு.அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நடந்துவிடாத வகையில் மீனவ மக்களைத் தொடர்ந்து அமைதிப்படுத்துவதும் இவர்தானாம்.

ஒரு நல்ல அரசியல்வாதி அடுத்த  தேர்தலைப் பற்றிச் சிந்திப்பார். நல்ல தலைவன்தான்  அடுத்த தலைமுறையைப்பற்றிச் சிந்திப்பான். இடிந்தகரை மக்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
-  என்.சுவாமிநாதன்.          
படங்கள்: ரா.ராம்குமார்.