புதன், 16 நவம்பர், 2011

கூடங்குளம் அணுமின் நிலைய திறந்த மடல்! பழ. நெடுமாறன்..

அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே,
பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.
அணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம்கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என நம்பினோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு அதனருகிலேயே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல் நாளிதழில் நான்கு பக்கம் வரும் அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக் கொடுத்துள்ளீர்கள்.
கூடங்குளத்தைப் பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த அறிக்கையை எழுதி மறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம் வருவதற்கு முன்னாலே அறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம் அணு உலையைச் சோதனை செய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா?
அந்த அறிக்கையில் முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடி செய்தீர்களா? கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும் மக்களைச் சந்திக்காமல், அவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால் ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெருமையுடன் உறுதி தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களே தவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே ஏன்?
இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடாது. அப்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் அணு உலையை அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத் தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது.
கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு எதிராகக் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால் தப்பிச் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில் விபத்தே ஏற்படாது என்பது உண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம் என்ன?
அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல்விட்ட ஓர் உண்மை என்னவென்றால் கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதை அணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடிதான் முதலீடு, ஆனால், அதன் ஆயுள்காலம் முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும். இந்தச் செலவுகளையெல்லாம் மொத்தமாகக் கூட்டினால் மின்சார உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம். அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிபட்டுப் போகிறது.
இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம் எட்டினால்கூட 2030-ம் ஆண்டுக்குள் 4 லட்சம் மெகாவாட்தான் உற்பத்தி
செய்ய இயலும். ஆனாலும் இந்த 4 லட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே, மீதமுள்ள 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர, வேறு வழியில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.
இந்தியாவில் அணு ஆற்றல் துறையின்கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுக்கான அமைப்பு, நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய தொழில் நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2,194 மெகாவாட் அளவு மின்சாரத்தைச் சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான்.
கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித் திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 2011 முதல் 2015-க்குள் 19 ஆயிரம் மெகாவாட் மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறை.
இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில் நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
யுரேனியத்தைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டது தோரியம் என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும் அணு ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான் தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை, வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது எனக் கூறும் நீங்கள் அந்த ஆராய்ச்சி முற்றுப் பெறும்வரை பொறுத்திருக்கக்கூடாதா? அதற்குள் அவசரப்பட்டு ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையைச் செயல்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்?
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ. 200 கோடி செலவில் "புரா' திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதாவது நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும்.
1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்குமிடையே உடன்பாடு கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கூடங்குளம் பகுதி மக்கள் மீது 22 ஆண்டுகாலமாக ஏற்படாத கரிசனம் மத்திய அரசுக்கு இப்போது திடீரென ஏற்படுவானேன்?
22 ஆண்டுகாலத்துக்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின் வளர்ச்சியிலோ, ஏழ்மை நிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ, இந்திய அரசுக்குக் கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களைச் சரிக்கட்டத்தானே இந்தப் "புரா' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது?
அணு சக்தி என்பது இறைவன் மனித குலத்துக்குக் கொடுத்தது. அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் மனித குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின் மூலமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும் உற்பத்தியாகும் அணு மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை என உங்கள் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.
ஆனால், இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கைக்கா, நரோரா, தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள அணு உலைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவினாலேயோ அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும், கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச்சூழலில் கலந்துள்ளது என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்திய அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்கு இதுவரை எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்?
இனி தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைப் பிரச்னைக்கு வருவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி செய்திருக்கிறீர்கள்.
உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில்
50 % மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?
ஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப்படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
காவிரியில் பெருகிவரும் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம் பெருக்கவும் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால், மக்களுக்கு அபாயத்தை அளிக்கும் கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும் கல்லணையையும் எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருத்தமற்றதாகும்.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். அதை நீங்கள் ஏன் உணரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஊழல்களின் ஊற்றுக்கண்....

லோக்பால் மசோதா சட்ட வரையறைக்குள் பிரதமரைக் கொண்டுவர வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மசோதாவில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் பிரதீப் குமார் கூறியிருக்கும் கருத்து, உண்மையிலேயே நியாயமானது, தேவையானது.

கார்ப்பரேட் நிறுவனங்களையும் இந்த மசோதாவுக்குள் கொண்டுவருவதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று நினைக்கத் தோன்றலாம். ஆனாலும், இன்றைய இந்தியாவில் வெளிப்பட்டுவரும் அனைத்து முறைகேடுகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் தொடர்புதான் அதிகமாக இருக்கிறது. இந்தத் தொடர்புதான், ஊழலைப் பல ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தியும் இருக்கிறது.
தற்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கு, ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று பல வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் வழக்கிலிருந்து விடுதலை அடைந்துவிடுவார்கள் என்று பேசப்படுவதற்குக் காரணம், கார்ப்பரேட் நிறுவனங்களால் அவர்கள் பயன் அடைந்ததை லஞ்சம் என்று சட்டப்படி நிரூபிப்பது கடினம் என்பதாலும், அதற்கான பிடிப்பு தற்போதைய சட்டத்தில் இல்லை என்பதாலும்தான்.
ஒரு நிறுவனத்துக்கு யாரோ பல கோடி கடன் கொடுக்கிறார்கள். ஏன் கொடுத்தார், இவ்வளவு பெரும்தொகையை எந்த ஆவணங்களும், பிணை வைப்பும் இல்லாமல் கொடுப்பார்களா என்ற கேள்விகள் பொதுநியாயமாக இருந்தாலும், சட்டத்தின் முன் இந்தக் கேள்விகள் யாவும் தொழிலில் கொடுப்பவர் - வாங்குபவரைப் பொறுத்த விவகாரம். ஆவணம், பிணைவைப்பு இல்லாமல் எந்த தைரியத்தில் கடன் கொடுத்தாய் என்று சட்டம் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கொடுத்ததற்கு, தனிப்பட்ட உள்நோக்கம் அல்லது ஆதாயம், பயன் கிடைத்திருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டும். இது மிகவும் கடினமான செயல். ஓர் அமைச்சரின் ரத்தஉறவு நடத்தும் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி முதலீட்டை ஒரு நிறுவனம் செய்தால், அதற்கு உள்நோக்கம் இருந்தாலும் அதை நிரூபிப்பது கடினம்.
பிரதீப் குமார் சொல்வதைப்போல, லோக்பால் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் சேர்த்து, ஒரு வழக்கில் கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்த பணம், அது கடனாக இருந்தாலும் அல்லது அமைச்சர் சொன்ன நிறுவனத்தில் போட்ட பங்கு முதலீடாக இருந்தாலும் சரி, உள்நோக்கம், தனிஆதாயம் கொண்டது என்ற சந்தேகத்துக்கு வழிவகுத்தாலும்கூட அந்த நிறுவனம் தண்டிக்கப்படும்; அந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ளலாம், அதன் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கலாம் என்கிற அளவுக்குக் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே, கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தகைய லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடாது.
பெரும் திட்டங்கள், தொழில் ஒப்பந்தங்கள், சிறப்புப் பொருளாதார மண்டல அனுமதி, கனிமச் சுரங்க அனுமதி என்று எதை எடுத்தாலும், அரசியல்வாதிகள் லஞ்சம் பெறுவதில்லை. அந்த நிறுவனத்தின் தொழில்பங்குகளை (ஷேர்) குடும்ப உறுப்பினர்கள், பினாமி பெயர்களில் பெற்றுக்கொள்வதுதான் இன்றைய லஞ்ச கலாசாரமாக மாறியிருக்கிறது. தற்போதைய சட்டப்படி தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் இல்லை. லோக் ஆயுக்தவுக்கும் அதிகாரம் இல்லை.
அரசு இயந்திரத்தில் மிகச் சாதாரண பொறுப்பில் இருக்கும் உதவியாளர், கடைநிலை ஊழியர்கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் லஞ்சம் வாங்கக் காரணம், அவருடைய மேலதிகாரியும் லஞ்சம் வாங்குகிறார் என்பதால்தான். அவரது மேலதிகாரி தனது உயர் அதிகாரியைக் காட்டுவார், அவர் அமைச்சரையும், அமைச்சர்கள் முதல்வரையும் சுட்டிக்காட்டுவார்கள். முதல்வர்கள், மத்திய அமைச்சர்களையும் ஆட்சியாளர்களையும் காட்டுவார்கள்.
ஆட்சி அதிகாரத்தின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால், அதன் விளைவாக அரசு இயந்திரத்தின் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் வாங்காத ஒரு சூழல், தானாகவே உருவாகிவிடும். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை லஞ்சம் வாங்கச் செய்பவர்கள் உயர்அதிகாரிகளும் இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதான் அதிகம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒரு மாநில முதல்வரையோ அமைச்சரையோ மத்திய அமைச்சர் அல்லது பிரதமரையோ சந்திப்பது மரியாதை நிமித்தம் என்று சொல்லப்பட்டாலும், இவர்களது சந்திப்பில் மறைமுக கோரிக்கைகள் இருக்கவே செய்கின்றன. அந்தக் கோரிக்கைகள் பலவும் தனியொரு நிறுவனம் அல்லது நபருக்கு லாபம் தருவதாகவும், அரசு அல்லது பொதுநிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாகவுமே இருக்கின்றன என்பதும், இதன் அளவுக்கு ஏற்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் லஞ்சம் தர முன்வருவதும்தான் இன்றைய புதிய நடைமுறையாக இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் நேரச் செலவுக்குப் பணஉதவியாக இருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்போது அரசியல்வாதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழிலில் பங்கு முதலீட்டுக்கு உதவிசெய்து தாங்களும் பலனடைகின்றன என்கிற அளவுக்கு லஞ்சம் புதிய அவதாரம் அடைந்திருக்கிறது. தனியார் மயம், சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் வர்த்தகம் எந்தவித தர்மத்தையோ, கோட்பாட்டையோ அடிப்படையாகக் கொள்ள வேண்டியதில்லை என்கிற நிலைமை ஏற்படும்போது, வியாபார வெற்றிக்காக எந்தவித விலையும் கொடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகின்றன. பல கோடி ரூபாய் ஊழல்களின் ஊற்றுக்கண் இதுதான். எரியும் கட்டையை எடுத்தால், பொங்குவது தானே அடங்கும்.

சனி, 3 செப்டம்பர், 2011

மதுரையில் "கோடி' கட்டும் அழகிரி...


மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் நேற்று, பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலுள்ள, அமைச்சர்களின் சொத்துக்களை பார்த்தால், மூச்சு மூட்டுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொத்துக்கள், "கோடி' கட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, காபி எஸ்டேட் முதல், சைக்கிள் வரை உள்ளதாக ரூ.11 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார்.மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் மூன்றுமுறை வலியுறுத்திக் கேட்டதன் அடிப்படையில் நேற்று முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள சொத்து விவரத்தில், தமிழக அமைச்சர்களில் அழகிரியின் சொத்துக்கள் மலைக்க வைப்பதாக உள்ளன.மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ.5.39 கோடி ரொக்கம். ஹோண்டா சிட்டி, லேண்ட் ரோவர், டொயட்டா இன்னவோ, ஸ்கோடா கார்கள். அழகிரியின் பெயரில் மட்டும் 85 கிராமும், மனைவி காந்தியின் பெயரில் 700 கிராமும், மகன் பெயரில் 50 கிராம் தங்கமும் உள்ளதாம்.விவசாய நிலங்கள்:உத்தங்குடியில் 2.56 ஏக்கர்- மதிப்பு ரூ.50 லட்சம்.கள்ளந்திரியில் 7.5 ஏக்கர்- மதிப்பு ரூ. 20 லட்சம்.சின்னாம்பட்டி 1.5 ஏக்கர்- மதிப்பு ரூ.5 லட்சம்.சிந்தாமணி பகுதியைச் சுற்றிலும்தான் நிறைய விவசாய நிலங்கள், கணக்கு காட்டப்பட்டுள்ளன. அங்கு 57 சென்ட் நிலம்- மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம். இன்னொரு 38 சென்ட் நிலம்-மதிப்பு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம். மற்றொரு 1 ஏக்கர் 32 சென்ட் நிலம்- மதிப்பு 2 லட்சத்து 64 ஆயிரம்.இதேபோல, இன்னொரு 1 ஏக்கர் 46 சென்ட்-மதிப்பு ரூ.2 லட்சத்து 92 ஆயிரம். இன்னொரு 2 ஏக்கர் 27 சென்ட்- மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம்.

விவசாயமல்லாத இடங்கள்:மதுரை தல்லாகுளம் பகுதியில், ஒரு ஏக்கர் 44 சென்ட் நிலப்பரப்பு- மதிப்பு ரூ.60 லட்சம். திருப்பரங்குன்றத்தில், 12 சென்ட் நிலப்பரப்பு-ரூ.4 லட்சம். மாடக்குளத்தில் 26 சென்ட் நிலப்பரப்பு- ரூ.29 லட்சம். பொன்மேனி பகுதியில் ஆறு கிரவுண்ட் பரப்பு நிலம்-மதிப்பு ரூ.90 லட்சம். சத்யசாயி நகர் வீடு 20 சென்ட் பரப்பளவு- ரூ.60 லட்சம். சென்னையில், ராஜா அண்ணாமலைபுரம்- 1,100 சதுரஅடி பரப்பு-மதிப்பு ரூ.22 லட்சம். மதுரை நாராயணபுரம் ஜாஸ் டவர்ஸ் பிளாட் வீடு ரூ.12 லட்சம். மொத்தத்தில் அழகிரிக்கு ரூ.12.88 கோடிக்கு சொத்து உள்ளது.
இவையெல்லாம் அழகிரியின் பெயரில் கணக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்துக்கள் என்ற நிலையில், மனைவி காந்தியின் பெயரில் அமைந்த சொத்து மதிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.10 லட்சம். சேமிப்பு கணக்கில் ரூ.38 லட்சத்து 73 ஆயிரத்து 183. கரன்ட் அக்கவுன்ட்டில் ரூ.14 லட்சம்.

காந்தி சில்க்ஸ் முதலீடு ரூ.70 லட்சம். தயா கல்யாண மகால்- மதிப்பு ரூ.13 லட்சம். சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் 5,500 சதுர அடியில் வீடு-மதிப்பு 4 கோடியே 39 லட்சம். ஐயன் பாப்பாக்குடியில் 3,000 சதுர அடி நிலம்-மதிப்பு 2 லட்சம்.மகன் தயாநிதியின் பெயரில் காட்டப்பட்டுள்ள சொத்து விவரங்களை பார்க்கும்போது, சென்னை திருவான்மியூரில் 4,000 சதுர அடி பிளாட் வீடு-மதிப்பு ரூ.36 லட்சம். மயிலாப்பூர் பீமண்ண முதலி தெருவில் 8,160 சதுர அடி வீடு - ரூ.2 கோடி. சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீடு 50 சென்ட்- ரூ.1.5 கோடி. கோடைக்கானல் பர்ன்ஹில் சாலையில் 60 சென்ட் நிலத்தில் பங்களா- மதிப்பு ரூ.68 லட்சம். மேற்கண்ட தகவல்கள் அமைச்சர் அழகிரியின் பெயரில் இடம்பெற்றுள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்புகள் எல்லாமே எந்த அடிப்படையில் போடப்பட்டுள்ளன என்பது புரியவில்லை. அரசு மதிப்பா, சந்தை மதிப்பா என்பது தெரியவில்லை.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தன் பங்கிற்கு ரூ.11 கோடி வரை சொத்துக்கணக்கு காட்டியுள்ளார். கர்நாடகாவில் குடகு பகுதியில் காபி எஸ்டேட்-ரூ.29 லட்சம் மதிப்பு என்று கூறியுள்ளதோடு, ரூ.34 லட்சம் அளவில் பிற சொத்துக்கள் என்ற பெயரில் கணக்கு கூறியுள்ளார். பங்குச் சந்தையில் ரூ.57 லட்சம். பொதுவைப்பு நிதியாக ரூ.6 லட்சத்து ரூ.92 ஆயிரம். அஞ்சல வைப்புநிதியாக ரூ.19 லட்சம். நிரந்தர வைப்பு நிதியாக ரூ.2 கோடியே 15 லட்சம். சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.1,239 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா, போர்டுபியஸ்டா கார்கள் வைத்துள்ளார். நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள பங்களா.சிதம்பரத்தின் மனைவி நளினியின் பெயரில், ரூ.10 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இன்னொரு அமைச்சர் வாசனோ, தனக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கமும், மனைவி சுனிதாவுக்கு ரூ.6 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 750 கிராம் தங்கமும், ரூ.3 லட்சம் மதிப்பு கொண்ட 10 காரட் வைரமும், ரூ.5 லட்சத்து 400 மதிப்பு கொண்ட 27 கிலோ எடையுள்ள வெள்ளியும் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.நமது டில்லி நிருபர்

அமைச்சர் கமல் நாத்துக்கு ரூ.263 கோடி சொத்து..


புதுடில்லி:பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கமல் நாத்துக்கு, 263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகனுக்கு வெறும் ஐந்து கோடி ரூபாய்க்குதான் சொத்து உள்ளது."மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து அமைச்சர்களும், தங்களின் சொத்துப் பட்டியலை, பிரதமர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இந்த சொத்து பட்டியல் குறித்த விவரங்களை, ஆகஸ்ட் 31க்குள் அளிக்கும்படியும், அவர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, பிரதமர் அலுவலக இணையதளத்தில் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் உள்ள, 77 பேரில், விலாஸ்ராவ் தேஷ்முக், கிருஷ்ணா திராத், ஜெயந்தி நடராஜன், ஜிதேந்தர் சிங், ஜெகத்ரட்சகன் ஆகியோரை தவிர, மற்றவர்களின் சொத்து பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதுபற்றிய விவரம்:பிரதமருக்கு 4.8 கோடி ரூபாய்:பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. இரண்டு வீடுகள், "மாருதி 800' கார் ஆகியவை உள்ளன. இவரது மனைவி குர்சரண் கவுரின் பெயரில், பாட்டியாலா வங்கியில் சேமிப்பு கணக்கில், 22 லட்ச ரூபாய் உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு, 1.25 கோடி ரூபாய். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் மொத்த சொத்து மதிப்பு, 13.33 லட்ச ரூபாய். இவருக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் மதிப்பு, 16.22 கோடி ரூபாய். இவரது வங்கி கணக்கில் 65 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 
முதலீட்டின் பங்கு மதிப்பு 40 லட்ச ரூபாய். நகைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய். மற்ற சொத்துக்களின் மதிப்பு, 4.75 கோடி ரூபாய். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் நாத்துக்கு முதலிடம்:நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல் நாத்துக்கு தான், மத்திய அமைச்சர்களிலேயே, அதிக அளவு சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்து ரூ.263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
மத்திய அமைச்சரவையிலேயே, மிக மிகக்குறைந்த சொத்துக்களை கொண்டவராக ஏ.கே.அந்தோணி உள்ளார். மொத்தமே ரூ.1.8 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். இவரிடம் ரூ.84 ஆயிரம் ரொக்கம் உள்ளதாம்.

இவர்கள் தவிர, சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, 7.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், அமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு, 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும், வீர்பத்ர சிங்கிற்கு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும், குலாம் நபி ஆசாத்துக்கு 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்களுக்கு எவ்வளவு சொத்து?மத்திய அமைச்சரவையில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த இணை அமைச்சர்களை பொறுத்தவரை, நெப்போலியனுக்கு, 10.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி செல்வனுக்கு, 50.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாராயணசாமிக்கு 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பழனி மாணிக்கத்துக்கு சொந்தமாக, 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 20 ஜூலை, 2011

கியூபா 18.7. மலேசியா 8.1, கென்யா 7, ....


 விழிப்புணர்வின் அடிப்படை கல்வியறிவுடன் இணைந்தது. இந்தியாவோ கல்வி அறிவைப் பெறுவதிலும், படித்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்ட முறையிலும் பின்தங்கி உள்ளது.

 நீண்ட போராட்டத்துக்குப் பின், 2009 ஆகஸ்டில் மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் இந்தியா கல்வி பெறும் உரிமையை அடிப்படைச் சட்டமாக்கிய 135 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, இந்தியாவுக்கு முன் 134 நாடுகள் இச்சட்டத்தை இயற்றி, நமக்கு வழிகாட்டியுள்ளன.

 2010-ல் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளில் கல்வியாளர்கள் பல விமர்சனங்களைச் சுமத்தி வருகின்றனர்.

 குறிப்பாக, இலவசக் கட்டாயக் கல்வி என்று அறிவித்த பின் தனியார் பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு பள்ளி இருக்கும் பகுதியைச் சார்ந்த சாதாரண குடிமக்களின் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது சரியா என்பது சீரிய விவாதத்துக்கு ஆளாகியுள்ளது.

 அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற முழக்கத்தை முன்வைத்துள்ள கல்வியாளர்களும் இதை எதிர்க்கிறார்கள். பணம் கொடுத்துப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களில் சிலரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்க்கின்றனர். முன்னவரின் எதிர்ப்பு புரிந்துகொள்ளக் கூடியது. பின்னவர்களில், குறிப்பாக பெற்றோர் எதிர்ப்புப் புரியவில்லை. ஒரு பள்ளியில் எப்படி இரண்டு விதமான மாணவர்களைப் பராமரிப்பது. பணம் கொடுத்துப் பயிலும் மாணவர் மீது ஆசிரியர் கவனம் செலுத்துவதுதானே சரி. 25 சத ஒதுக்கீட்டில் வரும் மாணவர், வசதியான பிற மாணவரின் நோட்டு மற்றும் புத்தகங்களைத் திருடிவிட்டால் என்ன செய்வது என பலவாறு பெற்றோர்கள் கேட்டதாகத் தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 அது மட்டுமல்ல, 2011 பிப்ரவரியில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் மேற்படி பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி, நாட்டின் நலன் கருதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்கான முதலீடு எனக் கருதப்படும், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு என்ற கொள்கை குறித்து, யாரும் புகார் கொடுக்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளார்.

 மகிழ்வுக்குரிய தீர்ப்பாக இதைக் கருதலாம். உச்ச நீதிமன்றம் கடந்த 1993 உன்னிகிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போதும், கல்வி பெறுவது, உயிர் வாழும் அடிப்படை உரிமையுடன் இணைந்தது எனக் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம் தொடக்கத்தில் இருந்தே, பிரிவு 21 அடிப்படையில் கல்வி பெறும் உரிமை, ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தி உள்ளது. இங்கு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என சட்டம் இயற்றிய பின் தனியாரை நாட வேண்டிய அவசியம் என்ன?

 சட்டம் மிகமிகத் தாமதமானது. தாமதமான நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பாகும் என சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும், ஆட்சியாளர்கள் தாமதப்படுத்துகிறார்கள். விடுதலை இந்தியாவில், சுமார் 53 ஆண்டுகள், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியே, மேற்படி தாமதத்துக்குக் காரணம்.

 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதியைத் தொடர்ந்து ஒதுக்கீடு செய்துவந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசே இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க முடியும் என காங்கிரஸ் அரசு அமைத்த குழுக்கள் கோத்தாரி தொடங்கி, ஆச்சார்யா ராமமூர்த்திவரை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.

 ஆனாலும், அதிகபட்சமாக 4 சதம் தான் பட்ஜெட்களின்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கியூபா 18.7. மலேசியா 8.1, கென்யா 7, தென் ஆப்பிரிக்கா 5.3, தாய்லாந்து 5.2, எத்தியோப்பியா 4.6, உலக நாடுகளின் சராசரி 4.9, என கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது. ஆனால், இந்தியா 4 சதம் மட்டுமே மொத்த உற்பத்தியில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியாவில்தான் தேவை அதிகம். ஆனால், செயல் எதிர்மறையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இந்தியாவைவிட, பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் அல்ல என்பது முக்கியமானது.

 2009-ல் சட்டம் முன்மொழியப்பட்டபோது, 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டனர். சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும்போது, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது என்பதையும் அரசு விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் குறிப்பிட்ட நிலையில், எவ்வளவு தேவைப்படும், எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. சி.டபுள்யு.ஜி. (காமன்வெல்த் கேம்ஸ்), 2ஜி (ஸ்பெக்ட்ரம்), கே.ஜி. (கோதாவரி ஆற்றுப்படுகை கேஸ்) என்ற "ஜி' வரிசை ஊழல்களுடன் ஒப்பிடும்போது, கல்விபெறும் உரிமையை நிலைநாட்ட, நம் நாட்டில் பணம் ஒரு பிரச்னை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

 அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யத் தேவையான பணம், ஊழல்களில் கரைகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் கூட விழிப்புணர்வு சார்ந்ததே. மேற்படி ஊழல் குறித்த விசாரணைக்கு, நமது சி.பி.ஐ. மொரிஷியஸ் சென்றதாகச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

 1994 காலத்திலேயே, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து குறுகிய நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வரி இல்லை என்ற முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக மொரிஷியஸ் நாட்டுடன், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் டாக்டர் தர்மேந்திர பண்டாரி.

 இக்காலத்தில் மன்மோகன் சிங் நிதி அமைச்சர், அவர் வழிகாட்டுதல் இல்லாமல், மேற்படி உடன்பாட்டுக்கான நெறிமுறைகளை உருவாக்கிய செபி, ஆர்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி இருக்க முடியாது. கல்வி உரிமைக்காகத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டார்களோ இல்லையோ, ஊழல் பணத்தை முதலீடு செய்ய, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

 நெடுங்காலமாக அரசு சொல்லும் நிதியாதாரம் இல்லை என்ற செய்தி பொய் என்பதை, இதுபோன்ற தகவல்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த நிதி ஆதாரங்களையும் இதர பல முயற்சிகளாலும் அருகமைப் பொதுப் பள்ளிகளை அமைப்பதில் அரசு ஈடுபட வேண்டும். அருகமைப் பொதுப்பள்ளி என்பது சமூக, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வீட்டுக் குழந்தைகளும் கல்வி கற்கும் பள்ளிகள் ஆகும்.

 இந்த முறைதான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அணில் சடகோபால் என்ற கல்வியாளர், அருகமைப் பள்ளி முறை அமலுக்கு வந்தால், மிகப்பெரிய அளவில் எரிபொருள் சேமிக்கப்படும். ஏனென்றால், அருகமைப் பள்ளிகளுக்குக் குழந்தைகள் சென்றுவர, பேருந்துகள் தேவை இருக்காது, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதுகாக்கப்படும் என்று கூறுகிறார்.

 தமிழ்நாட்டில்கூட, இலவச பஸ் பாஸ் வழங்க அரசு செய்யும் செலவினமும் குறையும். பஸ் நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் நம் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளும் குறையும்.

 சட்டத்தின் விதி குறிப்பிட்டுள்ள 25 சத ஒதுக்கீட்டைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பது தேவையற்றது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் கவனம் செலுத்துகின்றனர். இது பாராட்டுக்குரியதே. ஓட்டலில் அமர்ந்தவுடன் குடிநீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்த பின்தான், உணவு வகைகளுக்கு ஆர்டர் செய்யும் குடும்பத்தினர் அதிகரித்து வருவதைக் காணலாம்.

 குடிக்கும் தண்ணீர் என்ற வெளிப்படையாகத் தெரியும் பொருள் மீது மட்டுமே நமது பராமரிப்பு அக்கறை இருக்கிறது. சமையல் பகுதியில் உள்ள சுகாதாரப் பராமரிப்புகள் குறித்து நாம் கவலைகொள்வதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உணவுக்கு விலை தருவது நியாயம், சுகாதாரமான குடிதண்ணீருக்கும் விலை தருவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பும் மனநிலை ஏன் உருவாக்கப்படவில்லை.

 இப்படி அடிப்படை உரிமை என்ற பட்டியலுக்குள் வரும் பொருள்களை, விலைபேசி விற்பதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருக்காது. மாறாக, படித்தவர்களே அறியாமையில் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது.

 தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள், தனியார் பள்ளிகளை நாட வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகள், சிறந்தமுறையில் பராமரிக்கப்பட்டாலே, அரசுப் பள்ளிகள் சிறந்ததாக மாற முடியும். நமது விழிப்புணர்வு மத்திய அரசின் கொள்கைக

திங்கள், 27 ஜூன், 2011

லோக்பால் மசோதா...


அரசு தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: லஞ்ச ஊழலில் சிக்கியவர்கள், அதனால் பயனடைந்தவர்கள் மற்றும் அந்த நிதியை கையாளும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும். அதாவது, தற்காலிகமாக 90 நாட்களுக்கு மட்டுமே, அந்த சொத்தை லோக்பால் அமைப்பு முதலில் கையகப்படுத்த வேண்டும்.அதே நேரத்தில், சொத்தை கையகப்படுத்திய விவரத்தை சிறப்பு கோர்ட்டுக்கு லோக்பால் அமைப்பு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கும் போது, அந்த சொத்துக்கள் உண்மையிலேயே ஊழல் பணம் மூலம் வாங்கப்பட்டது என, கோர்ட் நம்பினால், வழக்கு விசாரணை முடியும் வரை அந்த சொத்துக்களை முடக்கிவைக்க உத்தரவிடும்.

மேலும், ஊழல் குற்றச்சாட்டில் அரசு ஊழியர் ஒருவர் தண்டிக்கப்பட்டால், அவரின் சொத்துக்களை மத்திய அரசே நேரடியாக பறிமுதல் செய்ய முடியும். அந்த சொத்தின் மீது கடன் வாங்கியிருந்தாலோ, சொத்தை லீசுக்கு விட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது வில்லங்கம் இருந்தாலும், அது எதுவும் மத்திய அரசை கட்டுப்படுத்தாது.

லோக்பால் அமைப்பானது தங்களின் புலனாய்வு பிரிவில் உள்ள எந்த ஒரு விசாரணை அதிகாரியையும், எந்த இடத்தில் சோதனை நடத்தவும், எந்த ஆவணங்களை பறிமுதல் செய்யவும் அல்லது எந்தவிதமான விசாரணைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். விசாரணை அதிகாரிகளுக்கு, போலீசுக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.ஊழல் செய்த நபர்களிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள், விசாரணைக்கு ஆதாரமாக பயன்படும் என, லோக்பால் அமைப்பு கருதினால், அதை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் அல்லது லோக்பால் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி, அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

லோக்பால் அமைப்பின் உத்தரவுகளை செயல்படுத்தவில்லையெனில், அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரியிடம், விசாரணை அதிகாரியின் விசாரணை முடிந்தவுடன் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன், லோக்பால் அமைப்பே விசாரணை நடத்தலாம்.
இது போன்ற பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

லோக்பால் மசோதா: சமூக பிரதிநிதிகள் பரிந்துரை என்ன?அன்னா ஹசாரே தலைமையிலான சமூக பிரநிதிகள் குழுவினர் தயாரித்துள்ள வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள், அரசு தரப்பினர் தயாரித்துள்ள மசோதாவில் இடம் பெறவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை விடுவிக்க வேண்டும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்களை சமூக பிரதிநிதிகள் தரப்பில் தயாரிக்கப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக பிரதிநிதிகள் தரப்பினர் மசோதாவில் தெரிவித்துள்ள யோசனைகள் விவரம் வருமாறு:
* முறையான விசாரணை நடத்த லோக்பால் அமைப்புக்கு தேவையான நவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டும்.
* அனைத்து எம்.பி.,க்கள் தெரிவிக்கும் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் வழங்க வேண்டும்.
* ஊழல் விசாரணையை துரிதப்படுத்துவதற்கான ஆணையை லோக்பால் அமைப்பே கோர்ட்டுகளை நேரடியாக அணுகிப் பெற வேண்டும். அரசு மூலம் ஆணை பெறும் முறையை தவிர்க்க வேண்டும்.
* "பொது அமைப்புகள் தங்களின் பணி நடவடிக்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும்' என, பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும். இதன் மூலம் ஊழல் நடவடிக்கைகள் குறைவதோடு, ஊழல் செய்தவர்கள் பற்றி தகவல் கொடுப்போர் பழிவாங்கப்படுவதும் தடுக்கப்படும். மேலும், லோக்பால் அமைப்பின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா அல்லது நிராகரிக்கப்பட்டனவா என்பது குறித்த விவரங்களையும், சம்பந்தப்பட்ட அமைப்பினர் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
* ஊழலில் ஈடுபடும் எந்த ஒரு நிறுவனம் அல்லது கான்ட்ராக்டர் அல்லது இதர நபர்களின் லைசென்ஸ், குத்தகை உரிமம், அனுமதி, கான்ட்ராக்ட், ஒப்பந்தம் போன்றவற்றை ரத்து செய்யும் அதிகாரத்தை அல்லது மாற்றி அமைக்கும்படி பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும்.
* மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
* லஞ்சம் கொடுப்பவர்கள், அது பற்றிய தகவலை தானாகவே முன்வந்து தெரிவித்தால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
* லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிபதிகள், இரண்டு ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், லோக்பால் அமைப்பின் முந்தைய தலைவர்கள் இடம் பெற வேண்டும்.
* தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டும்படி உத்தரவிடும் அதிகாரம், தகவல்களை கண்காணிக்க உத்தரவிடும் அதிகாரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.இவ்வாறு சமூக பிரதிநிதிகள் தரப்பு வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்...dm

நமது நாட்டில் சட்டம் இயற்றுவதில் நாம் காட்டும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் அந்தச் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உணவு என்று கடந்த ஐந்து ஆறு வருடங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதனாலெல்லாம் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கையோ, பள்ளிக்குப் போகாத குழந்தைகளின் எண்ணிக்கையோ குறைந்திருக்கிறதா என்பது உலகறிந்த ரகசியம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இயற்றிய சட்டங்களிலேயே அதிகமான பயனளித்திருக்கும் சட்டம் ஒன்று இருக்குமானால் அது தகவல் பெறும் உரிமைச் சட்டம்தான். எந்தத் துறையிலிருந்தும், எந்தத் தகவலை வேண்டுமானாலும் பெறுவதற்கு உதவும் இந்தச் சட்டத்தின் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்கிற குறிக்கோளுடன் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது.
தகவல் ஆணையமும் சரி, தகவல் பெறும் உரிமைச் சட்டமும் சரி, ஓரளவுக்கு பயனளித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியேகூட இந்தச் சட்டத்துக்குப் புறம்பானவராக இருக்க முடியாது என்று ஒரு சாதாரணக் குடிமகன் கோருமளவுக்கு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டமாக இது அமைந்திருக்கிறது.
அகில இந்திய அளவில் பல தகவல்களை இந்தச் சட்டத்தின் உதவியுடன் கோரிப் பெற முடிந்திருக்கிறது. அதன் விளைவாகப் பல முறைகேடுகளும், அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் தொடர்புடைய ஊழல்களும்கூட வெளி வந்திருக்கின்றன. யாரையும் தட்டிக் கேட்கவும், தவறு நடந்திருந்திருந்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டவும் இந்தச் சட்டம் ஊடகங்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்கிற நிலைமைதான் தொடர்கிறது. மாநிலத் தகவல் ஆணையத்தின் செயல்பாடு என்பது கையையும், காலையும் கட்டிப் போட்ட நிலையில்தான் தொடர்கிறதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக, தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்படுபவர்கள், அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் என்பதால், தங்களுடன் பணியாற்றிய சக அதிகாரிகளைக் காப்பாற்றுவதில் காட்டும் முனைப்பை, தகவல் கோரும் குடிமகனின் கேள்விக்குப் பதிலளிப்பதில் காட்டுவதாகத் தெரியவில்லை.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சில தகவல்களை ஒருவர் கோருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள தகவல் அதிகாரி கடமைப்பட்டவர். அவர் தவறான தகவல்களை அளித்தாலோ, அரைகுறைத் தகவல்களை அளித்தாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு உண்டு. இது போன்ற பிரச்னைகளில், ஆணையம் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் வழி இருக்கிறது.
இதுவரை அப்படி தகவல் ஆணையத்தால் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதம் கட்டிய அதிகாரிகள் எத்தனை பேர் என்கிற புள்ளிவிவரம் கிடைக்காது. காரணம், மிகச் சிலர் மட்டும்தான் தகவல் ஆணையத்தின் உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறார்கள். பெருவாரியான அதிகாரிகள், தகவல் ஆணையத்தின் ஆணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிடுகிறார்கள்.
சாதாரணமாகத் தடை உத்தரவு வாங்கினால் கூடப் பரவாயில்லை. தங்களது தடை உத்தரவு மனுவில் தகவல் பெற விண்ணப்பம் கொடுத்தவரையும், தகவல் ஆணையத்தையும் எதிர்தரப்பினராகச் சேர்த்து விடுகிறார்கள். நல்லெண்ணத்துடன் தகவல் பெற முயன்றவர் நீதிமன்றம், நோட்டீஸ் என்பதை எல்லாம் பார்த்து பயந்து, விட்டால் போதும் என்று ஒதுங்கி விடுகிறார்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் விசாரித்தால், ஆணையமே ஒரு நீதித் துறை போன்ற அரசியல் சட்ட அமைப்பு என்பதால் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறது. இதை உயர்நீதிமன்றமே ஒரு வழக்கில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தகவல் ஆணையமும் தனது தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவை விலக்கத் தயாராகாமல், தகவல் கோரியவரும் சலித்துப் போய் வேண்டாம் விவகாரம் என்று ஒதுங்க, முறையாகத் தகவல் தராமல், அல்லது பொய்யான தகவலைத் தந்த அதிகாரி சாதுர்யமாகத் தப்பித்துக் கொள்கிறார். இதுவரை ஏறத்தாழ 50க்கும் அதிகமான தகவல் அதிகாரிகள் தவறான தகவல் தந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தும், உயர் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று சட்டத்தின் ஓட்டை வழியாகத் தப்பி இருக்கின்றனர்.
தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பிப்பதில்லை என்று நீதித்துறை முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், தவறான தகவல் அளித்த அதிகாரிகளை இடைக்காலப் பணிநீக்கம் செய்ய அரசாவது முன்வர வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில், சட்டம் பிரேம் போட்டு சுவற்றில் மாட்டிய சட்டமாகத் தொங்குமே தவிரத் தனது கடமையைச் செய்யாது.
சட்டம் போட்டாகிவிட்டது என்றாலே எல்லாம் ஆயிற்றா என்ன?

வெள்ளி, 24 ஜூன், 2011

சமச்சீர் கல்வி.. கல்வி மாபியா.....

சனிக்கிழமை, 18 ஜூன் 2011 08:22
சமச்சீர் கல்வி என்ற அறிவிப்பை திமுக அரசாங்கம் வெளியிட்ட உடனேயே, ஆயில் மாபியா, அன்டர்வேர்ல்ட் மாபியாவை விட சக்தி வாய்ந்த கல்வி மாபியா களத்தில் இறங்கியது.

உடனடியாக இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஏப்ரல் 2010ல் சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக அரசின் ஆணை, சரியே என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இந்த கல்வி மாபியா மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய போதும், செப்டம்பர் 2010ல், உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும், தமிழக அரசின் முடிவு சரியானதே என்று தீர்ப்பளித்தது.

இந்த கல்வி மாபியாவானது, பல கோடி ரூபாய் வருவாயை பார்த்து விட்டு, கல்வித் துறையில் அரசு செய்யும் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாது. அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களையும், புற வாசல் வழியாகவோ, அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ, தடுப்பதில் மிக மிக சாமர்த்தியமானது.

அரசு, கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக கோவிந்தராஜன் கமிட்டியை தடுப்பதற்கு, நீதிமன்ற வழியைத் தான் கல்வி மாபியா நாடியது. ஆனால், நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத காரணத்தால், புறவாசல் வழியாக அணுகி நீதிபதி கோவிந்தராஜன், அவர்கள் தானாக முன் வந்து, கல்விக் கட்டண நிர்ணயிப்பு கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு செல்ல வைத்தது.

அதற்கு அடுத்து, கருணாநிதியிடம், கையேந்தி, வீட்டு மனை பெற்ற, ரவிராஜபாண்டியனை, அந்தக் கமிட்டியின் தலைவராக போட்டு, தங்கள் இஷ்டம் போல கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள வைத்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்…. யாரும் மறுக்கவில்லை.   அதற்காக அந்தத் திட்டமே மோசமானது, மாணவர்களின் தரத்தை குறைத்து விடும் என்ற வாதம் வலுவற்றது.   ஏற்றத் தாழ்வுள்ள ஒரு சமுதாயத்தில், அந்த ஏற்றத் தாழ்வை குறைக்க எடுக்கப் படும் முதல் முயற்சி இந்த சமச்சீர் கல்வி.

1974ம் ஆண்டு, நாராயண்தாஸ் என்பவருக்கும், மத்தியப் பிரதேச அரசுக்கும் இடையே நடந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், இவ்வாறு கூறியுள்ளது.

One thing is clear that in order to achieve a uniform standard of excellence in education in all the schools within the State, it is necessary that there should be uniform courses of instruction which are properly thought out and devised by experts on the subject and for giving proper and adequate training in such courses, there should be standardised text books. That would not only ensure uniformity in standard but also achieve efficiency in instruction. Moreover, it would prevent use of poor quality text books which frequently find way in the schools on account of certain dubious financial arrangements between the management and the printers and publishers of those text books.

ஒரே சீரான தரமான கல்வியை வழங்குவதில் சிறப்படைய வேண்டுமென்றால், கல்வியில் சிறந்த அறிஞர்களைக் கொண்டு, உருவாக்கப் பட்ட, தரமான பாட நூல்கள், நன்கு ஆராய்ந்து ஒரே மாதிரியாக உருவாக்கப் படுதல் அவசியம் என்பது தெளிவாகிறது.   அவ்வாறு உருவாக்குவது, சமன்படுத்துவது மட்டும் ஆகாது, கல்வி கற்பிப்பதை சிறப்படையவும் செய்யும்.   சில தனியார் வணிக வியாபாரிகளின் நலனுக்காக, தரம் குறைந்த புத்தகங்களை மாணவர்களுக்கு பரிந்துரை செய்வதையும் இது தடுக்கும்.

பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிகுலேஷனையும், சிலர் சிபிஎஸ்ஈ பிரிவையும், மற்ற சிலர் ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் என்றும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். இதில் சிபிஎஸ்ஈ வைத் தவிர்த்து, மற்ற கல்வி முறைகளை இணைத்து, ஒரு தரமான ஒரே சீரான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே சமச்சீர் கல்வித் திட்டத்தின் நோக்கம்.

இதில் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதில், சில குறைபாடுகள் இருக்கலாம்.   திருத்தங்கள் தேவைப்படலாம். ஆனால், அந்தத் திருத்தங்களை செய்து, இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான், ஏழைகளின் நலனை கருத்தில் கொண்ட அரசு எடுக்கக் கூடிய முடிவாக இருக்க முடியும்.    சமச்சீர் கல்வி தரம் குறைந்தது என்று கருதும் பணம் படைத்த பெற்றோர்கள், எப்போதும் சிபிஎஸ்இ பாடவழியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளலாம் தானே ?   தரம் குறைந்து விட்டது, தரம் குறைந்து விட்டது என்று கூப்பாடு போடும் கூட்டத்தினர், அப்துல் கலாம் எந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து விஞ்ஞானி ஆனார் என்பதை விளக்க வேண்டும்.  
 jaya2_20110614
ஆனால், ஜெயலலிதா, இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி கிடையாது என்று தடாலடியாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தார். இதைக் கேட்டு, கல்வி மாபியா அகமகிழ்ந்தது…. இது அட்மிஷன் நேரம் இல்லையா ? கோடிகளை அள்ள வேண்டாமா ?

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில், சமச்சீர் கல்வியை ரத்து செய்து, அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பள்ளிகள் திறக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. தாமதமானால், பாடங்களை முடிக்க மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, மிகுந்த சிரமப்படுவார்கள். ஆனால், தமிழக அரசு, பிடிவாதமாக உச்சநீதிமன்றம் சென்றது.

உச்சநீதிமன்றம், ஒரு கமிட்டியை அமைத்து, அந்தக் கமிட்டி, இந்த விபரங்களை ஆராய்ந்து 3 வாரங்களுக்குள், தங்களது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நாள்தோறும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தக் கமிட்டியில், தலைமைச் செயலாளர், என்சிஈஆர்டியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், மாநிலத்தின் இரண்டு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், மற்றும் கல்வித் துறை செயலர் மற்றும், கல்வி இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்கள் என்றும் உச்சநீதிமன்றம் வரையறை செய்தது.

இதையொட்டியே, தமிழக அரசு, 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்கள்,  எப்படி அமைய வேண்டும் என்பதையும், உச்ச நீதிமன்றமே வழிகாட்டியிருந்தது.   தமிழகத்தின் தலைமைச் செயலாளர் தலைமையில், தேசிய கல்வி மற்றும் ஆராய்சிக் கழகத்தின் சார்பில் (NCERT) இரண்டு உறுப்பினர்களும், இரண்டு மாநில பிரதிநிதிகளும், இரண்டு கல்வியாளர்களும், மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதையொட்டி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட உறுப்பினர்கள் பட்டியலே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசின் பிரதிநிதிகளாக முன்னாள் கல்வி இயக்குநர் பாலசுப்ரமணியன் மற்றும் லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளனர்.

கல்வியாளர்கள் என்ற பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள் குறித்துதான், பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். முதலாமவர், டிஏவி பள்ளிகளின் நிறுவனர் மற்றும், செயலாளர் ஜெயதேவ். மற்றவர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் மற்றும் இயக்குநர், திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி.
 10THBHOOMA_653928f
சென்னையில் உள்ளவர்கள் நன்கு அறிந்த விஷயம், டிஏவி மற்றும் பத்மா சேஷாத்ரி பள்ளிகள் யாருக்காக நடத்தப் படுகின்றன என்பது. டிஏவியில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் மற்றும், சென்னை நகரத்தின் பெரும் பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் நுழையவே முடியாது. மற்றவர்களை பள்ளியின் வாசல் அருகே கூட சேர்க்கமாட்டார்கள்.

பத்மா சேஷாத்ரி பள்ளி என்பது, பார்ப்பன சனாதன தர்மங்களை தூக்கிப் பிடிக்கும் ஒரு பள்ளி.   இளம் மாணவர்களுக்கு, காயத்ரி மந்திரமும், மற்ற பிற்போக்கான இந்த சனாதனங்களையும் சொல்லித் தரும் ஒரு பள்ளி அது.   இதுவும், டிஏவியிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதல்ல.

இந்த இரண்டு உறுப்பினர்களுக்கும், ரிக்ஷா இழுக்கும் நபரின் பிள்ளைகளும், பூ விற்பவரின் பிள்ளைகளும் என்ன கல்வி பயில வேண்டும், எப்படிப்பட்ட பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது தொடர்பாக என்ன அக்கறை அல்லது புரிதல் இருக்க முடியும் ? லட்சக்கணக்கில் நன்கொடை வசூல் செய்து, அந்தப் பணத்தில் திளைக்கும் இந்த இரண்டு நபர்களும், ஏழைகள் நல்ல கல்வி பெறுவதற்கான எதிரிகள் என்றால் அது மிகைச் சொல் அல்ல. வறுமையோ, பசியோ, ஏழைகள் படும் பாட்டையோ, இந்த இருவரும், சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பார்கள்.

இது போகவும், கல்வியாளர்கள் என்ற வரையறைக்குள் இவர்கள் இருவரும் எப்படிப் பொருந்துவார்கள் ?   எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மெட்ரோ வாட்டர் வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஜேப்பியார். இவருக்கு பிரதான வேலை, சென்னை நகரில் சாராயம் காய்ச்சி விற்பதுதான்.   இவர் இன்று ஐந்து பொறியியல் கல்லூரிகளுக்கும், சத்யபாமா என்ற ஒரு பல்கலைகழகத்துக்கும் உரிமையாளர். இத்தனை கல்லூரிகளை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பதற்காக இவர் கல்வியாளர் ஆகி விடுவாரா ?

முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, சிகா கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில், ஆசிரியர் பயிற்சிக் கழகம், பொறியியல் கல்லூரி ஆகியவற்றை வைத்திருக்கிறார்.   இந்த கல்வி நிறுவனங்களை வைத்திருப்பதால், இவர் கல்வியாளராகி விடுவாரா ?

எஸ்.எஸ்.ராஜகோபால், பேராசிரியர்.வசந்தி தேவி, பேராசிரியர். பிரபா.கல்வி மணி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, போன்றோர், ஜெயலலிதா அரசாங்கத்தின் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் இல்லாவிட்டாலும் கூட, ஒரு மாநகராட்சிப் பள்ளியில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரைப் போட்டிருந்தால் கூட, அவருக்கு ஏழை மாணவர்களின் சிரமங்கள் புரியுமே…

மொத்தம் உள்ள 9 பேர் கொண்ட குழுவில், என்சிஇஆர்டி உறுப்பினர்கள் இரண்டு பேரைத் தவிர, மீதம் உள்ள 7 பேரையும், அதிமுக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக நியமித்து, அவர்கள் மூலமாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வளைத்து, குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர், சமச்சீர் கல்வி இப்போதைக்கு தேவையில்லை, சமச்சீர் கல்வியை செயல்படுத்தினால், மாணவர்களின் அறிவு இப்போது இருப்பதை விட குறைந்து விடும், கடந்த திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் மாணவர்களின் அறிவுத் திறனை பன்மடங்கு வளர்ப்பதற்கு, தற்போது உள்ள கல்வி முறையே சிறந்தது, மேலும், தற்போது வசூலிக்கப் படும் கட்டணம், மிக குறைவாக இருப்பதால், மேலும் ஏராளமான கட்டணம் வசூலித்து, மாணவர்களுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை வழங்க வேண்டும், மாணவர்கள் மறந்து போய் விட்ட மனுதர்மத்தை அவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்த்து, தலித்துகளை தொட்டு விட்டால் தீட்டு எப்படி கழிப்பது என்பதையும் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விட வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ?

அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியே சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் போனதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், விடாப்பிடியாக சமச்சீர் கல்வியை ஒழித்தே தீருவது என்ற நோக்கத்திலேயே ஜெயலலிதா அரசு செயல்படுவதாக கருத வேண்டியுள்ளது.
 17.06.2011
அன்பார்ந்த ஜெயலலிதா அவர்களே…. தமிழ்நாட்டின் பெரும் பான்மையான ஏழை, விளிம்பு நிலை மக்கள் தான், உங்களுக்கு வாக்களித்து இன்று முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள்… அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தது, டிஏவியிலும், பத்மா சேஷாத்திரியிலும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும், உண்டு கொழுத்த கூட்டமல்ல….   உழைப்பாளிக் கூட்டம்.   உங்கள் அரசு அவர்கள் நலனைத் தான் கருத்தில் கொள்ள வேண்டுமே ஒழிய, குறுக்கே நூலணிந்த கூட்டத்தின் நலனை அல்ல ?   அவர்களுக்கு தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள நன்றாகவே தெரியும்.
 SKM_0039
கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம் மற்றும் உளவியல் சம்பந்தப் பட்ட விஷயம். உங்கள் பிடிவாதத்தினால் ஒரு தலைமுறையின் கல்வியை நாசப்படுத்தி விடாதீர்கள்.

சிக்கலில் செட்டி நாட்டு சீமான்…..


எழுத்தாளர் சவுக்கு    
 வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 13:50



பழனியப்பன் சிதம்பரம் அவர்களுக்கு செட்டிநாட்டுச் சீமான் என்று சவுக்கு பெயர் வைக்கவில்லை. இந்தப் பெயரை வைத்தது, சிதம்பரத்துக்கு இன்று நெருக்கமாக இருக்கும் கருணாநிதி.   1991 – 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், சிதம்பரம் மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தார்.   அப்போது நடந்த ஒரு விழாவில், மேடையில் சிதம்பரத்துக்கு நாற்காலி போடாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது, சிதம்பரத்தைப் பார்த்து கருணாநிதி கூறியதுதான் ”செட்டிநாட்டுச் சீமான் கைகட்டி நிற்கிறார்” என்பது.



செட்டி நாட்டு சீமான் சிதம்பரம் சிக்கலில் மாட்டப் போவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன.   உள்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் சிதம்பரம், 2009 பாராளுமன்றத் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றார் என்று, ஜெயலலிதா டெல்லியில் பேட்டியளித்த போதே, சிதம்பரம் கலக்கமடைந்தார்.



மேலும், சாமான்யத்தில் முடிவு தெரியாத வழக்குகளாகத் தான் தேர்தல் வழக்குகள் இருப்பது வழக்கம். இந்த வழக்கை விரைவாக விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதும், சிதம்பரத்தின் கலக்கத்துக்கு காரணமாக இருந்தது. இந்நிலையில் டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.



அது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஆ.ராசாவுக்கு பங்கு இருந்தது போலவே சிதம்பரத்துக்கும் பங்கு இருந்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். டாக்டர்.சுவாமி கூறும் குற்றச் சாட்டில் அடிப்படை இல்லாமல் இல்லை.   ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவுகள் எடுத்ததில், சிதம்பரமும் பங்கு வகித்துள்ளார் என்பது அது தொடர்பான கோப்புகளில் இருந்து தெரிய வருகிறது.   ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கு துளியும் பங்கு இல்லை, அத்தனையும் செய்தது திமுகவே என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ் பக்கம், இந்த ஊழல் விசாரணை பாயாமல் பார்த்துக் கொள்கிறது மத்திய அரசு.

இது தொடர்பாக நேற்று சுப்ரமணிய சுவாமி ஒரு ஆதராத்தை வெளியிட்டார். அது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் நோட் பைல் எனப்படும் அலுவலகக் குறிப்பு. 5 நவம்பர் 2009ல் அப்போது அமைச்சராக இருந்த ராசா, ஒரு குறிப்பை எழுதுகிறார்.



அந்தக் குறிப்பில் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுத்த பின்னர், அவை தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்தது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.   இது தொடர்பாக நிதி அமைச்சர் சிதம்பரத்தோடும், பிரதமர் மன்மோகன் சிங்கோடும், கலந்தாலோசிக்கப் பட்டது.   அந்த கூட்டத்தில், நிதி அமைச்சர் சிதம்பரம், வியாபாரத்தை விரிவாக்குவதற்காக, அந்நிய முதலீட்டை வரவேற்பது, லைசென்சை விற்பனை செய்வதாகாது என்று அருள்வாக்கு கொடுத்திருப்பதாக ராசா அந்தக் குறிப்பில் தெரிவிக்கிறார்.



அதாவது 1700 கோடிக்கு லைசென்ஸ் வாங்கி விட்டு, யூனிடெக் நிறுவனம், நார்வேயின் டெலிநார் நிறுவனத்துக்கு, 9100 கோடிக்கு தனது 67 சதவிகித பங்குகளை விற்பனை செய்தது என்பது, லைசென்சை விற்றது ஆகாது என்கிறார் சிதம்பரம். நன்றாக இருக்கிறதய்யா உமது நியாயம்.



டாக்டர் சுவாமி சிதம்பரம் மீது வீசிய அடுத்த குண்டு, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்க ஏற்பாடு செய்தவர் சிதம்பரம் தான் என்று. சுவாமியின் குற்றச் சாட்டை உதாசீனப் படுத்த முடியாத அளவுக்குத் தான் அந்த விவகாரம் நடந்திருக்கிறது.



கடந்த செப்டம்பர் மாதம், பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப் பட்டிருப்பதாக மன்மோகன் சிங்குக்கு பிரணாப் கடிதம் எழுதுகிறார்.   அதற்கு முன்பாக, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்திடம் (Central Board for Direct Taxes) இந்த விவகாரத்தை பற்றி விசாரிக்க உத்தரவிடுகிறார் பிரணாப்.   அந்த நிறுவனம், தனியார் துப்பறியும் நிறுவனங்களை வைத்து, அந்த ஒட்டுக் கேட்கும் கருவிகள் இருக்கிறதா என்று ஆராய்ந்து, 13 இடங்களில் சூயிங் கம் பொருத்தப் பட்டிருப்பதை கண்டு பிடித்தது. இதில் எழும் முக்கியமான ஒரு கேள்வி, நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர், ஒட்டுக் கேட்கும் கருவிகள் இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்ததும், மத்திய உளவுத் துறையிடம் (Intelligence Bureau) ஏன் சொல்லவில்லை.   அடுத்த கட்டிடத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் சொல்லாமல், ஒரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.



ஜெயலலிதா வீசிய முதல் அஸ்திரம், சிதம்பரத்தை சுற்றி சுற்றி அடிப்பது நிற்பதற்குள்ளாகவே, அடுத்த சிக்கலில் சிக்கியிருக்கிறார் சிதம்பரம்.   சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதை விரும்பாத சக்திகள் இது போல செயல்படுகின்றன என்றும் ஒரு தியரி சொல்லப் படுகிறது. மற்றொரு தியரி, ராகுல் காந்திக்கு போட்டியாக, தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை வளர்ப்பது, சோனியாவுக்கே பிடிக்காத காரணத்தால் சோனியாவே, சிதம்பரத்தை இது போல சிக்கலில் இழுத்து விடக் கூடும் என்றும் சொல்லப் படுகிறது.



எது எப்படியோ, கத்திரிக்காய் முற்றினால், கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

கச்சத் தீவின் வரலாறு...


சவுக்கு
 எழுத்தாளர் சவுக்கு    
 புதன்கிழமை, 22 ஜூன் 2011 13:12







நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற இளைய தலைமுறையினரும் இனி வரப்போகின்ற தலைமுறைகளும் போற்றி பாராட்டும் வகையில், என்றும் நினைவு கூறும் விதமாக... முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, வரலாற்றுத் தேவை மிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.



“கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். கச்சத் தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக வருவாய் துறையையும் செர்த்துக் கொள்ளவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.



தீவு என்றாலே நீரில் மூழ்கியும் மூழ்காமலும் இருக்கும் நிலப்பகுதிதான். கச்சத் தீவு பற்றிய பல உண்மைகளையும் மூழ்கடித்து வந்தன. இந்நிலையில் கச்சத் தீவு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அலசுவதற்கும் ஆராய்வதற்கும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஒரு வாசலாக இருக்கிறது.



கச்சத் தீவு பற்றி இந்தத் தலைமுறைக்கே தெரியாத உண்மைகள் இதோ...



தாரை ஒப்பந்தம்



28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.



இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.



ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.



கச்சத் தீவின் வரலாறு...



கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். ராமநாதபுரம் மன்னா; சேதுபதி அவா;களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளாh;.



1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல்; புனித அந்தோணியாh; ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்... ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு,       “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.



இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனா;. அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.



வாலி தீவு



கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார். எவ்வளவு பெரிய இந்து மத நம்பிக்கையை நாம் இழந்துள்ளோம்!



காரணங்கள்...



இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் நம்பிக்கைகளை மறைத்தும் மறுத்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? முதன்மையானது 1974-ல் இலங்கை இந்தியாவிற்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரம். அந்தக் கால கட்டத்தில் இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தி, உலக நாடுகளின் கண்டனக் கணைகளை எதிர் கொண்டது. ஜ.நா. சபையில் பாகிஸ்தான், மேற்படி இந்தியாவின் அணு சோதனைக்குக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றது.



இலங்கை அப்போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவால், பாகிஸ்தானின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இலங்கையின் பண்டார நாயகா பதவிக்கு வரும் வரையில் கச்சத் தீவு தொட்ர்பாக எந்த உரிமையையும் இலங்கை கோரவில்லை. ஆனால், பண்டார நாயகா பதவிக்கு வந்த பிறகே கச்சத் தீவின் மீது இலங்கை பல உரிமைகள் கோரியது. கோரிக்கைகளை சாக்காக வைத்து 1974-ல் இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவை கேட்டு பெற்றது. 23.03.1976-ல் இந்தியாவின் வெளியுறவு செயலர் கிளிவல். சின்சிலும் இலங்கையின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர் ஜெயசிங்கேயும் ஒரு சீராய்வு ஒப்பந்தத்தை இரு நாடுகள் சார்பாக ஏற்படுத்தினர். அதன்படி கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமை இந்தியாவிற்கு இல்லை என அறுதியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி செய்தது என்ன?



அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸி அமலாக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை. கச்சத் தீவு மீட்கப் பட வேண்டும்’ என இன்று கூறுகிறாh; கருணாநிதி. ‘பல முறை சொன்னால் பொய்யும் உண்மையாகும்’ என்பதை மனதில் கொண்டுதான்   அவா; இதை தொடர்ந்து சொல்கிறார். 1969 - லிருந்து 1971 வரை என்ற முதல் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து... 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாவது ஆட்சிக் காலம் வரை மேற்படி காலகட்டத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் உருப்படியாக ஒன்றுமே அவா; செய்யவில்லை.



‘தமிழர்களே, தமிழர்களே, என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன். என் மீது ஏறி பயணம் செய்யலாம்’ என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டுவதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு ஒரு உதாரணம் 09.12.2009 அன்று ‘கச்சத் தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார்’ என அறிவித்தார் கருணாநிதி. அதன் பிறகு, 09.12.2009 முதல் 28.02.2011 வரை கச்சத் தீவு பற்றி மூச்சு கூட விடவில்லை அவர். ஆனால், ‘கச்சத் தீவை மீட்போம்’ என 2011 தேர்தலிலும் வாக்குறுதி அளித்தார். இதுவும் வெறும் காகிதம் தான் என்று மக்கள் புரிந்துவைத்திருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.



ஜெயலலிதா செய்தது என்ன?



நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் மட்டுமல்ல... 1991-ல் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்தபோது, 1994-ல் கச்சத் தீவை நீண்ட கால லீஸ் மூலம் திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தார். பிறகு 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு தொடர்பாக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று 2004-ல் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

பிறகு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட, ஆகஸ்ட் 2008-ல் இந்திய உச்ச நீதீமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கச்சத் தீவு தொடா;பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும். கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும். ஏனெனில், மேற்படி கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கூட்டி ஒப்புதல் பெறப்படவில்லை’ என்று வழக்கு தொடுத்தார். இதில் 1960-ல் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கொடுக்க முயன்றபோது அதைத் தடுத்து உத்தரவிட்ட உச்ச நீதீமன்றத் தீர்ப்பை மேற்கோளும் காட்டியுள்ளார் ஜெயலலிதா. மேலும் CONVENTION OF LAW OF THE SEA ன் படி ஐ.நா. சபையின் முடிவுகளை தனது வழக்கில் சாதகமாக எடுத்து வைத்துள்ளாh;.

ஏன் மீட்கவேண்டும் கச்சத் தீவை?



13.08.1983-ல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் முதல் தாக்குதல் நடைபெற்றது. 10.12.1984-ல் ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி எனும் அப்பாவி, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து, முதல் கணக்கை ஆரம்பித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3000-த்திற்கும் மேலான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளனர். தமிழக அரசின் அறிக்கைப்படி சுமார் 400 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கணக்கு கூடுதலாகத்தான் இருக்க முடியும். மூவாயிரத்துக்கும் மேலான தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்

போருக்கு வித்திடும் கச்சத் தீவு



கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்யும் பட்சத்தில், ஜக்கிய நாடுகளின் சபையில் இந்தியா சரியாக முயற்சிக்கும் சூழலில், கச்சத் தீவு எப்போதும் இந்தியாவின் அங்கம் எனும் பொதுமக்களின் கனவு நனவாகும். இல்லையென்றால், 1974-ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த P.K.M. தேவர் நாடாளுமன்றத்தில் பேசியது நடந்து விடும்.



“இலங்கை தனது ராணுவத்தை கச்சத் தீவிற்கு திருப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய மீனவா;களின் மோட்டார் படகுகள் கச்சத் தீவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக மீனவர்களின் உயிருக்கு ஆபத்து. தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்பட ஆளிள்லை. கச்சத் தீவு விவகாரம் எதிர்காலப் போருக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது. நமது நாட்டின் உயிர் பிரச்சினைக்குச் சவாலாக இருக்க போகும் ஒரு விஷயத்திற்கு இது அடித்தளமாக இருக்கப் போகிறது. இந்தியாவின் பிரிவினைக்கு மகாத்மா காந்தியை பலி கொடுத்துள்ளோம். கச்சத்தீவை தமிழகத்தின் அங்கமாக பார்க்காதீர்கள். புனித இந்தியாவின் அங்கமாக கருதுங்கள். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுங்கள்” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசினார் தேவர்.



இன்றும் அந்த நிலைமை தமிழனுக்கு நீடிக்கிறது. சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு - குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது!





ந.இராஜா செந்தூர் பாண்டியன்

வழக்கறிஞர்.

சன் டிவியின் வளர்ச்சி ....


எழுத்தாளர் சவுக்கு    
 செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 14:01



தயாநிதி மற்றும் கலாநிதி மாறனை இத்தனை நாளாக தழுவியிருந்த அதிர்ஷ்ட தேவதை சுத்தமாக கைகழுவி விட்டதாக தெரிகிறது.



2004 பாராளுமன்றத் தேர்தலின் போது, முரசொலி மாறனின் மறைவால், மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு, கருணை அடிப்படையில் நியமிக்கப் பட்டவர்தான் தயாநிதி மாறன். அந்தப் பதவியே கனிமொழி போட்ட பிச்சைதான்.   முதலில் அந்தத் தொகுதிக்கு கனிமொழியை வேட்பாளராக நியமிக்கலாம் என்று, கருணாநிதி எடுத்த முடிவு, கனிமொழி அரசியலில் இறங்க அப்போது மறுத்ததால் தயாநிதிக்கு அந்த யோகத்தை அளித்தது.



அதற்குப் பிறகு, மாறன்களின் நடத்தையால் தான் அவர்கள் சிஐடி காலனியின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.   எம்.பி பதவியை பெறுவதற்கு முன்பாக, ராசாத்தி அம்மாளின் தயவு வேண்டி, அவர்கள் வீட்டிற்கு நடையாக நடந்தவர்கள், பதவி கிடைத்து மந்திரியானதும், சிஐடி காலனியை சுத்தமாக புறக்கணித்ததாக தெரிகிறது.   இந்தப் புறக்கணிப்பும் உதாசீனப்படுத்தலுமே, ராசாத்தி அம்மாளை கனிமொழிக்கும், அரசியல் அதிகாரம் இருந்தால் தான், குடும்பத்தில் கவுரவமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும், வெறுமனே கருணாநிதியின் பாசம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது.



2004ல் தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு, கணிசமான செல்வாக்கை பெற்றுத் தந்ததும், தொலைத் தொடர்புத் துறையை கேட்டுப் பெற்றால் தங்களின் தொழில்களுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று மாறன்கள் உணர்ந்தே, அந்தத் துறையை பெற வேண்டும் என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.   மாறன் சகோதரர்களின் உள்நோக்கத்தை அறியாத கருணாநிதியும், அவர்கள் விருப்பத்தின் படியே, தொலைத் தொடர்புத் துறையை மத்திய அரசோடு மல்லுக் கட்டி பெற்றுத் தந்தார்.



தொலைத் தொடர்புத் துறை தங்களது கையில் வந்த நாள் முதலாகவே, மாறன்கள், அந்தத் துறையை தங்களின் தனிப்பட்ட தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.   எப்.எம் லைசென்ஸ், நேரடியாக வீட்டுக்கு வரும் டிடிஎச் சேவை, ஆகியவற்றில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல கோடிகளை சம்பாதித்தது கருணாநிதிக்குத் தெரியும் என்றாலும், இப்போது வெளியில் வந்திருக்கும் அளவுக்கு சம்பாதித்திருப்பார் என்று அவரே நினைக்கவில்லை.



மத்திய அமைச்சராக தயாநிதி ஆன பிறகு, அவர்களின் சொத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மாறன்களின் வாழ்க்கை முறையும் மாறத் தொடங்கியது.   2006ல் அதிகாரத்துக்கு வந்த பின்னால், அழகிரி மற்றும் ஸ்டாலினிடம் ஏராளமான அதிகாரம் இருந்தாலும், மாறன்களின் லைப் ஸ்டைலைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சலே வந்தது. மிக மிக பகட்டான வாழ்க்கை முறை, ஏழு பென்ஸ் கார்கள் என்று ஆடம்பரமும், பகட்டும் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.



2006க்கு முன்பாக, கருணாநிதி குடும்பத்தினர் சன் டிவியில் வைத்திருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு தொகையை அளித்தனர். அது வரை சன் டிவி பங்குச் சந்தையில் வெளியிடப்படவில்லை என்பதால், உத்தேசமாக ஒரு விலையை நிர்ணயித்து, தயாளுவுக்கும், கருணாநிதிக்கும் ஒரு பத்து கோடியை அளித்ததாக நினைவு.



ஆனால், பங்குச் சந்தையில் ஆகஸ்ட் 2006ல் மாறன் சகோதரர்கள் சன் டிவியின் பங்குகளை வெளியிடுகிறார்கள். வெறும் பத்து சதவிகித பங்குகளை வெளியிடுகிறார்கள்.   இந்த 10 சதவிகித பங்குகள் மொத்தம் 68 லட்சத்து 89 ஆயிரம் பங்குகள். இந்தப் பங்குக்கு மாறன் சகோதரர்கள் நிர்ணயித்த விலை 875 ரூபாய்.   இவ்வாறு சந்தைக்கு வந்த சன் டிவியின் பங்கு, சந்தையில் வெளியிடப் பட்ட அன்று, 1466 ரூபாய்க்கு முடிந்தது.



இவ்வாறு மாறன் சகோதரர்கள் இந்தப் பங்கு வெளியீட்டில் சம்பாதித்த பெரும் தொகை, கருணாநிதி குடும்பத்தினரை கடும் கோபம் கொள்ளச் செய்தது. அப்போது முதலே, மாறன்கள் மீதான கோபம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.



நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபம், தினகரன் நாளேட்டில் சர்வே வெளியானதும் வெளிப்படையாக வெடித்தது.   அந்நாளேட்டில் பணியாற்றிய 3 ஊழியர்கள் எரித்துக் கொல்லப் பட்டாலும், அது, மாறன் சகோதரர்களின் கொட்டத்தை அடக்க ஒரு வாய்ப்பாக கருணாநிதி குடும்பத்தாரால் பார்க்கப் பட்டது.



அப்போது ஏற்பட்ட பிரிவால் உருவானதுதான், கலைஞர் டிவி உதயம். பிரிந்து போன மாறன் சகோதரர்கள், மீண்டும் கருணாநிதியோடு இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து, மோதிப் பார்த்து விடலாம் என்ற வழியையே தேர்ந்தெடுத்தனர்.   சன் டிவி மூலமாக தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான செய்திகளை போட்டுத் தாக்கினர்.   ஸ்பெக்ட்ரம் விவகாரம் அரசல் புரசலாக கசியத் தொடங்கியதும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கண்ணாடி போல தெளிவான முடிவுகள் எடுத்ததாகவும், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து நீக்கியதாலேயே ஊழல் நடைபெற்றது என்றும், தவறாக எடுக்கப் பட்ட அனைத்து முடிவுகளுக்கும் ராசாவே காரணம் என்றும் வளைத்து வளைத்து செய்தி போட்டனர்.



சன் டிவியின் வளர்ச்சி என்பது, திமுக தொண்டனின் ரத்தத்தில் கிடைத்தது. திமுக தொண்டனின் போராட்டத்தாலும் திமுக வின் ஆட்சி அதிகார பலத்தாலும், அந்தக் கட்சியின் சொத்தான அறிவாலயத்திலும் வளர்ந்தது. அப்படிப் பட்ட வளர்ச்சியை மொத்தமாக மறந்து விட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சன் குழுமத்தின் தினகரன் நாளேட்டில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டார்கள் மாறன் சகோதரர்கள். இதுதான் இவர்களின் மனசாட்சி.



திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் கிடைத்த அதிகாரத்தை கட்சியின் வளர்ச்சிக்கும், ஓரளவுக்கு தங்கள் சுயலாபத்திற்கும் பயன்படுத்தினார்கள் என்றால், மாறன் சகோதரர்கள் முழுக்க முழுக்க தங்களது, சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள்.



பேரப்பிள்ளைகள் ஏதோ தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கருணாநிதிக்கு, 2006ல் சன் டிவி பங்கு வெளியிட்ட போதுதான், நூற்றுக்கணக்கான தொழில்களை நடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.   இத்தனை தொழில்களை மாறன்கள் நடத்தி வருவது தெரிந்ததும் தான், தனது சொந்தப் பிள்ளைகளுக்கு எதுவுமே சேர்த்து வைக்கவில்லையே என்பதை கருணாநிதி உணர்ந்தார். இந்த விரக்தியின் வெளிப்பாடே, மகன்களையும், மகள்களையும் கண் மண் தெரியாமால் சம்பாதிக்க விட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.




ஏற்கனவே, மாறன்கள் மீது பொறாமையில் இருந்த அழகிரி, தயாநிதி மற்றும், மந்திரியானதும் தங்களை கண்டுகொள்ளமால் ஒதுக்கி உதாசீனப்படுத்தினார்கள் என்று எரிச்சலில் இருந்த ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழி ஆகியோர், அவர்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கும் மாறன்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டுமென்றால், உழைத்தா சம்பாதிக்க முடியும் ?



அப்போது கிடைத்த வரப்பிரசாதம் தான், தொலைத் தொடர்புத் துறை என்ற அட்சயப் பாத்திரம்.   இந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஆ.ராசா, தயாளு, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெகதரட்சகன், காமராஜ், ஜாபர்சேட், போலிப் பாதிரி என்று அள்ளித் தின்னாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு, அந்த அட்சயப் பாத்திரம் அள்ளிக் கொடுத்தது.



மாறன்கள், தொடர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்படுவதை கவனமாக கூர்ந்து கவனித்துக் கொண்ட வந்தார் கருணாநிதி. ஆரம்பத்தில், ஏமாற்றி விட்டார்கள் என்று மாறன்கள் மேல் இருந்த கடும் கோபம், நாளுக்கு நாள், அவர்களின் பலத்தைப் பார்த்ததும் அச்சமாக மாறத் தொடங்கியது.   மற்றவர்களுக்கு ஸ்பெக்ட்ரத்தில் என்ன நடந்தது என்று அப்போது தெரியாமல் இருந்தாலும், கருணாநிதிக்கு தெரியுமல்லவா ?



இது தவிரவும், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்தவர் செல்வி.   இந்த செல்வி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்வித் தொடரில் வருபவர்களை விட, அபாரமாக நடிக்கும் திறமை படைத்தவர். இரண்டு குடும்பங்களும் மோதலில் இருந்த காலத்தில், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றது போல, நடித்தவர் இந்த செல்வி.


சொந்த மகள் இறந்தாலும், தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதவர் தான் கருணாநிதி. ஆனாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டால், கட்சிக்கு ஆபத்து, தனக்கும் ஆபத்த என்பதை உணர்ந்ததாலேயே, மாறனை மந்திரிப் பதவியை விட்டு நீக்க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியவர், இணைப்புக்கு கோபாலபுரம் குடும்பத்தோடே முடித்துக் கொண்டு, “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்றார்.   ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்” என்று பதிலளித்தார்.



அதற்குப் பிறகு, மாறன்களோடு இணைந்தது போல வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும், உடைந்த பானை ஒட்டாது என்பது போலவேதான், கட்டாயம் மற்றும் வசதியின் அடிப்படையிலான உறவாக (Relationship of convenience) அந்த உறவு தொடர்ந்தது.



ராசா மீது வட இந்திய ஊடகங்களில் குற்றச் சாட்டுகள் மெள்ள எழுந்த போதெல்லாம் கோபம் கொள்ளாத கருணாநிதி, மாறன்களுக்கு மிக மிக நெருக்கமான விகடன் குழுமமே, ராசாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் கடுமையாக எழுதியதிலும், மாறன்களைப் பற்றி அமைதி காத்ததிலும் கடும் கோபம் அடைந்தார்.   இதன் பின்னணியில் இருப்பது மாறன்களே என்று கருணாநிதி சமீப காலத்தில் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிகிறது.



திமுக மிக மிக பலவீனமாக இருக்கும் இந்தச் சூழலில், மாறன்களை கட்சியை விட்டு நீக்குவது என்ற கடினமான முடிவு, கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று கருணாநிதி உணர்ந்தாலும், மந்திரி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லலாமா என்று ஆலோசித்துள்ளார். ஆனால், திடீர் திருப்பமாக, அழகிரி, மாறன்களுக்கு ஆதரவாக, ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எந்நேரம் வேண்டுமானாலும் சிறை செல்லலாம் என்ற அச்சத்தில், மந்திரி பதவியும் இல்லாவிட்டால், குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் போய் விடும் என்று அழகிரி நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் காரணத்தாலேயே அழகிரி, இப்போதைக்கு ஆதரவு வாபஸ் வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.



ஒரு சர்வே வெளியிட்டதால், மாறன் சகோதரர்கள் மேல் கடும் கோபம் கொண்டு, மூன்று பேரை எரித்துக் கொன்று, அந்தக் கோபத்தை தணித்துக் கொண்ட அழகிரியும், மாறன்களும், இன்று ஒரே அணியில் இருப்பது காலத்தின் கோலமே…



ஆனால் இது போல எந்த நெருக்கடிகளும் இல்லாத ஸ்டாலின் மாறன்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தயாநிதி மாறனிடம், தேவையின்றி வீட்டுக்கு வர வேண்டாம் என கடுமையாக சொல்லியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.   கருணாநிதியை தயாநிதி சந்தித்த போது கூட, “தாத்தா என்னை திஹாருக்கு அனுப்ப நிறைய பேர் வேலை செய்யிறாங்க தாத்தா” என்று சொன்னதற்கு “போயிட்டு வாப்பா” என்று சொன்னதோடு கருணாநிதி நிறுத்திக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.



மற்ற ஊடகங்கள் நெருக்கடி கொடுத்ததையெல்லாம் தங்கள் பண பலத்தால் சமாளித்த மாறன்கள், திமுக தலைவர் கருணாநிதியும் அவர் குடும்பத்தின் ஆதரவும் விட்டுப் போனதில், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.



இந்நிலையில், பிரதமர் சிபிஐக்கு தயாநிதி மாறனை விசாரிப்பதற்கான அனுமதி கொடுத்து உள்ளதை அடுத்து, எந்நேரமும் தயாநிதி பதவி விலக வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

ஈழப் போரின் போது, கருணாநிதி கூட ஒரு சமயத்தில் ஏன் ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று யோசித்த போது கூட, மாறன்களே கருணாநிதியை அம்முடிவிலிருந்து தடுத்ததாகவும், இதற்கு அவர்களின் வணிக நோக்கங்களே காரணமாக இருந்துள்ளன என்றும் திமுக வில் உள்ள சில மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.



மனசாட்சி என்பது துளி கூட இல்லாத இந்த மாறன்களின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியிருக்கிறது.   விரைவில் தயாநிதி மாறன் திஹார் சிறையில் அடைக்கப் படும் போது, நமக்கு அல்ல… கருணாநிதிக்கு “இதயம் இனிக்கும். கண்கள் பனிக்கும்”


ஞாயிறு, 12 ஜூன், 2011

காமராஜர்...

சி.சுப்பிரமணியத்தை முதல்_அமைச்சர் ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜாஜி கோஷ்டியினருக்கு, "முதல்_ அமைச்சர் பதவியை ஏற்க காமராஜர் சம்மதித்துவிட்டார்" என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது. எனினும், காமராஜரை எதிர்த்து சி.சுப்பிரமணியத்தை நிறுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடி, மார்ச் 30_ந்தேதி முதல்_அமைச்சரை தேர்ந்தெடுக்க சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடினார்கள். காமராஜர் பெயரை வரதராஜீலு நாயுடு முன்மொழிந்தார். என்.அண்ணாமலைப்பிள்ளை வழிமொழிந்தார். சி.சுப்பிரமணியத்தின் பெயரை, பக்தவச்சலம் முன் மொழிந்தார். டாக்டர் கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.

வாக்கெடுப்பு நடந்தது. காமராஜருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. காமராஜர் புதிய முதல்_அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13_ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் காமராஜர் முதல்_அமைச்சராகப் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவர் பெயரை முன்மொழிந்த பக்தவச்சலம் ஆகியோரையும் தன் மந்திரிசபையில் காமராஜர் சேர்த்துக்கொண்டார். மற்றும் மாணிக்கவேலர், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, "ராமநாதபுரம்ராஜா" சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ஏ.பி.ஷெட்டி, பரமேசுவரன் ஆகியோரும் மந்திரிசபையில் இடம் பெற்றனர்.

ராஜாஜி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர் நீங்கலாக மற்ற எல்லோரும் காமராஜர் மந்திரிசபையில் இடம் பெற்றனர். எட்டு பேர் மட்டுமே கொண்ட மந்திரிசபையை காமராஜர் அமைத்தது, அகில இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியது.

முதல்_அமைச்சராக பதவி ஏற்றதும், தன் அரசியல் குரு சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு காமராஜர் சென்றார். சத்திய மூர்த்தி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சத்திய மூர்த்தியின் மனைவி பாலசுந்தரம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

நிருபர்களிடம் பாலசுந்தரம்மாள் கூறியதாவது:_

"தேசப்பணியில் என் கணவருடன் காமராஜர் 20 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்தார். மக்கள் பணிக்காக தன் வாழ் நாளையே அர்ப்பணித்தார். காங்கிரசை பலப்படுத்த என் கணவருக்குத் துணையாக இருந்து, அயராது பாடுபட்டார். காமராஜர் தமிழ் நாட்டின் முதல்_அமைச்சர் ஆகி இருப்பதன் மூலம், என் கணவர் கண்ட கனவு பலித்து விட்டது."

இவ்வாறு பாலசுந்தரம்மாள் கூறினார்.

காமராஜர் முதல்_அமைச்சரானதை பெரும்பாலான பத்திரிகைகள் வரவேற்றன. ஒரு சில பத்திரிகைகள், "ராஜாஜி வகித்த பதவியை மற்றவர்கள் வகிப்பது எளிதல்ல. காமராஜருக்கு அரசியல் அனுபவம் அதிகம் உண்டு என்றாலும், அமைச்சரவை அனுபவம் இல்லை. அவர் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை எதிர்காலம் தான் நிர்ணயிக்கும்" என்று எழுதின.

ஆனாலும், அனைவரும் வியக்கத்தக்க முறையில் காமராஜர் ஆட்சி புரிந்தார். காமராஜர் முதல்_அமைச்சராகப் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை, ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்தது தான். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவர்களைச் சேர்க்க, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை, 50 ஆக ராஜாஜி குறைத்திருந்தார்.

இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்ணை மீண்டும் 150 ஆக காமராஜர் உயர்த்தினார். இவ்வாறு காமராஜர் செய்த சீர்திருத்தங்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரசியலில், ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர், காமராஜர்.

மிகவும் படித்தவரும், ராஜதந்திரியும், மேலிடத் தலைவர்களிடம் செல்வாக்கு பெற்றவருமான ராஜாஜியின் எதிர்ப்பையும் சமாளித்து முன்னேறி, முதல்_ அமைச்சர் ஆனார். எனினும், ராஜாஜி கோஷ்டியினரை வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்து சென்றார். "எதிரிகளை ஒழிக்க நினைப்பதை விட, அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது சிறந்தது" என்பது காமராஜரின் கொள்கை.

அதனால்தான் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரை மந்திரிகளாக்கியதுடன், முக்கிய இலாகாக்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். காமராஜரின் சிறிய மந்திரிசபை, "சிறந்த மந்திரிசபை" என்று விரைவிலேயே பெயர் எடுத்தது.

செவ்வாய், 7 ஜூன், 2011

யாரிடம் சொல்லி அழ?தினமணி தலையங்கம் .08 /06 /2011

கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எடுத்தது. அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடிவிட வேண்டும். 2022-ம் ஆண்டில் ஜெர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அது.

இதற்கு அவசியமில்லை என்று ஜெர்மனியின் அதிபர் ஆஞ்செலா மெர்க்கெல் தனிப்பட்ட முறையில் சில மாதங்களுக்கு முன்பும்கூட கருத்து தெரிவித்திருந்தாலும், அவரும் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறார். வேறு வழியில்லை. இதற்கு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை என இரண்டு இயற்கைச் சீற்றங்களும் ஒருசேரத் தாக்கியதில் ஃபுகுஷீமா அணுஉலை பாதிக்கப்பட்டது முதல் உலக நாடுகள் மற்றும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சமும் விழிப்புணர்வும்தான் காரணம். இப்போது உடனடியாக 7 அணுஉலைக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதேசமயம் இந்தியாவில் ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. ஜெய்தாபூரில் அணுஉலைக்கூடம் அமைத்தே தீருவோம் என்று அரசு சொல்கிறது.

இதற்கு அரசுத் தரப்பில் தரப்படும் விளக்கம்: இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அணுஉலைக் கூடம் மூலம் மின்உற்பத்தி மிகமிக அவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது அணுஉலைக் கூடங்கள் மூலம் நம் நாட்டுக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3 விழுக்காடு மட்டுமே. 2020-ம் ஆண்டு இது 6 விழுக்காடாக உயரும். 2030-ம் ஆண்டு இது 12 விழுக்காடாக உயரும். பாதுகாப்பு முறைகளில்தான் சிறிது மாற்றங்கள் தேவை. அதில் முழுமையாகக் கவனம் செலுத்தினால் பிரச்னையே இல்லை.

இதை இந்திய அரசு சொல்லும்போது நாம் ஜெர்மனியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெர்மனியில் அணுமின் உலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 22 விழுக்காடு. அதாவது நான்கில் ஒரு பங்கு மின்சாரம் அணுஉலைக் கூடங்கள் மூலம்தான் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. ஆனாலும் அதை இழக்கத் துணிகிறார்கள். எதற்காக? மக்கள் நல்வாழ்வுக்காக.

ஃபுகுஷீமா அணுஉலை விபத்தால் குடிநீரிலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும் நிலைமையைக் கண்கூடாகக் கண்டுவிட்டதால் ஏற்பட்ட முடிவு இது. மக்கள் நலன் கருதி இந்த முடிவை அவர்கள் மேற்கொள்கிறார்கள். பிற இயற்கை ஆதாரங்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முடிவை ஏற்றுக் கொள்கிறார்கள். மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, ஆபத்தைத் தெரிந்தே அரவணைப்பது மடமை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அணுஉலைக் கூடங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் ஜெர்மனி அரசுக்கும்கூட நன்றாகத் தெரியும். அவர்கள் நம்மைவிட பொறுப்பாக இந்தப் பணிகளில் ஈடுபட்டு, பாதுகாப்புக்கு அதிக அக்கறை தரக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிறார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை யாவும் இயற்கைச் சீற்றங்களுக்கு முன்பாக அர்த்தமற்றவை என்பதை.

இந்தியாவின் அணுஉலைக் கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல, இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடிச் செல்வதென்பது வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் மிகவும் எளிது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதை மும்பைத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு இருந்தும் இந்திய அரசு சொல்கிறது - பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி செய்துவிட்டால் போதுமானது. அணுஉலைக் கூடங்களால் பிரச்னை இருக்காது என்று. எவ்வளவு பொறுப்பற்றதனம்?

அண்மையில் ஜெய்தாபூரில், அணுஉலைக் கூடத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியை அரசு அடக்கி ஒடுக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த மக்களின் எதிர்ப்பு அரசியலாக்கப்பட்டு, அரசியல் சண்டையாக மாற்றப்பட்டதால் மக்களின் ஈனக்குரல் அமுங்கிவிட்டது. அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் அணுஉலைக் கூடம்தான் இந்தியாவிலேயே மிகப் பெரியது. இந்த அணுஉலைக் கூடத்தின் மின்உற்பத்தித் திறன் 9,900 மெகாவாட். இதற்காக இங்கே 2,400 ஏக்கர் நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜெய்தாபூரில் அணுஉலை அமையவிருக்கும் பகுதி பல்லுயிர் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இடங்களில் முக்கியமானது. ஆனாலும் அந்த இடத்தைத்தான் இந்திய அணுமின் கழகம் தேர்வு செய்துள்ளது. அதற்கு அணு ஆற்றல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடத்தில் அணுஉலை அமையுமானால், இந்த பல்லுயிர் பெருக்கம் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

மேலும், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட 4-வது நிலையில் உள்ள பகுதி இது என்று பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடத்தில் அணுமின் உலை வைப்பது எந்த விதத்தில் சரியான முடிவாக இருக்கும்? அமைக்கப்படவுள்ள ஈபிஆர் எனப்படும் புதிய தொழில்நுட்பத்திலான உலைகள், இதுவரை பரிசோதனைக்கு உட்படாதவை. இவற்றின் நன்மை தீமையை யார் அறிவார்? பிறகு எந்த தைரியத்தில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது?

இந்தியாவில் கிடைக்கும் யுரேனியம் 10,000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மட்டுமே போதுமானது. இதற்கும் மேலாக, அணுமின் உற்பத்தியை அதிகரித்தால் யுரேனியத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். இதற்கு ஆயிரம் கெடுபிடிகள், ஒப்பந்தங்கள், தடைகள். இதையும் மீறி இறக்குமதி செய்தாலும் அவற்றின் விலை அப்போது மேலதிகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்தியாவின் மின் தேவை ஒவ்வோராண்டும் 10 விழுக்காடு அதிகரிப்பதாகவும் அதனால்தான் இத்தகைய முடிவுகளை மேற்கொள்வதாகவும் அரசு காரணம் கூறுகிறது. இது ஒரு நொண்டிச் சாக்கு. இந்தியாவின் மின்உற்பத்தி தட்டுப்பாடு 13 விழுக்காடு என்றால், மின்விநியோகத்தில் வழித்தட இழப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. இப்போது இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களை அதன் முழுஉற்பத்தித் திறனுக்குப் பயன்படுத்தி, வழித்தட மின்இழப்பை 10 விழுக்காடாகக் குறைத்தாலே போதும். மின்தட்டுப்பாடு நீங்கிவிடும்.

மக்களைப் பற்றியும், நாளைய தலைமுறை பற்றியும் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் மின்தேவையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்பட்டால், இப்படியெல்லாம்தான் முடிவுகள் எடுக்கப்படும்!