வெள்ளி, 24 ஜூன், 2011

சிக்கலில் செட்டி நாட்டு சீமான்…..


எழுத்தாளர் சவுக்கு    
 வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 13:50



பழனியப்பன் சிதம்பரம் அவர்களுக்கு செட்டிநாட்டுச் சீமான் என்று சவுக்கு பெயர் வைக்கவில்லை. இந்தப் பெயரை வைத்தது, சிதம்பரத்துக்கு இன்று நெருக்கமாக இருக்கும் கருணாநிதி.   1991 – 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், சிதம்பரம் மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தார்.   அப்போது நடந்த ஒரு விழாவில், மேடையில் சிதம்பரத்துக்கு நாற்காலி போடாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது, சிதம்பரத்தைப் பார்த்து கருணாநிதி கூறியதுதான் ”செட்டிநாட்டுச் சீமான் கைகட்டி நிற்கிறார்” என்பது.



செட்டி நாட்டு சீமான் சிதம்பரம் சிக்கலில் மாட்டப் போவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன.   உள்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் சிதம்பரம், 2009 பாராளுமன்றத் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றார் என்று, ஜெயலலிதா டெல்லியில் பேட்டியளித்த போதே, சிதம்பரம் கலக்கமடைந்தார்.



மேலும், சாமான்யத்தில் முடிவு தெரியாத வழக்குகளாகத் தான் தேர்தல் வழக்குகள் இருப்பது வழக்கம். இந்த வழக்கை விரைவாக விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதும், சிதம்பரத்தின் கலக்கத்துக்கு காரணமாக இருந்தது. இந்நிலையில் டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.



அது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஆ.ராசாவுக்கு பங்கு இருந்தது போலவே சிதம்பரத்துக்கும் பங்கு இருந்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். டாக்டர்.சுவாமி கூறும் குற்றச் சாட்டில் அடிப்படை இல்லாமல் இல்லை.   ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவுகள் எடுத்ததில், சிதம்பரமும் பங்கு வகித்துள்ளார் என்பது அது தொடர்பான கோப்புகளில் இருந்து தெரிய வருகிறது.   ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கு துளியும் பங்கு இல்லை, அத்தனையும் செய்தது திமுகவே என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ் பக்கம், இந்த ஊழல் விசாரணை பாயாமல் பார்த்துக் கொள்கிறது மத்திய அரசு.

இது தொடர்பாக நேற்று சுப்ரமணிய சுவாமி ஒரு ஆதராத்தை வெளியிட்டார். அது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் நோட் பைல் எனப்படும் அலுவலகக் குறிப்பு. 5 நவம்பர் 2009ல் அப்போது அமைச்சராக இருந்த ராசா, ஒரு குறிப்பை எழுதுகிறார்.



அந்தக் குறிப்பில் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுத்த பின்னர், அவை தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்தது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.   இது தொடர்பாக நிதி அமைச்சர் சிதம்பரத்தோடும், பிரதமர் மன்மோகன் சிங்கோடும், கலந்தாலோசிக்கப் பட்டது.   அந்த கூட்டத்தில், நிதி அமைச்சர் சிதம்பரம், வியாபாரத்தை விரிவாக்குவதற்காக, அந்நிய முதலீட்டை வரவேற்பது, லைசென்சை விற்பனை செய்வதாகாது என்று அருள்வாக்கு கொடுத்திருப்பதாக ராசா அந்தக் குறிப்பில் தெரிவிக்கிறார்.



அதாவது 1700 கோடிக்கு லைசென்ஸ் வாங்கி விட்டு, யூனிடெக் நிறுவனம், நார்வேயின் டெலிநார் நிறுவனத்துக்கு, 9100 கோடிக்கு தனது 67 சதவிகித பங்குகளை விற்பனை செய்தது என்பது, லைசென்சை விற்றது ஆகாது என்கிறார் சிதம்பரம். நன்றாக இருக்கிறதய்யா உமது நியாயம்.



டாக்டர் சுவாமி சிதம்பரம் மீது வீசிய அடுத்த குண்டு, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்க ஏற்பாடு செய்தவர் சிதம்பரம் தான் என்று. சுவாமியின் குற்றச் சாட்டை உதாசீனப் படுத்த முடியாத அளவுக்குத் தான் அந்த விவகாரம் நடந்திருக்கிறது.



கடந்த செப்டம்பர் மாதம், பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப் பட்டிருப்பதாக மன்மோகன் சிங்குக்கு பிரணாப் கடிதம் எழுதுகிறார்.   அதற்கு முன்பாக, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்திடம் (Central Board for Direct Taxes) இந்த விவகாரத்தை பற்றி விசாரிக்க உத்தரவிடுகிறார் பிரணாப்.   அந்த நிறுவனம், தனியார் துப்பறியும் நிறுவனங்களை வைத்து, அந்த ஒட்டுக் கேட்கும் கருவிகள் இருக்கிறதா என்று ஆராய்ந்து, 13 இடங்களில் சூயிங் கம் பொருத்தப் பட்டிருப்பதை கண்டு பிடித்தது. இதில் எழும் முக்கியமான ஒரு கேள்வி, நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர், ஒட்டுக் கேட்கும் கருவிகள் இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்ததும், மத்திய உளவுத் துறையிடம் (Intelligence Bureau) ஏன் சொல்லவில்லை.   அடுத்த கட்டிடத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் சொல்லாமல், ஒரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.



ஜெயலலிதா வீசிய முதல் அஸ்திரம், சிதம்பரத்தை சுற்றி சுற்றி அடிப்பது நிற்பதற்குள்ளாகவே, அடுத்த சிக்கலில் சிக்கியிருக்கிறார் சிதம்பரம்.   சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதை விரும்பாத சக்திகள் இது போல செயல்படுகின்றன என்றும் ஒரு தியரி சொல்லப் படுகிறது. மற்றொரு தியரி, ராகுல் காந்திக்கு போட்டியாக, தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை வளர்ப்பது, சோனியாவுக்கே பிடிக்காத காரணத்தால் சோனியாவே, சிதம்பரத்தை இது போல சிக்கலில் இழுத்து விடக் கூடும் என்றும் சொல்லப் படுகிறது.



எது எப்படியோ, கத்திரிக்காய் முற்றினால், கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக