திங்கள், 28 மே, 2012

முள் மேல் விழுந்த சேலை!..


ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அரசு படிப்படியாகக் குறைத்து, நீக்கிவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, முஸ்லிம் அமைப்புகள் பலவும் வரவேற்றுள்ளன.

  கடந்த பதின் ஆண்டுகளாகவே இந்தப் பிரச்னை பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. தங்களை இஸ்லாமிய நாடு என்று வர்ணித்துக்கொள்ளும் நாட்டில்கூட இல்லாத ஒரு புதிய மரபை வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா ஏற்படுத்தியது என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று.

  இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சலுகைபோலப் பெருவாரியான இந்துக்களுக்கும் ஏன் அமர்நாத் யாத்திரை போன்ற தீர்த்தாடனங்களுக்கு மானியம் வழங்கப்படக் கூடாது என்று இந்து மத அமைப்புகள் கேட்கத் தொடங்கின. அதன் அடுத்த கட்டமாகக் கிறிஸ்தவ வாக்கு வங்கியைக் குறிவைத்து ஜெருசலேம் போக மானியம் என்பதுவரை இந்தப் பிரச்னை நீண்டுகொண்டிருக்கிறது.

  ஹஜ் மானியம் ஒரு பிரச்னையாக மாறியபோதே, முஸ்லிம் மதத் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் இந்த மானியம் தேவையில்லை என்பதை அறிக்கைகள் மூலமும், பேட்டிகள் மூலமும் மற்றவர்களுக்கும் அரசுக்கும் தெரிவித்தனர். ஆனால், அரசு அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதான் உண்மை.

  சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆற்காடு இளவரசர் இது தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்தில், ஒரு முஸ்லிமின் மதக் கடமையான ஹஜ் யாத்திரை, நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ள நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இஸ்லாமிய நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ""ஹஜ் மானியம் உலகின் எந்த நாட்டிலும் - முஸ்லிம் நாடுகள் உள்பட - வழங்கப்படுவதில்லை. ஓர் இந்திய அரசியல் தலைவர் என்னிடம், மானியம் வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். இது தவறா என்பதைவிட இது சரியில்லை என்றுதான் நான் சொல்வேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

  பாகிஸ்தானில், லாகூர் உயர் நீதிமன்றத்தில் 1997-இல் இதேபோன்ற வழக்கில், ஹஜ் யாத்திரைக்கு மானியம் அல்லது நிதியுதவி பெறுவது முஸ்லிம் மதத்துக்குரியது அல்ல என்று தீர்ப்பாகியுள்ளதையும் ஆற்காடு இளவரசர் சுட்டிக்காட்டியிருந்தார்.

  ஹஜ் மானியம் தேவையில்லாதது என்று சொல்லும் முஸ்லிம் மதத் தலைவர்கள், இந்தப் பெருந்தொகையை சிறுபான்மையினர் நலனுக்காக, கல்விக்காகப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர். 2011-ஆம் ஆண்டில் ரூ.685 கோடி ஹஜ் மானியம் செலவிடப்பட்டுள்ளது. இதில் பயனடைந்தவர்கள் 1.14 லட்சம் பேர்தான். ஆனால், இதனை சிறுபான்மையினர் நலத் திட்டத்துக்காகப் பயன்படுத்தியிருந்தால் மிகப் பெரும் அளவிலான முஸ்லிம்கள் பயன்பெற்று இருப்பார்கள் என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது.

  இதைவிட, 11,000 பேர் விஐபி ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டு, ஹஜ் மானியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும், நல்லெண்ணத் தூதுக்குழு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் சுமார் 27 பேர் ஒவ்வோராண்டும், (சிலர் பல ஆண்டுகளாக) இதில் இடம்பெற்றிருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி கடுமையாகக் கண்டித்திருப்பதைப் பார்க்கும்போது, இதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பயன்பெறுவதுதான் அதிகம் என்று எளிதில் சொல்லிவிட முடியும். ஆட்சியாளர்களின் சிபாரிசின் பேரில் "ஹஜ்' மானியம் பெற்றுப் புனித யாத்திரை நடத்தியவர்கள் யார் எவர் என்று பட்டியலிட்டால் மூன்றில் இரண்டு பங்குபேர் அதில் அடங்கினாலும் வியப்படைவதற்கில்லை.

  மேலும், ஹஜ் செல்லும் யாத்ரிகர்களுக்கு பிற விமான நிறுவனங்கள் ரூ. 20,000-ம் சலுகைக் கட்டணம் அறிவிக்கும்போது, ஏர்இந்தியா நிறுவனம் ரூ.45,000 வசூலிப்பதையும், இந்த ஹஜ் மானியம் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்டத்தான் பயன்படுகிறது என்பதையும் முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிடுவதைப் பார்த்தால், ஹஜ் மானியத்தில் பயன்பெறும் ஏழை முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும்போலும்!

  ஹஜ் மானியத்தை, நீதிமன்றம் குறிப்பிடுவதைப்போல, 10 ஆண்டுகளுக்குள் நீக்கிவிட முடியுமா என்பது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கின்றது. முஸ்லிம் மதத் தலைவர்கள் பலர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தாலும்கூட, ஆளும் கட்சியினர் மிகவும் தயக்கம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, நீதிமன்றத்தின் கருத்தை முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஒரு குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசு துணிச்சலுடன், இந்த மானியத்தை நிறுத்தும்.

  இந்தியாவில் ஜைனம், பௌத்தம், பல்வேறு மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பார்க்க வேண்டிய புனிதஸ்தலம் ஒன்று இருக்கவே செய்கிறது. எல்லோருக்கும் அரசு மானியம் வழங்குவது இயலுமா? நியாயமா? "ஹஜ்' யாத்திரைக்கான மானியத்தைப் பொருத்தவரை, இது ஏழை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பயன்படுவதாகத் தெரியவில்லை. மானியம் இல்லாவிட்டாலும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வசதி படைத்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து மானியம் வழங்குவானேன்?

  இந்த விவகாரத்தில் சட்டம் சொல்வதும், மதத் தலைவர்கள் கருத்தும் நியாயமானதாக இருந்தாலும்கூட, இந்த விவகாரத்தை சிக்கலாக மாற்றியவர்கள் நம் அரசியல்வாதிகள்தான். இந்த விவகாரம் மிகவும் மென்மையானது. யாருடைய மனமும் புண்படாமல் இருக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவும் வேண்டும்.

  இந்த விவகாரம் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை போன்றது. முள்ளாய் இருப்பவர்கள் அரசியல்வாதிகள்தான்!

தேவையில்லை விதிமுறைகள்!...d/m


தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா, நீதிபதிகள் டி.கே. ஜெயின், எஸ்.எஸ். திஸ்ஸார், ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஜே.எஸ். கேஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்சின் முன்னால் விடை காணக் காத்திருக்கும் கேள்வி, நீதிமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் ஊடகங்களுக்கு விதிமுறைகளை வகுக்கலாமா கூடாதா என்பதுதான்.

கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் 17 நாள்களாக இந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சின் முன்னால் நடந்துவந்த விவாதம் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலைமை. இப்போது தீர்ப்புக்காக ஊடகங்கள் மட்டுமல்ல, வழக்குரைஞர்கள், நீதிபதிகள் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருக்கிறது.

ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன என்பது ஒருபுறம். ஆனால், அதிகரித்துவிட்ட விழிப்புணர்வும், எந்தவிதத்திலும் மறைத்து வைக்க முடியாத வெளிப்படைத்தன்மையும் எல்லா தளங்களிலும் எல்லா தகவல்களும் வெட்ட வெளிச்சமாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலைமை மறுபுறம். இந்தச் சூழ்நிலையில், வரைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து ஊடகங்களுக்கு வரம்புபோட நினைப்பது சாத்தியம்தானா என்பதுதான் விடைகாணக் காத்திருக்கும் கேள்வி.

ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன என்பதும் தனிமனித உரிமைகளை மதிக்காமல் பொறுப்பின்மையுடன் நடந்து கொள்கின்றன என்றும் கூறப்படுமேயானால், வரம்புகள் விதிப்பதும், கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும் பல உண்மைகள் வெளிவருவதைத் தடுப்பதற்கும், பல தவறுகள் தட்டிக் கேட்கப்படாமல் போவதற்கும் வழிகோலும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

""நாம் விதிமுறைகளை வகுக்காமல் போனால், ஊடகங்களை வேறு யார் கட்டுப்படுத்துவது?'' என்கிற கேள்வியை உச்ச நீதிமன்ற பெஞ்ச் எழுப்பி இருக்கிறது. ""சட்டங்களை இயற்றுவதும், வரைமுறைகளை உருவாக்குவதும் நாடாளுமன்றத்தின் பணியே தவிர, நீதிமன்றங்களின் வேலை அல்ல. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அரசியல் சாசனத்தின் உணர்வுக்கும் கருத்துக்கும் ஏற்புடையதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்துவது மட்டுமே நீதித்துறையின் கடமை'' என்பது மூத்த வழக்குரைஞர் பாலி. நாரிமனின் கருத்து.

நீதிமன்ற நடைமுறைகளைப் பதிவு செய்வதிலும், வெளியிடுவதிலும்கூடவா நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்ற கேள்விக்கு, அதற்கான முன்னுதாரணங்களும், கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்படுகின்றனவே என்று நீதிபதிகளிடம் தெளிவுபடுத்தினார் அவர்.

நீதிமன்றத்துக்கும் சரி, நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கும் சரி, அங்கே நடக்கும் விவாதங்களையும், தீர்ப்புகளையும், முடிவுகளையும், செயல்பாடுகளையும் ஊடகங்கள் பதிவு செய்வதற்கு வழிமுறைகளும், நெறிமுறைகளும் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கான சட்டம் இயற்றப்படுவது என்பது நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல, அப்படியே நாடாளுமன்றம் சட்டம் இயற்றினாலும் அது அரசியல் சட்டப்படி செல்லுமா என்பது சந்தேகம்தான்.

÷அரசியல் சட்டப்பிரிவு 19(2) பத்திரிகையாளர் உள்ளிட்ட எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் எழுத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் வழங்குகிறது. பத்திரிகையாளர்களுக்கு என்று இந்திய அரசியல் சட்டம் எந்த சிறப்பு சலுகைகளையும் வழங்கவில்லை என்பதும், வேறு நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரங்களைக்கூட இந்திய அரசியல் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

÷விவாதத்தின்போது முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி சொன்னதுபோல, வரைமுறைகளை ஏற்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்பதுடன் சட்டப்பிரிவு 142-ஐ அது மீறிய செயலாகவும் அது கருதப்படும். வரைமுறைகளை வகுப்பதன் மூலம் நீதித்துறை வரம்பு மீறியதாகிவிடும் என்கிற சோரப்ஜியின் எச்சரிக்கையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

÷ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்றும், தேவையில்லாமல் தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் பரபரப்பில் ஈடுபடுகின்றன என்றும் காட்சி ஊடகங்கள் வந்த பிறகு மிக அதிகமான குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, 24 ல 7 சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று விஞ்சும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டிய வியாபார நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட் கலாசாரத்தின் விளைவாகத் தங்களது வியாபாரப் போட்டிகளை ஊடகங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. வியாபாரப் போட்டிக்காக செய்தித் திணிப்பும், செய்தித் திரிப்பும்கூட செய்யப்படுகின்றன என்பதையும் வருத்தத்துடன் எதிர்கொள்ள வேண்டிய அவலமும் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, ஊழல்களை அம்பலப்படுத்துவது, முறைகேடுகளை வெளிக்கொணர்வது, மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற நல்ல பல நடவடிக்கைகளில் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஈடுபடுவதால்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு, காமன்வெல்த் போட்டி ஊழல் என்று பல பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் எழுப்பி நீதியின் கரங்களை வலுப்படுத்த முடிந்திருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டமும் மிகப்பெரிய அளவில் இதற்குக் கைகொடுத்திருக்கிறது.

அரசியல்வாதிகளின் தரம் குறைந்து வருவதைப்போல, பத்திரிகையாளர்களின் தரம் குறைந்துவிடாமல் சுய கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, விதிமுறைகள் வகுப்பது என்பது, மூத்த வழக்குரைஞர் நாரிமன் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்ததுபோல, எதிர்ப்பு வலுப்பதற்கும், பல தவறுகள் தட்டிக் கேட்கப்படாமல் போவதற்கும் வழிகோலக்கூடும். விதிமுறைகளை வகுக்க இப்போது என்ன அவசரம்? என்ன அவசியம்? புரியவில்லை.

வியாழன், 24 மே, 2012

ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன ......

…….. ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன என்பதும் தனிமனித உரிமைகளை மதிக்காமல் பொறுப்பின்மையுடன் நடந்து கொள்கின்றன என்றும் கூறப்படுவது தவறு, வரம்புகள் விதிப்பதும், கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும் பல உண்மைகள் வெளிவருவதைத் தடுப்பதற்கும், பல தவறுகள் தட்டிக் கேட்கப்படாமல் போவதற்கும் வழிகோலும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, ஊழல்களை அம்பலப்படுத்துவது, முறைகேடுகளை வெளிக்கொணர்வது, மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற நல்ல பல நடவடிக்கைகளில் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஈடுபடுவதால்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு, காமன்வெல்த் போட்டி ஊழல் என்று பல பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் எழுப்பி நீதியின் கரங்களை வலுப்படுத்த முடிந்திருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டமும் மிகப்பெரிய அளவில் இதற்குக் கைகொடுத்திருக்கிறது…….....மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு வேண்டுமே தவிரகொள்ளை அடிப்பதற்காக இல்லை.லஞ்ச - ஊழல் என்பது ஒரு கொடிய வைரஸ் போல் சமூகத்தில் புரையோடிப் போய்விட்டதுஅதைக் குணப்படுத்த உடனடி நடவடிக்கைகள் தேவைஆனால்துரதிஷ்டவசமாக சட்டம் கொண்டு வர வேண்டிய மத்திய அரசேலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறி வருகிறது.இதனால்மக்களை ஏமாற்றும் பலவீனமான லோக்பால்  சட்டத்தைக் கொண்டு வரவேமத்திய அரசு முனைப்பாக உள்ளது.   அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளையும் மக்களை மயக்கும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவித்து எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது; ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அடித்துவிட்டு, பணபலத்தால் மீண்டும் பதவியைப் பிடிக்கப் பார்ப்பது, இல்லையென்றால், அடுத்த தேர்தலில் ஆளும்கட்சியின் மீதான எதிர்ப்பலையில் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான் அது..  "இன்றைய ஹீரோ, நாளைய ஜீரோ, இன்றைய ஜீரோ நாளைய ஹீரோ' என்பதுதான் தேர்தல்  இலக்கணம் என்றாகிவிட்டது.. …