திங்கள், 28 மே, 2012

தேவையில்லை விதிமுறைகள்!...d/m


தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா, நீதிபதிகள் டி.கே. ஜெயின், எஸ்.எஸ். திஸ்ஸார், ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஜே.எஸ். கேஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்சின் முன்னால் விடை காணக் காத்திருக்கும் கேள்வி, நீதிமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் ஊடகங்களுக்கு விதிமுறைகளை வகுக்கலாமா கூடாதா என்பதுதான்.

கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் 17 நாள்களாக இந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சின் முன்னால் நடந்துவந்த விவாதம் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலைமை. இப்போது தீர்ப்புக்காக ஊடகங்கள் மட்டுமல்ல, வழக்குரைஞர்கள், நீதிபதிகள் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருக்கிறது.

ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன என்பது ஒருபுறம். ஆனால், அதிகரித்துவிட்ட விழிப்புணர்வும், எந்தவிதத்திலும் மறைத்து வைக்க முடியாத வெளிப்படைத்தன்மையும் எல்லா தளங்களிலும் எல்லா தகவல்களும் வெட்ட வெளிச்சமாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலைமை மறுபுறம். இந்தச் சூழ்நிலையில், வரைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து ஊடகங்களுக்கு வரம்புபோட நினைப்பது சாத்தியம்தானா என்பதுதான் விடைகாணக் காத்திருக்கும் கேள்வி.

ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன என்பதும் தனிமனித உரிமைகளை மதிக்காமல் பொறுப்பின்மையுடன் நடந்து கொள்கின்றன என்றும் கூறப்படுமேயானால், வரம்புகள் விதிப்பதும், கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும் பல உண்மைகள் வெளிவருவதைத் தடுப்பதற்கும், பல தவறுகள் தட்டிக் கேட்கப்படாமல் போவதற்கும் வழிகோலும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

""நாம் விதிமுறைகளை வகுக்காமல் போனால், ஊடகங்களை வேறு யார் கட்டுப்படுத்துவது?'' என்கிற கேள்வியை உச்ச நீதிமன்ற பெஞ்ச் எழுப்பி இருக்கிறது. ""சட்டங்களை இயற்றுவதும், வரைமுறைகளை உருவாக்குவதும் நாடாளுமன்றத்தின் பணியே தவிர, நீதிமன்றங்களின் வேலை அல்ல. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அரசியல் சாசனத்தின் உணர்வுக்கும் கருத்துக்கும் ஏற்புடையதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்துவது மட்டுமே நீதித்துறையின் கடமை'' என்பது மூத்த வழக்குரைஞர் பாலி. நாரிமனின் கருத்து.

நீதிமன்ற நடைமுறைகளைப் பதிவு செய்வதிலும், வெளியிடுவதிலும்கூடவா நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்ற கேள்விக்கு, அதற்கான முன்னுதாரணங்களும், கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்படுகின்றனவே என்று நீதிபதிகளிடம் தெளிவுபடுத்தினார் அவர்.

நீதிமன்றத்துக்கும் சரி, நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கும் சரி, அங்கே நடக்கும் விவாதங்களையும், தீர்ப்புகளையும், முடிவுகளையும், செயல்பாடுகளையும் ஊடகங்கள் பதிவு செய்வதற்கு வழிமுறைகளும், நெறிமுறைகளும் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கான சட்டம் இயற்றப்படுவது என்பது நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல, அப்படியே நாடாளுமன்றம் சட்டம் இயற்றினாலும் அது அரசியல் சட்டப்படி செல்லுமா என்பது சந்தேகம்தான்.

÷அரசியல் சட்டப்பிரிவு 19(2) பத்திரிகையாளர் உள்ளிட்ட எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் எழுத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் வழங்குகிறது. பத்திரிகையாளர்களுக்கு என்று இந்திய அரசியல் சட்டம் எந்த சிறப்பு சலுகைகளையும் வழங்கவில்லை என்பதும், வேறு நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரங்களைக்கூட இந்திய அரசியல் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

÷விவாதத்தின்போது முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி சொன்னதுபோல, வரைமுறைகளை ஏற்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்பதுடன் சட்டப்பிரிவு 142-ஐ அது மீறிய செயலாகவும் அது கருதப்படும். வரைமுறைகளை வகுப்பதன் மூலம் நீதித்துறை வரம்பு மீறியதாகிவிடும் என்கிற சோரப்ஜியின் எச்சரிக்கையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

÷ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்றும், தேவையில்லாமல் தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் பரபரப்பில் ஈடுபடுகின்றன என்றும் காட்சி ஊடகங்கள் வந்த பிறகு மிக அதிகமான குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, 24 ல 7 சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று விஞ்சும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டிய வியாபார நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட் கலாசாரத்தின் விளைவாகத் தங்களது வியாபாரப் போட்டிகளை ஊடகங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. வியாபாரப் போட்டிக்காக செய்தித் திணிப்பும், செய்தித் திரிப்பும்கூட செய்யப்படுகின்றன என்பதையும் வருத்தத்துடன் எதிர்கொள்ள வேண்டிய அவலமும் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, ஊழல்களை அம்பலப்படுத்துவது, முறைகேடுகளை வெளிக்கொணர்வது, மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற நல்ல பல நடவடிக்கைகளில் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஈடுபடுவதால்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு, காமன்வெல்த் போட்டி ஊழல் என்று பல பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் எழுப்பி நீதியின் கரங்களை வலுப்படுத்த முடிந்திருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டமும் மிகப்பெரிய அளவில் இதற்குக் கைகொடுத்திருக்கிறது.

அரசியல்வாதிகளின் தரம் குறைந்து வருவதைப்போல, பத்திரிகையாளர்களின் தரம் குறைந்துவிடாமல் சுய கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, விதிமுறைகள் வகுப்பது என்பது, மூத்த வழக்குரைஞர் நாரிமன் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்ததுபோல, எதிர்ப்பு வலுப்பதற்கும், பல தவறுகள் தட்டிக் கேட்கப்படாமல் போவதற்கும் வழிகோலக்கூடும். விதிமுறைகளை வகுக்க இப்போது என்ன அவசரம்? என்ன அவசியம்? புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக