ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஊழல்களின் ஊற்றுக்கண்....

லோக்பால் மசோதா சட்ட வரையறைக்குள் பிரதமரைக் கொண்டுவர வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மசோதாவில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் பிரதீப் குமார் கூறியிருக்கும் கருத்து, உண்மையிலேயே நியாயமானது, தேவையானது.

கார்ப்பரேட் நிறுவனங்களையும் இந்த மசோதாவுக்குள் கொண்டுவருவதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று நினைக்கத் தோன்றலாம். ஆனாலும், இன்றைய இந்தியாவில் வெளிப்பட்டுவரும் அனைத்து முறைகேடுகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் தொடர்புதான் அதிகமாக இருக்கிறது. இந்தத் தொடர்புதான், ஊழலைப் பல ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தியும் இருக்கிறது.
தற்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கு, ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று பல வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் வழக்கிலிருந்து விடுதலை அடைந்துவிடுவார்கள் என்று பேசப்படுவதற்குக் காரணம், கார்ப்பரேட் நிறுவனங்களால் அவர்கள் பயன் அடைந்ததை லஞ்சம் என்று சட்டப்படி நிரூபிப்பது கடினம் என்பதாலும், அதற்கான பிடிப்பு தற்போதைய சட்டத்தில் இல்லை என்பதாலும்தான்.
ஒரு நிறுவனத்துக்கு யாரோ பல கோடி கடன் கொடுக்கிறார்கள். ஏன் கொடுத்தார், இவ்வளவு பெரும்தொகையை எந்த ஆவணங்களும், பிணை வைப்பும் இல்லாமல் கொடுப்பார்களா என்ற கேள்விகள் பொதுநியாயமாக இருந்தாலும், சட்டத்தின் முன் இந்தக் கேள்விகள் யாவும் தொழிலில் கொடுப்பவர் - வாங்குபவரைப் பொறுத்த விவகாரம். ஆவணம், பிணைவைப்பு இல்லாமல் எந்த தைரியத்தில் கடன் கொடுத்தாய் என்று சட்டம் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கொடுத்ததற்கு, தனிப்பட்ட உள்நோக்கம் அல்லது ஆதாயம், பயன் கிடைத்திருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டும். இது மிகவும் கடினமான செயல். ஓர் அமைச்சரின் ரத்தஉறவு நடத்தும் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி முதலீட்டை ஒரு நிறுவனம் செய்தால், அதற்கு உள்நோக்கம் இருந்தாலும் அதை நிரூபிப்பது கடினம்.
பிரதீப் குமார் சொல்வதைப்போல, லோக்பால் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் சேர்த்து, ஒரு வழக்கில் கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்த பணம், அது கடனாக இருந்தாலும் அல்லது அமைச்சர் சொன்ன நிறுவனத்தில் போட்ட பங்கு முதலீடாக இருந்தாலும் சரி, உள்நோக்கம், தனிஆதாயம் கொண்டது என்ற சந்தேகத்துக்கு வழிவகுத்தாலும்கூட அந்த நிறுவனம் தண்டிக்கப்படும்; அந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ளலாம், அதன் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கலாம் என்கிற அளவுக்குக் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே, கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தகைய லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடாது.
பெரும் திட்டங்கள், தொழில் ஒப்பந்தங்கள், சிறப்புப் பொருளாதார மண்டல அனுமதி, கனிமச் சுரங்க அனுமதி என்று எதை எடுத்தாலும், அரசியல்வாதிகள் லஞ்சம் பெறுவதில்லை. அந்த நிறுவனத்தின் தொழில்பங்குகளை (ஷேர்) குடும்ப உறுப்பினர்கள், பினாமி பெயர்களில் பெற்றுக்கொள்வதுதான் இன்றைய லஞ்ச கலாசாரமாக மாறியிருக்கிறது. தற்போதைய சட்டப்படி தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் இல்லை. லோக் ஆயுக்தவுக்கும் அதிகாரம் இல்லை.
அரசு இயந்திரத்தில் மிகச் சாதாரண பொறுப்பில் இருக்கும் உதவியாளர், கடைநிலை ஊழியர்கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் லஞ்சம் வாங்கக் காரணம், அவருடைய மேலதிகாரியும் லஞ்சம் வாங்குகிறார் என்பதால்தான். அவரது மேலதிகாரி தனது உயர் அதிகாரியைக் காட்டுவார், அவர் அமைச்சரையும், அமைச்சர்கள் முதல்வரையும் சுட்டிக்காட்டுவார்கள். முதல்வர்கள், மத்திய அமைச்சர்களையும் ஆட்சியாளர்களையும் காட்டுவார்கள்.
ஆட்சி அதிகாரத்தின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால், அதன் விளைவாக அரசு இயந்திரத்தின் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் வாங்காத ஒரு சூழல், தானாகவே உருவாகிவிடும். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை லஞ்சம் வாங்கச் செய்பவர்கள் உயர்அதிகாரிகளும் இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதான் அதிகம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒரு மாநில முதல்வரையோ அமைச்சரையோ மத்திய அமைச்சர் அல்லது பிரதமரையோ சந்திப்பது மரியாதை நிமித்தம் என்று சொல்லப்பட்டாலும், இவர்களது சந்திப்பில் மறைமுக கோரிக்கைகள் இருக்கவே செய்கின்றன. அந்தக் கோரிக்கைகள் பலவும் தனியொரு நிறுவனம் அல்லது நபருக்கு லாபம் தருவதாகவும், அரசு அல்லது பொதுநிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாகவுமே இருக்கின்றன என்பதும், இதன் அளவுக்கு ஏற்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் லஞ்சம் தர முன்வருவதும்தான் இன்றைய புதிய நடைமுறையாக இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் நேரச் செலவுக்குப் பணஉதவியாக இருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்போது அரசியல்வாதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழிலில் பங்கு முதலீட்டுக்கு உதவிசெய்து தாங்களும் பலனடைகின்றன என்கிற அளவுக்கு லஞ்சம் புதிய அவதாரம் அடைந்திருக்கிறது. தனியார் மயம், சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் வர்த்தகம் எந்தவித தர்மத்தையோ, கோட்பாட்டையோ அடிப்படையாகக் கொள்ள வேண்டியதில்லை என்கிற நிலைமை ஏற்படும்போது, வியாபார வெற்றிக்காக எந்தவித விலையும் கொடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகின்றன. பல கோடி ரூபாய் ஊழல்களின் ஊற்றுக்கண் இதுதான். எரியும் கட்டையை எடுத்தால், பொங்குவது தானே அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக