சனி, 3 செப்டம்பர், 2011

அமைச்சர் கமல் நாத்துக்கு ரூ.263 கோடி சொத்து..


புதுடில்லி:பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கமல் நாத்துக்கு, 263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகனுக்கு வெறும் ஐந்து கோடி ரூபாய்க்குதான் சொத்து உள்ளது."மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து அமைச்சர்களும், தங்களின் சொத்துப் பட்டியலை, பிரதமர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இந்த சொத்து பட்டியல் குறித்த விவரங்களை, ஆகஸ்ட் 31க்குள் அளிக்கும்படியும், அவர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, பிரதமர் அலுவலக இணையதளத்தில் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் உள்ள, 77 பேரில், விலாஸ்ராவ் தேஷ்முக், கிருஷ்ணா திராத், ஜெயந்தி நடராஜன், ஜிதேந்தர் சிங், ஜெகத்ரட்சகன் ஆகியோரை தவிர, மற்றவர்களின் சொத்து பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதுபற்றிய விவரம்:பிரதமருக்கு 4.8 கோடி ரூபாய்:பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. இரண்டு வீடுகள், "மாருதி 800' கார் ஆகியவை உள்ளன. இவரது மனைவி குர்சரண் கவுரின் பெயரில், பாட்டியாலா வங்கியில் சேமிப்பு கணக்கில், 22 லட்ச ரூபாய் உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு, 1.25 கோடி ரூபாய். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் மொத்த சொத்து மதிப்பு, 13.33 லட்ச ரூபாய். இவருக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் மதிப்பு, 16.22 கோடி ரூபாய். இவரது வங்கி கணக்கில் 65 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 
முதலீட்டின் பங்கு மதிப்பு 40 லட்ச ரூபாய். நகைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய். மற்ற சொத்துக்களின் மதிப்பு, 4.75 கோடி ரூபாய். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் நாத்துக்கு முதலிடம்:நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல் நாத்துக்கு தான், மத்திய அமைச்சர்களிலேயே, அதிக அளவு சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்து ரூ.263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
மத்திய அமைச்சரவையிலேயே, மிக மிகக்குறைந்த சொத்துக்களை கொண்டவராக ஏ.கே.அந்தோணி உள்ளார். மொத்தமே ரூ.1.8 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். இவரிடம் ரூ.84 ஆயிரம் ரொக்கம் உள்ளதாம்.

இவர்கள் தவிர, சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, 7.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், அமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு, 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும், வீர்பத்ர சிங்கிற்கு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும், குலாம் நபி ஆசாத்துக்கு 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்களுக்கு எவ்வளவு சொத்து?மத்திய அமைச்சரவையில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த இணை அமைச்சர்களை பொறுத்தவரை, நெப்போலியனுக்கு, 10.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி செல்வனுக்கு, 50.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாராயணசாமிக்கு 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பழனி மாணிக்கத்துக்கு சொந்தமாக, 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக