திங்கள், 30 ஏப்ரல், 2012

பாவம், பங்காரு லட்சுமண்!...dm


ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் முன்னணி இடம் வகிக்கும் இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்காக ஓர் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குற்றம் பெரியதா சிறியதா என்பதல்ல, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்போதுதான் சட்டத்தின் ஆட்சியும் நடக்கிறது, நியாயமும் தர்மமும் முற்றிலுமாகச் சீர்குலைந்துவிடவில்லை என்கிற நம்பிக்கை சாமானிய குடிமகனுக்கு ஏற்படும்.
அந்த அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றிருப்பதை வரவேற்கிறோம். கொள்ளைகள் மலிந்துவிட்ட நேரத்தில் நமது காவல்துறையினர் சில பிக்பாக்கெட்டுகளையாவது பிடிக்கிறார்களே என்று ஆறுதல் அடைவதைப்போல, பல ஊழல் முதலைகளைத் தட்டிக்கேட்க ஆளில்லாமல் இருக்கும்போது பங்காரு லட்சுமண் போன்ற மீன்களாவது அகப்படுகிறதே என்று சமாதானப்பட்டுக் கொள்வோம்.
பங்காரு லட்சுமண் மீதான குற்றச்சாட்டு சற்று விசித்திரமானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நேரம் "தெஹல்கா' என்றொரு இணையதளம் தொடங்கப்பட்டது. அந்த இணையதளத்தைப் பிரபலப்படுத்த பல அரசியல் தலைவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துவது என்று தீர்மானித்து அவர்கள் களம் இறங்கினார்கள்.
தெஹல்கா நிருபர் ஒரு மறைநாடகம் நடத்தினார். அன்றைய ஆளும் கட்சியின் தலைவர் என்கிற முறையில் பங்காரு லட்சுமணைத் தொடர்பு கொண்டார். அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு உதவி செய்வதற்காக பங்காரு லட்சுமணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தரப்பட்டது. அப்படிப் பணம் வழங்கப்பட்டதை மறைந்திருந்து படம் எடுத்தார்கள். பேசியதும் பதிவு செய்யப்பட்டது.
அந்த நாடகம் அடுத்த நாளே பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகி, தெஹல்கா இணையதளத்திற்கு நாடு தழுவிய விளம்பரம் இலவசமாகக் கிடைத்தது. பங்காரு லட்சுமண் பதவி விலக நேர்ந்தது. உலகம் அவரை மறந்துவிட்டாலும் சட்டம் மறக்காமல் இருந்து இப்போது தண்டனையும் கிடைத்திருக்கிறது.
ஒரு லட்சம் ரூபாயில் நாடு தழுவிய விளம்பரம் தேடிக்கொள்ளும் தரக்குறைவான உத்தியைக் கையாண்ட தெஹல்கா நடத்திய மறைநாடகத்தில் சிக்கிக் கொண்டவர் பங்காரு லட்சுமண் என்றாலும், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இவ்வளவு தரம் தாழ்ந்து போயிருக்கக்கூடாதுதான். அவருக்காகப் பரிதாபப்பட முடியுமே தவிர, தண்டனை வழங்கப்பட்டதில் தவறு காண முடியாது. அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பதைப்போலவே தரக்குறைவான நாடகத்தை அரங்கேற்றிய தெஹல்காவும் மக்களின் பேராதரவைப் பெற்றுவிடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எழுபது வயதைக் கடந்துவிட்ட பங்காரு லட்சுமணுக்கு முதுமைக்கே உரிய பல உடல்கோளாறுகள் உள்ளன. அதற்காக கருணைகூர்ந்து சிறைத்தண்டனையை 6 மாதங்களாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார். ""லட்சுமண் செய்துள்ள குற்றம் விபசாரத்தைவிட மோசமானது. விபசாரமாகிலும் தனிநபர் ஒழுக்கம் தொடர்பான குற்றம். ஆனால், போர்முனையில் நம் நாட்டுக்காக பல ஆயிரம் வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து காவல்காக்கும்போது, அவர்கள் பயன்படுத்தும் ஆயுதத் தளவாடங்களில் ஊழல் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்'' என்பதுதான் நீதிபதி அளித்துள்ள விளக்கம்.
"விஞ்ஞானரீதியாக' லஞ்சம் வாங்கத் தெரியாத அரசியல்வாதியாக இருந்திருக்கிறார் பங்காரு லட்சுமண். அதனால் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ரூ. 20,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ராணுவத்துக்குத் தளவாடம் வாங்குவதில் பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்று வெளிநாடுகளில் சேமித்து வைத்திருப்பவர்களைச் சட்டத்தின் கரங்கள் நெருங்குவதே இல்லையே என்கிறபோது நமக்குக் கோபம் வருகிறது.
கால்நூற்றாண்டு காலத்திற்கு மேலாகிவிட்டாலும் இன்னும் போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் குவாத்ரோச்சியைத் தப்பி ஓடவிட்டு, அவரைத் தேடிக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு இழுத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்த எங்களால் முடியாததால் போபர்ஸ் வழக்கையே முடித்துக் கொள்ளலாம் என்று வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் கூறுகிறது மத்திய புலனாய்வுத் துறை.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வீழ்த்த எம்.பி.க்களுக்குப் பணம் கொடுத்த வழக்கு முடிந்தபாடில்லை. ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே தனது வீட்டில் செயல்பட வைத்து அதன் மூலம் தனது குடும்ப நிறுவனம் தொழில் நடத்த உதவி, அரசுக்கு ரூபாய் 500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்திய முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மீதான சிபிஐ அறிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூட சிபிஐ தயாராக இல்லை.
போபர்ஸ், தாத்ரா ராணுவத் தளவாட ஊழல்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட இருக்கும் வேளையில் பங்காரு லட்சுமண் வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது திட்டமிடப்படாத நிகழ்வாக இருக்கலாம். ஆனால், "நீயும் திருடன்தான்' என்று பிக்பாக்கெட் அடிப்பவனைப் பார்த்து ஒரு கொள்ளைக்காரன் சொல்வதைப்போல, இன்றைய ஆளும் கட்சி அன்றைய ஆளும் கட்சிக்குப் பதிலடி கொடுக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் ஊழல் செய்வதற்கும் திறமை வேண்டும் என்பதை பங்காரு லட்சுமணுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு உணர்த்துகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யத்தான் செய்கிறது-சிலபேருடைய விஷயத்தில் மட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக