வெள்ளி, 4 மார்ச், 2011

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள்....

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? 'உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா... அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் 'திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக