வியாழன், 24 மார்ச், 2011

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை....


தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: பெண்களுக்கு ஒரு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம், தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழகத்தை தலை நிமிர செய்வதுதான் அ.தி.மு.க.,வின் லட்சியம். மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருவாயை, 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம். விவசாய உற்பத்தியை இரு மடங்காக பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாயப் பொருட்களின் உற்பத்தியால், 9 சதவீத விவசாய வளர்ச்சி, அரிசி உற்பத்தி, 13.45 டன்னாக உயர்த்துதல். விவசாய தனிநபர் வருமானத்தை, 3 மடங்குக்கு மேல் உயர்த்தி, 30 ஆயிரம் எக்டேர் நிலத்தை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம். தள்ளுபடி விலையில் தரமான விதைகள், இடு பொருட்கள், விவசாய கருவிகள், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு நஷ்ட ஈடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும், 20 கிலோ அரிசி வழங்கப்படும்.
விலைவாசியை குறைக்க, ஆன்-லைன் வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். "எத்தனால்' எரிபொருள் உற்பத்தியை பெருக்க, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனபடுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும். புதிய எத்தனால் தயாரிப்பு கொள்கை வகுக்கப்படும். விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். ரேஷன் கார்டுகளுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசம். இதன் மூலம், 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும். புதிதாக, லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை கிடைக்கும். இதன் மூலம், 20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ, பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை, 1,500 கிராமங்களில், 24 மணி நேரமும் செயல்படும், "டெலி மெடிசின் சென்டர்' ஏற்படுத்தப்படும். அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
3 லட்சம் பேருக்கு, 300 சதுரடியில், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், இலவசமாக பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். 40 லட்சம் நடுத்தர மக்களுக்கு லட்ச ரூபாய் மானியத்தில் திட்டம் விரிவாக்கப்படும். வீடில்லாதவர்கள் வீடு கட்ட மூன்று சென்ட் நிலம் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய வீட்டுக் கடன், வட்டிகளால் ஏற்படும் பிரச்னை தீர்க்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும், 4 ஆண்டுகளில், மும்முனை மின்சார இணைப்பு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மின் திருட்டை ஒழிக்க, மின் பாதுகாப்புப் படை அமைக்கப்படும். 2013க்குள், 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். இரண்டு ஆண்டுகளில், நகராட்சி, மாநகராட்சி கழிவுகளை கொண்டு, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய, "கார்பன் நியூட்ரல்' நகரங்களாக மாறும். சூரிய சக்தி, காற்றாலை, இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். இதன் மூலம், கிராமங்களில், 64 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். வீடுகள், தெருக்களுக்கு சூரிய ஒளி மூலம் இலவச மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், சிறப்பு உணவு பூங்கா, குளிர் பதன கிடங்குகள் மற்றும் உணவு தொழிற்பூங்கா, நவீன மக்கள் சந்தைகள், பருத்தி உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை, ஆடை, அலங்கார பொருட்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கைத்தறி துறை மறு சீரமைப்பு, பால் உற்பத்தியை பெருக்க வெண்மை புரட்சி, அடிதட்டு மக்களுக்கு, 4 ஆடுகள் வழங்கப்படும். நகர்ப்புற வசதிகள், கிராமங்களுக்கும் கிடைக்க திட்டம், பள்ளி கல்வி சீரமைப்பு, உயர் கல்விக்கு 12 அம்ச திட்டம், மாணவர்களை ஊக்குவிக்க தனித்திறமை, அறிவுசார் வளர்ச்சிக் கழகம், மீன் பிடி தொழில் நவீனமாக்கல், எஸ்.சி., - எஸ்.டி., - சிறுபான்மையினர், தொழிலாளர்கள், இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், முதியோர், ஆதரவற்றோர், தமிழ் அகதிகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக