செவ்வாய், 5 ஏப்ரல், 2011

சகாயம் செய்த சகாயம்-4

கிராமத்தில் தங்குவோமும் உழவர் உணவகமும்

மாவட்ட ஆட்சியராக இருப்பவர் மாவட்ட நிர்வாகத்தை மட்டும் கவனிப்பவர் அல்ல,  சில திட்டங்களைத் தீட்டுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளது என்பதைச் செயலில் காட்டியவர் சகாயம்.  இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலத்தைக் கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர். மக்களோடு மக்களாகக் கலந்து பழகி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியவர். அப்படி அவர் தீட்டிய திட்டங்கள் பல. அதில் முதலாவது ’மாதம் ஒரு கிராமம்’ என முதலில் தொடங்கப்பட்டுப் பின் ‘கிராமத்தில் தங்குவோம்’ எனப் பெயர் மாற்றம் பெற்ற திட்டம்.

மாவட்ட ஆட்சியரும் நிர்வாகத்தின் பல்வேறு துறைகள் சார்ந்த உயரதிகாரிகளும் என இருபதிலிருந்து முப்பது பேர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் ஒன்றிற்குச் சென்று ஓரிரவு முழுவதும் அக்கிராம மக்களின் குறைகளைக் கேட்டு  உடனடியாக அவற்றைத் தீர்த்து வைக்கும் திட்டம் இது. அதிகார மையங்களை நாடி வந்து மக்கள் அலைக்கழிவதை அன்றாடம் காண்கிறோம். அதற்கு எதிராக அதிகாரமே மக்களைத் தேடிச் செல்லும் வகையிலான திட்டம் இது. இது புதிய பலன்களை மக்களுக்குத் தரும் நலத்திட்டம் அல்ல. ஏற்கனவே அரசு கொண்டு வந்திருக்கும் நலத் திட்டங்களின்  பலன்களை முழுமையாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்  உத்தி வகுப்புத் திட்டம். இத்திட்டத்தின்படி மாதம் ஒரு கிராமம் என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாவட்ட நிர்வாகமே போய்த் தங்கியது.

அக்கிராமத்தில் உள்ள முதியோர்களில் உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள் இருந்தால் அங்கேயே விசாரித்து உடனடியாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. வீடு, நிலங்களுக்குப் பட்டா வேண்டுபவர்களுக்கு அங்கேயே வழங்கப்பட்டது. திருமண உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டப் பயன்களும் அப்போதே அக்கிராம மக்களுக்குக் கிடைத்தன. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஊர்ப் பொதுப் பிரச்சினைகளையும் நிலத் தகராறு உள்ளிட்ட தனிநபர் பிரச்சினைகளையும் ஆட்சியர் தலைமையிலான குழு பேசிச் சுமுகமாகத் தீர்த்து வைத்தது.

உண்மையில் ஆட்சியர் தம் ஊரில் வந்து தங்க மாட்டாரா என நாமக்கல் மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வகையில் மிக வெற்றிகரமாக நிறைவேறிய திட்டம் இது. மக்கள் பிரதிநிதிகளாக வாக்கு வாங்கித் தேர்வாகிச் செல்லும் அரசியல்வாதிகள் தம் தொகுதியில் உள்ள ஊர்களின் பெயர்களையேனும் அறிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் சகாயம் நாமக்கல் மாவட்டத்தின் எல்லா ஊர்களையும் தெரிந்து வைத்திருந்தார். இத்திட்டத்தில் சில மலைக் கிராமங்களுக்குப் பல கல் தொலைவு நடந்தே சென்றிருக்கிறார் சகாயம். பேருடல் கொண்ட சில அதிகாரிகள்தான் அவருடன் நடந்து வரச் சிரமப்பட்டனர். மலை கிராமங்கள் சகாயத்தின் வருகையால் போக்குவரத்து வசதிகளையும் மின் இணைப்புகளையும் பெற்றன.

முப்பது பேருக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரு கிராமத்திற்குச் சென்றால் கார்கள், ஜீப்கள் என அரசு வாகனங்கள் பலவற்றைப் பயன்படுத்த வேண்டி நேரும். அது அதிக செலவு எனக் கருதி போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஆட்சியர் உட்பட அனைவரும் செல்லுதல் என்னும் நடைமுறையைக் கொண்டு வந்தார். தம் வீட்டிலிருந்தே இரவுச் சாப்பாட்டை எடுத்துச் செல்வதும் சகாயத்தின் வழக்கம்.  நலத் திட்டங்களின் பலன்கள் மக்களுக்குச் சேரும் வகையில் சகாயம் செயல்பட்டதால்  ‘அவர் திமுகவுக்குச் சாதகமானவர்’ என்னும் பேச்சு ஒன்றும் கிளம்பியது. அவரது தமிழுணர்வும் திமுகவோடு இணைக்க வசதியாக இருந்தது.  அவர் மக்களைச் சார்ந்தவர் என்று சொல்வதுதான் பொருத்தம். நலத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் சகாயம் செய்ததால் திமுக அரசுக்குத்தான் லாபம்.  இந்தத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு  வெற்றி கிடைக்குமானால் அதில் சகாயத்தின் பங்கும் கணிசமானது என்றே சொல்வேன்.

தம் அதிகார வரம்பிற்கு உட்பட்டுச் சில மக்கள் நலத் திட்டங்களையும் சகாயம் உருவாக்கினார். அதில் மிக முக்கியமானது ‘உழவர் உணவகம்’ என்னும் அற்புதமான திட்டம். அவர் ஆட்சியராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அத்திட்டம் தொடங்கப்பட்டது. விடிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிக் காலை ஒன்பது மணி வரை செயல்படும் உழவர் சந்தைகள் அதன்பின் மறுநாள் வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் சும்மாதான் கிடக்கின்றன. உழவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் இதன் மாலை நேரத்தை மாற்றினால் என்ன என்னும் சகாயத்தின் சிந்தனை விளைவே  உழவர் உணவகம்.

வேளாண்மைத் துறை மூலமாக இந்த ஏற்பாட்டைச் செயல்படுத்தினார் சகாயம். உள்ளூரின் மரபு உணவுகளை எல்லாம் தயாரித்து ஒருநாள் மாலையில் காட்சியும் விற்பனையும் எனத் தொடங்கப்பட்டது இது. ஐந்து நட்சத்திர உணவகங்களில் நடைபெறும் உணவுத் திருவிழாக்களை விட மிகவும் உற்சாகமாக இது நடந்தது. தமிழக வேளாண் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என யாருக்கும் தெரியாது. மிகவும் சோம்பிக் கிடக்கும் துறை இது. ஆனால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு நிதியைத் தனக்கு ஒதுக்கிக்கொள்ளும் திறன் பெற்ற துறை. அந்தத் துறையைச் சுறுசுறுப்பாக்கினார் சகாயம்.

அத்துறையில் பணியாற்றும் என் உறவினர் ஒருவர் என்னிடம் ‘கும்மாயம்னு ஒரு பலகாரம் இருக்குதாமே. அதத் தயாரிச்சுக் கண்காட்சியில வெக்கச் சொல்றாரு கலெக்டரு. உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். அந்தப் பலகாரம் குறித்து உ.வே.சாமிநாதையர் ஒரு கட்டுரையே எழுதி உள்ளார். மணிமேகலையில் வரும் ‘பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் இயற்றி’ என்னும் அடியில் கும்மாயம் என்பதற்குப் பொருள் தெரியவில்லை. நீலகேசி முதலிய நூல்களில் கும்மாயம் வந்தாலும் எதிலிருந்தும் அதன் பொருளைத் தெரிந்துகொள்ள இயலவில்லை.  கும்பகோணம் பெருமாள் கோயிலில் நிவேதனமாகக் கும்மாயம் படைக்கப்படுவதை அறியும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்கு நேர்கிறது.  அதைச் சுவையாக விவரிக்கும் கட்டுரை அது.

அக்கட்டுரையின் இறுதியில் ‘பச்சைப் பயிறும் சர்க்கரையும் கலந்து செய்யும்  சிற்றுண்டி’ எனப் பொருள்படும் வகையில் அவர் குறிப்பு எழுதியிருப்பார். கொங்குப் பகுதியில் ‘சொய்யான்’ என்று சொல்வார்கள். பச்சைப் பயிறு அல்லது கடலைப் பருப்புடன் வெல்லமோ கருப்பட்டியோ கலந்து உருண்டை பிடித்து அதை அரிசிமாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு எடுக்க வேண்டும். இதை என் உறவினரிடம் சொன்னேன். உழவர் உணவகக் கண்காட்சியில் ‘சொய்யான்’ என்னும் கும்மாயமும் இடம்பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட பெரும் மகிழ்ச்சி ‘கும்மாயம்’ என்பதை ஆட்சியர் அறிந்திருக்கிறாரே என்பதுதான்.

உணவுத் திருவிழாவின் நோக்கம் அடுத்த நாள் முதல் தொடங்கும் உழவர் உணவகத்தை அறிமுகப்படுத்துவதுதான். காலையில் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்கும் உழவர்களில் யாருக்கு நேரமும் ஆர்வமும் இருக்கிறதோ அவர்கள் மரபான உணவுவகைகளைச் செய்து வந்து உழவர் உணவகத்தில் விற்பனை செய்யலாம். ‘விவசாயிகளை வியாபாரிகளாக்குவோம்’ என இத்திட்டத்திற்கு முழக்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இத்தகைய முழக்கங்களை உருவாக்கி மக்கள் மனதில் பதிய வைப்பதும் சகாயத்தின் உத்தி. ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்பது அவர் அலுவலக வாசகம்.

விவசாயிகளின் மிக முக்கியமான பிரச்சினை இடைத்தரகர்கள்தான். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலைக்கும் விற்பனை விலைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. விளைபொருளுக்கு மிகுந்த தேவை இருந்து விளைச்சல் குறையும் காலத்தில் விற்பனை விலை அதிகமாக இருக்கும். ஆனால் விவசாயிக்கு வழக்கமான கொள்முதல் விலைதான். விலை குறைவானாலும் அதிகமானாலும் ஆண்டு முழுவதும் ஒரே கொள்முதல் விலை எனப் பேசி வைத்திருப்பர். அதை மீற முடியாது. உழவர் சந்தைகளில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது.

உழவர் சந்தைத் திட்டமே மிகவும் நல்ல திட்டம்தான். ஆனால் அதிகாரிகள் உழவர்களை நடத்தும் முறைதான் மிகவும் கேவலம். வா, போ என ஒருமையில் பேசுவதும் விலை நிர்ணயத்தில் அடாவடி செய்வதும் வியாபாரிகளை உழவர்கள் என்னும் போர்வையில் உள்ளே விடுவதும் என அங்கே நடக்கும் மோசடிகளைச் சரி செய்தால் அது நல்ல திட்டமாக இருக்கும். உழவர்களை மதிப்போடு நடத்த வேண்டும் என்பதில் சகாயம் கண்டிப்பானவர். ஆகவே அவர் காலத்தில் உழவர் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட்டன. சுய உதவிக் குழுக்கள் சில கடைகளை நடத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். கொல்லிமலை விளைபொருள்களை மலைவாழ் மக்களே கொண்டு வந்து விற்பனை செய்யவும் அங்கே  இடம் ஒதுக்கப்பட்டது. உழவர்களிடம் அதிகாரிகள் அன்பாகவும் அனுசரணையாகவும் நடக்க வேண்டும் எனச் சகாயம் வலியுறுத்தினார். தலைமை எப்படி இருக்கிறதோ அதற்கேற்பவே அடுத்தகட்ட அதிகாரங்கள் இருக்கும் என்பது உண்மை. சகாயம் பாணி பரவலாகக் கடைபிடிக்கப்பட்டது.

அங்கேயே தொடங்கப்பட்ட உழவர் உணவகத்திற்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது. விவசாய வேலைகள், ஆடுமாடுகளைக் கவனித்தல் என எந்நேரமும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விவசாயிகள் உழவர் உணவகத்தில் வந்து கடை போடுவார்களா என்னும் கேள்வி இருந்தது. ஆனால் பதினைந்திலிருந்து இருபது கடைகள் உழவர் உணவகத்திற்கு வந்தன.  உணவகம் தொடங்கப்பட்ட சமயம் நாமக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி. அந்த ஆண்டு மிகக் குறைவான மழையே பெய்திருந்தது. உழவை மட்டுமே நம்பியிருந்தவர்கள்  பாடு பெருங்கஷ்டம். தீவனம் இல்லாமல் ஆடு மாடுகளையும் விற்க வேண்டி நேர்ந்தது. ஆகவே உழவர் உணவகத்தில் கடைபோட ஆட்களைத் தேட வேண்டியிருக்கவில்லை. களி, கம்மஞ்சோறு, தினை உருண்டை, சொய்யான், ஒப்புட்டு, உளுந்தங் கஞ்சி, கொழுக்கட்டை, சோளப் பணியாரம், சோளத் தோசை, சோள அடை, குச்சிக்கிழங்கு உப்புமா, குச்சிக்கிழங்கு வடை, முளைக் கட்டிய பயறுகள் எனப் பல உணவு வகைகள். கூட்டுச்சாறு எனப்படும் அருமையான குழம்புடன் மேலும் பலவகைக் குழம்புகள்.

கொல்லிமலையில் கிடைக்கும் ஒருவகைக் கிழங்கு ஆட்டுக்கால் கிழங்கு என்பதாகும். ஆட்டின் காலைப் போல வடிவம் கொண்ட இக்கிழங்கில் தயாரிக்கும் சூப்பு மருத்துவ குணம் கொண்டது. முழங்கால் வலி, உடல்வலி ஆகியவற்றைப் போக்கும். அந்தச் சூப்பு விற்பனை கொல்லிமலையைச் சேர்ந்த ஒருவர் மூலமாகவே உழவர் உணவகத்தில் நடைபெற்றது. பெரிய தேக்குசா நிறையக் கொண்டு வரப்பட்டுச் சூடாகத் தரப்படும் அச்சூப்புக்கு நல்ல வரவேற்பு.

பழங்கள் மூலமாகத் தயாரிக்கும் ஐஸ்கிரீம் கடை ஒன்றும் இருந்தது. சப்போட்டா, கொய்யா ஆகிய விலை குறைந்த பழங்களிலிருந்து சுவையாகத் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் நன்கு விற்பனையானது. அதைத் தயாரிக்கும் பயிற்சிக்கு உழவர் ஒருவர் அனுப்பப்பட்டு அவருக்கு வங்கி நிதி உதவியுடன் எந்திரம் வாங்கிக் கொடுத்து உதவி செய்தவர் சகாயம் அவர்கள். சகாயத்தைப் பற்றிப் பேசினால் அந்த விவசாயி இன்றும் கண்கலங்கிவிடுவார். ‘பாசனத்துக்குத் தண்ணி இல்லாம போயிச் சோத்துக்கே திண்டாட்டம் வந்திருச்சி. குடும்பத்தோட தற்கொல பண்ணிக்கலாம்னு இருந்தம். சகாயந்தான் காப்பாத்துனாரு. அவரு எங்குடும்பத்துக்கே குலதெய்வம்ங்க’ என்பார் அவர்.

மாலையில் ஐந்து மணிக்குத் தொடங்கும் விற்பனை இரவு ஒன்பது மணி வரைக்கும் நடைபெறும்.  வேளாண் துறை அலுவலர் ஒருவருக்குத் தினமும் மாலையில்  உழவர் உணவகத்தில் பொறுப்பு. வாடிக்கையாளர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. உட்கார இருக்கைகளும் சில கயிற்றுக் கட்டில்களும் போடப்பட்டன. உழவர் சந்தை நன்கு சுத்தம் செய்யப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. மக்கள் பலர் ஓய்வாக வந்து கட்டில்களில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பாடுபழமைகள் பேசிப் போயினர். இரண்டு உருண்டை கம்மஞ்சோறு பத்து ரூபாய்தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோர் தினசரி வாடிக்கையாளர்களாக இருந்தனர். கல்லூரி மாணவர்கள் வடை, சோளப் பணியாரம் சாப்பிட வந்தனர்.  குடும்பமாக வந்து சாப்பிட்டுப் போனவர்கள் அனேகம். ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானம் எனக் கணக்கிட்டுச் செய்திகள் வந்தன.

வாரத்திற்கு ஒருமுறையேனும் சகாயம் மாலை நேரத்தில் தம் குடும்பத்தோடு உழவர் உணவகத்திற்கு வந்துவிடுவார். உணவகச் செயல்பாட்டைக் கண்காணிப்பது மட்டுமல்ல நோக்கம். கட்டிலில் உட்கார்ந்து குடும்பத்தோடு  இரவு உணவை முடித்துச் செல்வார் அவர். அவர் மகன் உழவர் உணவகத்திற்குத் தினமும் செல்ல வேண்டும் என வற்புறுத்துவான் எனவும் சொல்லக் கேள்வி. ஆட்சியர் மிகச் சாதாரணமாக உழவர்களுடனும் மக்களுடனும் பேசிக் கொண்டிருக்கும் காட்சி நமக்கு அபூர்வம்தான். அதை அவர் இயல்பாகச் செய்வார். உண்ணும் பண்டங்களுக்குப் பணம் கொடுக்காமல் ஒருநாளும் சென்றதில்லை அவர்.

இந்த உழவர் உணவகத்தின் வெற்றி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோட்டிலும் உழவர் உணவகம் தொடங்கக் காரணமாயிற்று. ராசிபுரம், பள்ளிபாளையம் முதலிய ஊர்களிலும் தொடங்கத் திட்டம் இருந்தது. சகாயத்தின் இடமாற்றலால் இவை நடைபெறவில்லை. சகாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பின் இன்றும் உழவர் உணவகம் நடைபெற்று வருகிறது. ஆனால் பெயரளவுக்குத்தான். இடம் சுத்தம் செய்யப்படுவதில்லை. கட்டில்களும் இருக்கைகளும் அகற்றப்பட்டுவிட்டன. கடைகள் பத்துக்குள் எனக் குறைந்துவிட்டன. தினைமாவு போன்ற சில பதார்த்தங்கள் இல்லை. கூட்டம் குறைந்துவிட்டது. உழவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதற்காக நடத்துகின்றனர்.

அதன் போக்கிலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தானாகவே அழிந்துபோகும் என்னும் தந்திர நடைமுறையை வேளாண் துறை பின்பற்றுகின்றது. இன்னும் எத்தனை நாட்களோ தெரியவில்லை. அதிகாரி ஒருவரின் மூளையில் உதித்த திட்டம் இது. அதனால்தான் இந்த கதி. இதுவே அரசியல்வாதியின் மூளையில் உதித்திருக்குமானால் இந்நேரம் தமிழகம் முழுவதும் உழவர் உணவகம் தொடங்கப்பட்டிருக்கும். தேர்தல் அறிக்கைகளில் உழவர் உணவகம் இடம்பெற்றிருக்கும். ஆனால் நாமக்கல் மாவட்ட மக்கள் உழவர் உணவகத்தையும் கிராமத்தில் தங்குவோமையும்  மறக்க மாட்டார்கள். சகாயத்தையும் அவர் ஆட்சியராக இருந்த காலத்தையும்கூட.

உழவர் உணவகம் திட்டம் தொடர்பாக அப்போது மக்களிடம் நிலவிய கதை ஒன்றைச் சொல்லி இதை முடிக்கிறேன். இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைக் கண்ட வேளாண் துறை அமைச்சர் கோபப்பட்டு ‘என்னைக்கூடக் கேட்காமல் இந்தச் சகாயம் எப்படித் தொடங்கலாம்?’ என்றாராம். முதல்வரிடம் சென்று சகாயம் செயல்படுவது சரியில்லை, அவரை மாற்றுங்கள் என்றும் கேட்டாராம். அதற்கு முதல்வர் ‘சகாயம் சுயேச்சையாத் தேர்தல் நின்னாக்கூட நாமக்கல்ல ஜெயிச்சிருவாரு. அவர இப்ப மாத்துனா மக்கள் கோபம் நம்ம மேல திரும்பீருமய்யா’ என்று பதில் சொன்னாராம்.

அப்பேர்ப்பட்ட ஆட்சியர் சகாயத்தை ஏன் மாற்றினார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக