ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

எது ஊழல்? ஊழலின் ஊற்று மூலம் எது? ...


தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.  உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.
நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை – ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றிய டாடா, பலநூறு கோடி மதிப்புள்ள அதன் அசையாச் சொத்துக்களை இலவச இணைப்பாகப் பெற்றதோ, அதன் ரிசர்வ் நிதியையே கடத்திக் கொண்டு போனதோ இவர்களைப் பொறுத்தளவில் ஊழல் இல்லை – ஏனெனில் அது முறையாக சட்டப்பூர்வமாக நடந்துள்ளது.
தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.
அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.
இதனால் தான் தனியார் கம்பெனிகளிடம் தனி ஒப்பந்தங்கள் போட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு அதன் மதிப்பை சந்தையில் ஊகமாக உயர்த்தும் விதமாக அவற்றின் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிட்ட  டைம்ஸ் நௌ, இந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஊதுகுழலாகச் செயல்படுவதைப் பற்றி கூச்சப்படவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமான நபர்களுக்கு அமைச்சரவைத் துறைகளை ஒதுக்கீடு செய்ய தரகு வேலை பார்த்த பர்க்கா தத், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றி பெரிய நன்னூல் போல் கேமராவின் முன் பேச வெட்கப்படவில்லை. ஏனெனில், அண்ணாவின் கோரிக்கை எந்தவிதத்திலும் முதலாளிகளின் நலனுக்கும் அவர்களின் அடிவருடிகளாகச் செயல்படும் முதலாளித்துவ ஊடகங்களின் நலனுக்கும் முரண்படவில்லை என்பதில் இருந்தே இவர்களின் ஆதரவு எழுகிறது.
தங்களின் வாழ்வாதாரமான நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடிக்கும் பெங்களூருவில் இருபத்து நான்குமணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியருக்கும் ஊழல் பற்றிய பார்வை அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனது வாழ்வாதாரமான நிலமே தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்று அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்மிடமிருந்து திருடப்பட்டுவிட்டால் தமது மக்கள் வாழ்விழந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அவர் நிலப்பறிப்பையே ஊழல் என்று சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் – எதிர்த்துப் போராடுகிறார். ஊடக வெளிச்சத்தில் ஊழலை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இந்தத் திடீர்ப் புரட்சியாளர்களோ போஸ்கோவுக்கு அனுமதியளித்ததில் முறையாக டென்டர் கோரப்பட்டதா, யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று சில்லறை நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் – நிலம் அபகரிப்பட்டதை ஒரு தொழில் நடவடிக்கையாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாகவுமே பார்க்கிறார்கள். இரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரு பொருட்டில்லை.
அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளங்கள் கொள்ளை போவதை ஒரு வழக்குப் போட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தடுத்து விட முடியாது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் அவை அரசின் கொள்கை முடிவுகள் என்பதால் நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது என்று பல்வேறு சந்தர்பங்களில் அறிவித்துள்ளது. அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக