செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நேர்மையாளார்களுக்கு பிடித்த சகாயம் ...5


சகாயம்: வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி

நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய இருபத்தேழு மாதங்களில் சகாயம் தீட்டிய திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்திய விதமும் தேர்ந்த நிர்வாகி அவர் என்பதையும் நேர்மையும் பொதுநல நோக்கும் உடையவர் என்பதையும் வெளிப்படுத்தின.  அதனால்தான் தன் சொத்து விவரங்களை வெளியிடும் துணிச்சல்  அவருக்கு வந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுத் திட்டங்கள் அவர்களைச் சென்று சேர விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். அத்தோடு ‘ஊன்றுகோல் திட்டம்’ என்னும் ஒன்றையும் செயல்படுத்தினார். ஆர்வமும் வாய்ப்பும் உள்ள புரவலர்கள் மாற்றுத் திறனாளி ஒருவரைத் தத்தெடுத்துக் கொள்ளுதல் என்பதே இத்திட்டம். தத்தெடுக்கப்பட்ட திறனாளிக்கு ஆலோசனைகள் வழங்குதல், வேலைவாய்ப்புக்கு உதவுதல் உள்ளிட்ட அவர் நலன்கள் சார்ந்து அந்தப் புரவலர் இயங்க வேண்டும். சகாயமே அப்படி ஒருவரைத் தத்தெடுத்து முன்னுதாரணமாக விளங்கினார். அவரைப் பின்பற்றியவர்கள் பலர். ஆனால் சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டபின் அத்திட்டம் அப்படியே கிடப்பிற்குப் போய்விட்டது. ஆட்சியர் தத்தெடுத்தவருக்கு உதவ  அடுத்த ஆட்சியர் தயாராயில்லை. ஒருவர் தொடங்கிய நற்செயல்களை அடுத்தவர் தொடரும் பண்பு தமிழகத்திலேயே கிடையாதே. 

மாவட்ட மக்கள் ஆட்சியரிடம் தம் குறைகளை இணையம் வழியாகத் தெரிவிக்கத் ‘தொடுவானம்’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்தினார். இணையம் மூலம் தெரிவிக்கப்பட்ட புகார்களை உடனடியாக விசாரித்துக் குறை களைய முயன்றார். சமூக உணர்வோடு சிந்திப்பவர்கள் எல்லா நிலைகளிலும் வேறுபட்டவர்களாக இருப்பர் என்பதற்குச் சகாயம் சான்றாவார். சுற்றுச்சூழலிலும் அவர் பெரிதும் அக்கறை காட்டினார். நாமக்கல் மாவட்ட ஏரிகளைத் தூர் வாரிப் பராமரிக்க அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதி முதலியவற்றைப் பயன்படுத்தினார். ஏரிகளில் சாக்கடை நீரைக் கொண்டு சேர்ப்பது கூடாது எனத் தீவிரமாக இருந்தார். 

நான் வசிக்கும் பகுதியில் அந்தக் கால ஓடை ஒன்றும் அருகில் காலியான மனைகளும் உள்ளன. ஆசிரியர் குடியிருப்புப் பகுதியின் சாக்கடை நீர் முழுக்க இந்த ஓடையில்தான் செல்லும். காலி நிலம் முழுக்கச் சாக்கடை நீர் பரவி நாற்றம். நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டது. கொண்டிசெட்டிபட்டி ஊராட்சிக்கு அவர் வருகை தந்த போது எங்கள் பகுதி மக்கள் கூடி சாக்கடை நீரைக் கொண்டிசெட்டிபட்டி ஏரியில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அதைச் சகாயம் மறுத்துவிட்டார். இந்தப் பகுதிக்கே நீராதாரமாகவும் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கவும் காரணமான ஏரியை மாசுபடுத்த முடியாது. மாற்று வழியைச் சொல்லுங்கள் என்றார். 

அந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தார். புதை சாக்கடைத் திட்டம் அப்போது வேலை நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தால் இந்தப் பக்கம் கழிவு நீர் வராது என்றார்கள். சரி, அதுவரை பொறுங்கள், பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றார். பிரச்சினையைத் தெரிவித்ததும் இடத்தை விசாரித்து உடனே நேரில் பார்வையிட அவர் வந்ததிலேயே மக்கள் திருப்தி அடைந்தார்கள். கொண்டிசெட்டிபட்டி ஏரியின் பயனை அவர் சொற்கள் மூலமே பலரும் அறிந்தார்கள் என்பது என் அனுமானம். ஏனென்றால் படித்தவர்களுக்கு எப்போதுமே தம் நலம் ஒன்றே குறிக்கோள். தலையை அக்கம்பக்கம் திருப்பவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. 

அந்த ஏரி இப்போதும் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. நூறு நாள் வேலைத் திட்டம் இந்தப் பகுதியில் அந்த ஏரிக்குள்தான் செயல்படுகிறது. ஏரிக்குள் வளரும் புற்களை வெட்டி எடுப்பதுதான் நூறு நாள் வேலை. வெட்டி வேலைதான். வளரும் முட்களையும் புதர்ச் செடிகளையும் ஆண்டுக்கு ஓரிரு முறை சுத்தம் செய்தால் போதும். ஆனால் நூறு நாட்களுக்கு வேலை செய்த கணக்கு வேண்டுமே. ஏரியை ஒட்டி டாஸ்மாக் கடை வந்துவிட்டது. குடிமகன்கள் போடும் குப்பைகள் முழுக்க ஏரிக்கரையில் குவிந்து கிடக்கின்றன. அதைத் தடுப்பாருமில்லை. அதை அள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தில் வழியுமில்லை போல. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ஏரி நிரம்பி நீர் கடை போயிற்று. ஏரி நிரம்பும் என்பதை அப்போதுதான் பலர் நம்பினார்கள். ஏரியை ஒட்டிய நிலத்தில் இப்போது மனைகள் பிரிக்கும் வேலை வேகமாக நடைபெறுகிறது. குடியிருப்புகள் வந்துவிட்டால் ஏரி காலியாகிவிடும். என்ன செய்வது? சகாயம் போன்ற உணர்வு யாருக்கும் இல்லையே. 

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் எனத் திட்டம் தொடங்கி ‘கட்டிடங்களுக்கு நடுவே கானகம்’ எனப் பெயர் சூட்டினார் சகாயம். பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்திருக்கும் சில நூறு ஏக்கர் பரப்பில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்கள் அதில் பங்கேற்றார்கள். மரம் வளர்வதற்கு  வாய்ப்புள்ள இடங்களைத் தேர்வு செய்து அங்கெல்லாம் கன்றுகள் நடப்பட்டன. சகாயம் இருந்த காலத்தில் சில லட்சம் அளவுக்குக் கன்று நடும் வேலை நடந்தது. இப்போது அத்திட்டம் செயல்படவில்லை. அவர் நட்ட மரக்கன்றுகளையும் காணவில்லை. நீர் ஊற்றிப் பராமரிக்க ஆள் இல்லை. 

மழைக்காலத்தில் நட்டால் தானாகவே தழைந்து விடும். ஒரு கோடிக் கன்றுகளில் ஒரு லட்சமாவது தப்பித்துக்கொள்ளும் என்பது சகாயத்தின் நோக்கமாக இருந்திருக்கும். அவர் இருந்திருந்தால் அவற்றைக் காப்பாற்றவும் ஏற்பாடுகள் செய்திருக்கக் கூடும். நான் பணியாற்றும் கல்லூரிக்கு அருகே நூற்றுக் கணக்கில் நடப்பட்ட கன்றுகளில் எதுவும் இன்று இல்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கல்லூரி. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாளர்களும் புழங்கும் இடம். அருகில் ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் பெரிய கிராமமும் உள்ளது. இருந்தென்ன? சில கன்றுகளைக்கூடக் காப்பாற்றும் உணர்வு யாருக்கும் வரவில்லை. நடப்பட்ட கன்றுகளைப் பிடுங்கி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடிய மாணவக் கண்மணிகளைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சூழலில் வெறும் பார்வையாளனாக இருக்க நேரும்  கையாலாகாத்தனத்தை நொந்து கொள்வதுதான் என்னால் முடிந்தது. 

முதியோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அது இந்தியாவில் எங்கும் நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. சகாயம் சந்தித்த சில முதியோர்களின் நிலை அவரை இந்தச் சட்டத்தைக் கையிலெடுக்கத் தூண்டியிருக்கக்கூடும். இச்சட்டத்தைச் சொல்லிப் பயமுறுத்திப் பெற்றோரைக் கவனிப்பது கட்டாயம் என மகன்களுக்கு உணர்த்திய பல சம்பவங்கள் இங்குண்டு. மாதத்திற்கு மகன்களின் வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டுப் பெற்றோருக்கு இவ்வளவு தரவேண்டும் என ஆணையிட்டார். கவனிப்பாரற்றுக் கிடந்த முதியோர்கள் சகாயத்தை வாழ்த்தினர். நடுத்தர வயது மகன்கள் சகாயத்தை எதிரி போலப் பார்த்தனர். ‘இந்தக் கிழடுங்க பண்ற அக்குருமத்த ஆரு கேக்கறது? எதுனா ஒரு வார்த்த சொல்லீட்டா ஒடனே சகாயத்தப் பாக்கப் போறம்னு கெளம்பீருதுங்க’ என்று கோபம் கொண்டு பேசிய மகன்கள் பலருண்டு. எல்லாரும் பாராட்ட வேண்டும் என்பது சகாயத்தின் நோக்கமல்ல. திட்டினாலும் அவருக்குச் சரி என்று தோன்றுவதைச் செயல்படுத்தும் மனதிடம் அவரிடம் உண்டு. 

அவருக்கு மக்கள் ஆதரவு இருந்த அதே நேரத்தில் அதிகாரிகளின் எதிர்ப்பும் பலமாக இருந்தது. குறிப்பாகக் கிராம நிர்வாக அலுவலர்களின் எதிர்ப்பு. நலத் திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேர்வதற்குக் கிராம நிர்வாக அலுவலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஆனால் எல்லாவற்றையும் பூடகமாக்கியும் சிறு அசைவுக்கும் லஞ்சம் வாங்கியும் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். அவர்களை நேர்மையாக இருக்கச் சொல்லிக் கண்டித்ததோடு மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்திப் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டக் கூடாது என வலியுறுத்தினார் சகாயம். இது எப்படி அவர்களுக்குப் பிடிக்கும்? அரசு திட்டங்களை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம். ஆட்சியரின் திட்டங்களை நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் கொடி பிடித்தனர். மாவட்ட அளவில் மட்டுமல்லாது மாநில அளவிலும் அவர்கள் போராட்டம் நடத்தினர். 

அவர்களை வழிக்குக் கொண்டுவரச் சகாயம் இரண்டு தந்திரங்களைக் கையாண்டார். அரசு விதியைக் காட்டிக் கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லாரும் அவர்கள் பண்யாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும் என்றார். ஒரு கிராம நிர்வாக அலுவலரும் அப்படி வசிப்பவர் அல்ல என்றே நினைக்கிறேன். அப்படி வசித்தால் தங்கள் அதிகாரத்திற்கு மதிப்பிருக்காது என்பது ஒருகாரணம். கிராம வசதிகள் அவர்கள் வசிப்பதற்குப் போதுமானவை அல்ல என்பது மற்றொரு காரணம். சகாயம் இந்த விதியைக் கையிலெடுத்ததும் சகாயத்தை மாற்ற வேண்டும் எனக் கிராம நிர்வாக அலுவலர்கள்  அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். நாமக்கல் மாவட்டத்திலேயே சகாயத்தை மாற்ற வேண்டும் என்று ஒலித்த ஒற்றைக் குரல் அவர்களுடையது மட்டுமே. 

அதற்குக் காரணம் முழுக்க முழுக்கச் சுயநலம்தான். அலுவலகத்தில் இல்லை என்றால் எங்கே போயிருக்கிறார் கிராம நிர்வாக அலுவலர் என்பதைக் கரும்பலகையில் கண்டிப்பாக எழுதி வைத்துச் செல்ல வேண்டும் என்னும் விதியை எல்லாம் பின்பற்றச் சொன்னதால் கிராம நிர்வாக அலுவலர்களால் வேலை செய்யாமல் ஏமாற்ற முடியவில்லை. நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது காரணமல்ல, வேலைகளை நேர்மையாகவும் லஞ்சம் வாங்காமலும் செய்ய வேண்டும் எனச் சகாயம் வற்புறுத்தியதுதான் அவருக்கு எதிராக அவர்கள் திரளக் காரணம். அடுத்து கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டங்களுக்கு எதிராக உழவர்களும் சிறுசிறு குழுக்களாக மக்கள் அமைப்புகளும் நடத்திய போராட்டங்களால் அவர்களை எதிர்கொள்ள முயன்றார் சகாயம். சகாயத்தின் மீது பற்றுக் கொண்ட மக்கள் தன்னெழுச்சியாக நடத்தியவை இப்போராட்டங்கள் என்றும் சகாயமே திட்டமிட்டு அவர்களைத் தூண்டிவிட்டார் எனவும் இரண்டு வகையாகச் சொல்லப்படுகின்றன. அவரே தூண்டியிருந்தாலும் தவறல்ல என்றே நினைக்கிறேன். கிராம நிர்வாக அலுவலர்களோடான முரண்பாடு கடைசிவரை முடிவுக்கு வரவில்லை. அதை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டியது அரசுதான். ஆனால் அரசு இந்த முரண்பாட்டை ரசித்தது, ஊக்குவித்தது. சகாயத்திற்கு ஆதரவாக அரசு தரப்பிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. 

ஊடகங்களோடு சகாயம் நல்ல உறவைக் கொண்டிருந்தார். பத்திரிகைகள் அவர் செயல்களைப் பற்றித் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. அதைப் படிக்க மக்கள் விரும்பினார்கள் என்பதும் அதற்குக் காரணம். ஊடகங்களைச் சமாளிக்கும் அவர் உள்ளூர் அரசியல்வாதிகளை எப்படிச் சமாளிக்கிறார் என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. இத்தகைய அதிகாரிகளை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சகித்துக்கொள்ளக்கூட அரசியல்வாதிகள் தயாராக இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளோடு முரண்பாடு வெடித்துப் பெரிதாகும் என நினைத்தேன். 

நல்ல அதிகாரிகளுக்கு நேர்ந்தது அதுதான். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்து பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்தியவரும் பின் ஈரோடு மாவட்ட ஆட்சியராகிச் சாயப் பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டவருமான த.உதயச்சந்திரன் அவர்களுக்கு நேர்ந்தது அதுதான். பயிற்சிக்குச் சென்றிருந்த காலத்தில் அவரை ஈரோட்டிலிருந்து மாற்றம் செய்தார்கள். சகாயமும் பயிற்சியில் இருந்தபோது மாற்றப்பட்டார். மாவட்டத்தில் இருக்கும்போது மாற்றியிருந்தால் அவருக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி பெருகும் என்பதைக் கணித்து அரசு அப்படிச் செய்தது. மக்களிடம் அதிகாரிகள் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கருத்தாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள். 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழகச் சட்டமன்றத் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. அவரோடு ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே சகாயம் மாற்றப்பட்டார். சமத்துவபுர வீடு ஒதுக்கல், சத்துணவுப் பணியாளர் நியமனம் ஆகியவற்றில் சகாயம் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் முரண்பாட்டுக்குக் காரணம். யார் மீதும் எந்த வரையறையும் இன்றிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவார்கள் அரசியல்வாதிகள் என்பதற்கு வி.பி.துரைசாமி நல்ல உதாரணம். பதினான்கு பவர் புரோக்கர்களைக் கைவசம் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தைச் சீர்குலைத்தாராம் சகாயம். ‘கிராமத்தில் தங்குவோம்’ நிகழ்ச்சிக்காக ஐம்பது பேரை அழைத்துக்கொண்டு போய்த் தங்குவதற்குப் புதுவீடு  வேண்டும், ஏசி வேண்டும் எனக் கேட்டாராம் சகாயம். அதனால் முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் சொல்வது தன் கடமை என நினைத்து அதைச் செய்தாராம். 

இந்தக் குற்றச்சாட்டுக்களை நாமக்கல் மாவட்டத்துக் கைக்குழந்தைகூட நம்பாது. அவர் சென்று தங்கிய கிராமத்து மக்களிடம் சென்று விசாரித்தால் தெரியும். ‘அவரு மவராசன்’ என்பார்கள். வாக்குக் கேட்க மட்டுமே கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் அந்த உணர்வுப்பூர்வமான வாழ்த்து எங்கே புரியும்? சகாயத்தின் மாற்றலைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திப் பல அமைப்புகள் போராடின. அப்படிப் போராடியவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது. வழக்குகள் போட்டுச் சிறையிலடைத்தது. போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவந்து விட்டாலும் சகாயத்தின்மீதான அபிமானத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

‘இயற்கையைப் பாதுகாப்போம், லஞ்ச ஊழலை ஒழிப்போம்’ என்பவற்றை முழக்கமாகக் கொண்டிருக்கும் ‘அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு’ ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகளை அச்சிட்டு ராசிபுரம் தொகுதி முழுக்க இப்போது விநியோகித்துக் கொண்டிருக்கிறது. ‘ராசிபுரம் திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமியை தோற்கடிக்க வேண்டும் ஏன்?’ என்னும் தலைப்பிலான அத்துண்டறிக்கை இப்படி முடிகிறது:

 மாவட்ட ஆட்சித் தலைவர் உ.சகாயம் அவர்களை பணிமாற்றம் செய்தும் லஞ்ச ஊழலை எதிர்த்து போராடி வந்த விவசாயிகளை சிறையிலடைத்தும் லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டு  எண்ணற்ற அக்கிரமங்களை செய்து வரும் வி.பி.துரைசாமியை தோற்கடிப்போம்.

இரண்டே கால் ஆண்டுகள் இங்கு ஆட்சியராக இருந்த சகாயம் இங்கிருந்து மாற்றலாகிச் சென்று ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒற்றைச் சக்தியாக இருக்கிறார் என்பது உண்மை.  நாமக்கல் மாவட்டத்தில் திமுக வெற்றி பெறுமானால் அதற்குச் சகாயம் நடைமுறைப்படுத்திய  நலத் திட்டங்களே காரணமாகும். தோல்வி அடையுமானால் சகாயம் என்னும் நேர்மையான அதிகாரி மீது நாமக்கல் மாவட்ட மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பே காரணமாகும்.
                                                                      -------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக