வியாழன், 14 ஏப்ரல், 2011

ஐந்து முறை தமிழக முதல்வராக.....

ஐந்து முறை தமிழக முதல்வராகவும், மூன்று முறை, மத்திய பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலும் அங்கம் வகித்த கருணாநிதி, தன் ஆட்சியில், தமிழகத்தின் முக்கிய ஜீவாதாரப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றுக்காவது, நிரந்தர தீர்வைக் கண்டாரா? நாற்பது லட்சம் விவசாயிகளின் வாழ் வாதாரமான அகன்ற காவிரி, நதிநீர் பிரச்னையால் இன்று வறண்ட காவிரியானது. ஒவ்வொறு ஆண்டும், ஜூன் 12ம் தேதி, விவசாயத்திற்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை, கடந்த பல ஆண்டுகளாக, அத்தேதியில் திறக்கப்படவில்லை. அடுத்து, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, பாம்பனாறு; ஆந்திராவுடன் பாலாற்றில் பிரச்னை. இலங்கை கடற்படையினர், நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்தி, கொன்று, வலைகளை அறுத்து, கடலில் வீசி அட்டகாசம் செய்கின்றனர். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் விலைவாசி பற்றி சொல்லவே தேவையில்லை. இவ்வாறு, தமிழகத்தின் அனைத்து தரப்பினரும், ஏதாவது ஒரு வகையில், தி.மு.க., ஆட்சியால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் ஏதாவது ஒரு பிரச்னையைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட மற்றும் மாநில முதல்வர்களுடன் பேசி, தீர்வு ஏற்பட, முதல்வர் கருணாநிதி முயற்சி செய்ததுண்டா? "உளியின் ஓசை, இளைஞன், பொன்னர் சங்கர்' என, திரைபடங்களுக்கு கதை வசனம் எழுதுவதற்கே, இவருக்கு நேரம் போதவில்லை. தன் குடும்ப வாரிசுகளுக்கு, மத்தியில் பதவி கிடைக்க, நாள் கணக்கில் டில்லியில் முகாமிட்டுப் பெற்றது தான் இவரது சாதனை! கடந்த ஐந்து ஆண்டுகளில், மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும், எத்தனை மாதங்களில் அல்லது ஆண்டுகளில் இந்த மின்வெட்டு சரியாகும் போன்ற எந்த விவரமும் தெரியாத ஒரு மின்துறை அமைச்சர் இருக்கிறார் என்றால், அது தமிழக மின்சார அமைச்சர், ஆற்காடு வீராசாமி தான்! இவ்வாறு, தமிழகத்தை, இலவசங்களிலும், இருளிலும், சாராயத்திலும் மூழ்கடித்துவிட்டு, தன் குடும்பத்தை மட்டும், அம்பானிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளார் கருணாநிதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக